ஆகஸ்ட் 28, 2024 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொழில் மற்றும் கல்லூரி ஆலோசனை (IC3 – International Career & College Counselling) மாநாடு மற்றும் கண்காட்சியின்போது, “மாணவர் தற்கொலைகள்: இந்தியாவில் பரவும் தொற்றுநோய்” (Student Suicides: An Epidemic Sweeping India ) என்கிற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau) தரவுகளின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் மாணவர்கள் தற்கொலைகள் அதிகரித்துவருவது குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
படிக்க : அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்
கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் நிகழும் தற்கொலைகள் ஆண்டுதோறும் இரண்டு சதவிகிதம் அதிகரித்துவரும் நிலையில், மாணவர் தற்கொலைகள் மட்டுமே 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் 53 சதவிகிதம் ஆண்களாவர். 2021-2022-ஆம் ஆண்டில் ஆண் மாணவர்களின் தற்கொலைகள் ஆறு சதவிகிதம் குறைந்துள்ளது, எனினும் தற்கொலை செய்துகொள்ளும் பெண் மாணவிகளின் எண்ணிக்கை ஏழு சதவிகிதம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆண் மாணவர்களின் தற்கொலைகள் 50 சதவிகிதமும் பெண் மாணவிகளின் தற்கொலைகள் 61 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
மேலும், ஸ்டுடென்ட்ச் நிலையில், 24 வயதுடைய மாணவர்களின் எண்ணிக்கை 5.82 கோடியிலிருந்து 5.81 கோடியாக சரிந்துள்ளது.
குறிப்பாக, தேசிய அளவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தற்கொலைகள் மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே நடைபெறுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த தற்கொலையில் 29 சதவிகிதம் இந்தியாவின் தெற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலேயே நிகழ்கின்றன. மிகவும் போட்டிநிறைந்த கல்விச்சூழலையும் கொடூரமான கோட்டா பயிற்சி மையங்களையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலமே இந்த பட்டியலில் 10-வது இடத்தில்தான் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ஆய்வறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் 1,764 தற்கொலைகளும் (14 சதவிகிதம்), தமிழ்நாட்டில் 1,416 தற்கொலைகளும் (11 சதவிகிதம்) மத்தியப்பிரதேசத்தில் 1,340 தற்கொலைகளும் (10 சதவிகிதம்), உத்தரப்பிரதேசத்தில் 1,060 தற்கொலைகளும் (8 சதவிகிதம்) மற்றும் ஜார்கண்டில் 824 தற்கொலைகளும் (6 சதவிகிதம்) நடைபெற்றுள்ளன.
இந்தியாவில் தரவுகளை சேகரிக்க முறையான அமைப்பு இல்லாததால் ஆய்வறிக்கை தயாரிக்க போதிய அளவில் தரவுகள் இல்லை என்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளில் நம்பகத்தன்மை குறைந்திருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. அதிலும், திருநங்கைகள் குறித்த தரவுகள் பராமரிப்பு இன்னும் மோசமான நிலையில் உள்ளது என அறிக்கை கூறுகிறது. சர்வதேச தொழில் மற்றும் கல்லூரி ஆலோசனை அமைப்பின் நிறுவனரான கணேஷ் கோலி கூறுகையில், நமது கல்விக் கட்டமைப்பில் நிலவும் மனநலப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உடனடி தேவையை இந்த ஆய்வறிக்கை உணர்த்துவதாக தெரிவித்தார்.
நம் நாட்டில் நிலவும் கல்விக் கட்டமைப்பு கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக சேவை செய்வதற்கு தேவையானவற்றை கற்பிக்கிறதே தவிர, மாணவர் நலனை மையப்படுத்தி அவர்களின் அறிவு மற்றும் ஆளுமைத்திறன்களை வளர்த்து சமூகவளர்ச்சிக்கு பங்காற்றும் வகையில் நமது கல்விமுறை இல்லை.
படிக்க : வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மீள்பதிவு
மேலும், நீட் போன்ற போட்டித்தேர்வுகள், அவற்றின் மூலம் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கும் பயிற்சி மையங்கள், தேர்வுகளில் நடக்கும் மோசடி, ஊழல் மற்றும் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதை கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்துவிட்டு அரசு விலகிக்கொள்ளுதல் என்று பல வகைகளில் கல்வித்துறை கார்ப்பரேட்மயமாக்கப்படுவதால் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக்கப்படுகிறது. இவை ஆண்டுதோறும் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துவருவதற்கான முக்கிய காரணங்களாகும்.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய சக்தியாக இருக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அமைப்பாய் ஒன்றுதிரண்டு ஜனநாயக சக்திகளுடன் கைக்கோர்த்து கல்வித்துறையில் புகுத்தப்படும் கார்ப்பரேட்மயத்தை எதிர்த்துக் குரலெழுப்பும்போது தான் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கமுடியும்.
ஜென்னி லீ