பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!

“மீண்டும் எமது நிலத்தைக் கையகப்படுத்துவது குறித்து ஏதேனும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டால் நாங்கள் அனைவரும் தற்கொலைச் செய்து கொள்வோம். அதற்கு மாவட்ட நிர்வாகமும், திமுக அரசுமே பொறுப்பு என்று ஏகனா புரம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காகச்
சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!

காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை அழித்துவிட்டு இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க, கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணையை வெளியிட்டது மு.க.ஸ்டாலின் அரசு. அரசாணை வெளியானதிலிருந்து இன்று வரை அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் “விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைக்காதே!” என்று தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

நிலத்தைக் கையகப்படுத்துவதை அரசு நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டைவிட்டு வெளியேறி, அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் செல்வோம் என்று கூறியிருந்தனர் போராடும் விவசாயிகள் கிராம மக்கள். எனினும் மக்கள் கோரிக்கைகளைப் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று ஏகனா புரம் கிராமத்தில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம். ஆகஸ்ட் 30 இரவே ஏகனா புரம் கிராம மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

படிக்க : “அபராஜிதா” மசோதா: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவா? தப்பிக்கவைக்கவா?

இந்நிலையில், “எவன் செத்தால் எனக்கென்ன? என்று மக்கள் போராட்டத்தைத் துச்சமாகக் கருதி, ஏகனா புரம் கிராம மக்களை மீள் குடியேற்றுவதற்கான இடம் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளது திமுக அரசு. காஞ்சிபுரம் மற்றும் திருபெரும்பதூர் பகுதிகளில் உள்ள சுமார் 1000 குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்ய 245 ஏக்கர் பரப்பளவில் 4 இடங்களைத் தேர்வு செய்து வருகிறது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ). மேலும், மீள் குடியேற்றத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான மேலாண்மை ஆலோசகரை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் டிட்கோ வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட செயல்பாடுகளின் மூலம், கார்ப்பரேட் சேவைக்காகத் தனது சொந்த மாநில மக்களை அவர்களது சொந்த ஊரிலிருந்து விரட்டியடித்து அவர்களைச் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்க எத்தனித்து விட்டது திமுக அரசு என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

படிக்க : எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் பறிமுதல்: மாணவர்களை சீரழிப்பது யார்?

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து 700 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் 20 கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு விவசாயிகள், உழைக்கும் மக்கள் ஜனநாயக சக்திகள் களமிறங்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

இன்குலாப்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க