முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் - வள்ளுவர் கோட்ட உரைகள் - படங்கள்

பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்

-

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் கொலைகளை நிறுத்து !
– கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !” – 22/12/2016 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியில் முழங்கிய ஓவியங்கள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தின.

valluvarkottam_protest_prpc4ஆர்ப்பாட்டத்தில் திரு.த.வெள்ளையன் , தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை , தோழர் தியாகு, ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம், பேராசிரியர் சிவக்குமார், தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தோழர் வெங்கடேசன், மாநில பொருளாளர், மக்கள் கலை இலக்கிய கழகம், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி, தோழர் A.S.குமார், மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ (மா.லெ) விடுதலை, தோழர் மா.சி.சுதேஷ் குமார், மாநில இணைச்செயலர், புதிய ஜனநாயகத்-தொழிலாளர் முன்னணி, திரு.இரா.சங்கரசுப்பு, மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் பார்வேந்தன் மாநிலசெயலாளர், வழக்கறிஞர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

***

தோழர் வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

“சாதாரண  மக்களுக்கு தான் சட்டம் எல்லாம்! கார்ப்பரேட்டுகளுக்கு, ஆர்.எஸ்.எஸ்.- க்கு, மோடிக்கு எந்த சட்டமுமில்லை!”

“மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.  இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது!  தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.

சமீபத்தில் மூன்று இடங்களில் போலி மோதல் படுகொலைகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் போபாலில் 8 முசுலீம்களை சுட்டுகொன்றிருக்கிறார்கள்.  ஒரிசா – ஆந்திரா எல்லை பகுதியில் மல்கான்கிரியில் பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் என 44 பேரையும், கேரளாவில் நிலாம்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 3 பேரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

மல்கான்கிரியில் மாவோயிஸ்டுகள் கூட்டம் ஒன்றை நடத்திய பொழுது, அவர்களுக்கு கொண்டு சென்ற சாப்பாட்டில் மயக்க மருந்தையும், விசத்தையும் வைத்து அனுப்பியிருக்கிறார்கள்.  அரை மயக்கத்தில் இருந்த பலரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.  சரணடைந்த பலரையும் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள்.  மனித உரிமை அமைப்புகள் அங்கு சென்று பார்த்த பொழுது மோதல் நடந்ததற்கான எந்தவித சுவடும் இல்லை.  உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சொன்ன எந்த வழிகாட்டல்களையும் போலீசும், அரசும் மதிப்பதேயில்லை.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பகுத்தறிவாளர்கள் கல்புர்கி, பன்சாரே, நரேந்திர தபோல்கர் மூவரையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுட்டுக்கொன்றனர்.  மூவரையும் சுட்டது ஒரே வகை துப்பாக்கி தான் என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையுமில்லை.

தோழர்.வாஞ்சிநாதன்
தோழர்.வாஞ்சிநாதன்

மாவோயிஸ்டுகள், பழங்குடிகள் மீது நடவடிக்கைக்கு காரணம் என்ன?  500 மில்லியன் டன் பாக்சைட் என 28 வகை கனிம வளங்கள் காடுகளில் இருக்கின்றன.  இதை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க பழங்குடிகளும் மாவோயிஸ்டுகள் தடையாக இருக்கிறார்கள்.  எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்ட முன்பு மன்மோகன் சிங்கும், இப்பொழுது மோடியும் முனைப்புடன் இருக்கிறார்கள். 2014 மிஷன் என திட்டமிட்டு, 2 லட்சம் துணை இராணுவ துருப்புகளை காடுகளில்  நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

இதற்கு தடையாக இருக்கும் எவரையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை.  சமீபத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நந்தினி சுந்தர் என்ற பேராசிரியர் உண்மை அறியும் குழுவாக அந்த பகுதிக்கு சென்றதால்,  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மருத்துவர் பினாயக் சென் மீது தேசதுரோக வழக்கு. ஆயுள் தண்டனை விதித்தார்கள். உலகம் முழுவதிலும் கண்டனங்கள் எழுந்த பிறகு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

சல்வா ஜூடும் என்ற சட்ட விரோதமாக ஒரு படையை உருவாக்கி, 200 பழங்குடி கிராமங்களை கொளுத்தினார்கள்.  பலரையும் கொன்றார்கள்.  உச்சநீதிமன்றம் அந்த படையை தடை செய்தது.  இப்பொழுது வேறு ஒரு பெயரில் ஒரு படையை உருவாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்டு என போலீசு எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? 16 பழங்குடி மக்களை மாவோயிஸ்டு என சுட்டுகொன்ற சமயத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் அந்த பகுதிக்கு சென்றிருந்த பொழுது அவருக்கு பதில் சொல்லும் பொழுது ”வெளியிலிருந்து கிடைக்ககூடிய  டெட்டாலும், மலேரியா மருந்தும் வைத்திருந்ததால் மாவோயிஸ்டு” என்றார் மாவட்ட எஸ்.பி.

Speakersஒருவர் மாவோயிஸ்டாக இருந்தாலே கைது செய்யமுடியாது. குற்றம் செய்தால் மட்டுமே கைது செய்யமுடியும். ஏதும் குற்றம் செய்யாமல் கைது செய்யப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என சமீபத்தில் கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  இவைகள் எதையும் மதிக்காமல் எதிர்ப்பவர்களை சுடு என்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது என நாம் நம்ப முடியுமா?

1993-2009 வரைக்குமான காலத்தில் 2560 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன.  அதில் 1280 கொலைகள் போலி மோதல் கொலைகள் என விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்.  85% வழக்குகள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.  இதில் இஷ்ரத் சஹான் வழக்கும், மாவோயிஸ்டு மத்திய குழு உறுப்பினர் தோழர் ஆசாத் வழக்கும் அடங்கும்.  மணிப்பூரில் 1528 மோதல்கொலைகள் என படுகொலைகள் செய்திருக்கிறார்கள்.  இதுவரை ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை.

பிறகு என்ன சட்டம்? நீதிமன்றம்? நீதி? சாதாரண  மக்களுக்கு தான் சட்டம் எல்லாம்!  கார்ப்பரேட்டுகளுக்கு பார்ப்பனிய தாசர்களான ஆர்.எஸ்.எஸ். மோடி யாருக்கும் எந்த சட்டமுமில்லை.  இதைத் தான் நெருக்கடி நிலை என்கிறோம்.  இதை எதிர்த்து தான் நாட்டில் பல மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நமது போராட்டமும் அதில் ஒன்று தான். போராடும் மக்களோடு ஜனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் என அணிதிரண்டு போராடுவதின் மூலம் தான் பழங்குடி மக்களையும், மற்றவர்களையும், இயற்கை வளங்களையும் காக்கமுடியும்.

***

திரு. கோ. பாவேந்தன், வழக்கறிஞர்,
தமிழக மக்கள் முன்னணி.

”கொலைகாரர்கள் ஆட்சி செய்கிறார்கள். மக்களை காக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கிறார்கள்”

தோழர். பாவேந்தன்
திரு. கோ. பாவேந்தன்

”கொலைகாரர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர். குஜராத்தில் 3000 முசுலீம்களை கொன்று குவித்த கொலைகார மோடி தான் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.  பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொலை தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த கொலைகாரர்கள் தான், மண்ணையையும், மலையையும், மக்களையும் காக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கிறார்கள்.

நீதி கெட்ட சமயத்தில் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.  இது ஜனநாயக நாடா என மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது  ஜனநாயக நாடும் இல்லை. சட்டத்தின் ஆட்சியும் இல்லை. மக்களின் உரிமைகளுக்காக போராடும் பழங்குடிகளை, மாவோயிஸ்டுகளை, இஸ்லாமிய இளைஞர்களை கொன்று குவித்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றிணைந்து மக்களை ஒன்று திரட்டி போராடினால் தான் இந்த பயங்கரவாதிகளை முறியடிக்கமுடியும்”

***

திரு. த. வெள்ளையன், தலைவர்,
வணிகர் சங்கங்களின் பேரவைகள், தமிழ்நாடு.

மக்களுக்கு எதிரான மோடி அரசை நாம் முறியடித்தே தீரவேண்டும்.
அதற்காக எந்தவித தியாகத்தையும்  செய்ய நாம் தயாராக இருக்கவேண்டும்

Vellaiyan
வெள்ளையன்

“கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகின்றன.  இந்திய சந்தை மிகப்பெரிய சந்தை.  சில்லறை வணிகத்தை ஒழித்து, பன்னாட்டு நிறுவனங்களை வாழவைக்க தான் மோடி 500, 1000 செல்லாது ! கார்டை பயன்படுத்துங்கள் ! என்கிறார். வணிகர்கள் இந்த சதியை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்.

‘தன்னை அழிக்க நினைப்பவர்களை நாம் அழிக்க தயங்க கூடாது” இதை சொன்னது மாவோயிஸ்டா? இல்லை. விவேகானந்தர். மகாபாராதத்தில் திரெளபதி அனைவரும் முன்னிலும் துகிலுரியப்படும் பொழுது, என்ன செய்ய? என்ன செய்ய? என கையை பிசைந்து புலம்பி கொண்டிருந்தார்கள்.  அதே போல தான் இங்குள்ள அரசியல் தலைவர்களும் தங்களது கையாலாகத்தனத்தால் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். மோடியின் திட்டங்களை முறியடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக்கவேண்டும்.

***

பேராசிரியர் சிவக்குமார், முன்னாள் முதல்வர்,
குடியாத்தம் அரசு கல்லூரி.

ஒடுக்குமுறை சட்டங்களாலும், போலிமோதல் படுகொலைகள் மூலம் எதிர்ப்பை அடக்க முயற்சிக்கிறார்கள். நாம் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.”

Pr_sivakumar
பேராசிரியர் சிவக்குமார்

“ தோழர்கள் பாலன், ரவீந்திரன் என தொடர்ச்சியாக போலிமோதல் படுகொலைகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தோழர்களின் உடலை தர மறுக்கும் அரசாங்கத்திடமிருந்து உடலை பெறவும், உண்மை அறியும் குழுவிலும் நான் மனித உரிமை அமைப்புகளுடன் சென்றுள்ளேன்.

கனிம வளங்களுக்காகவும், பல்வேறு திட்டங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகிற செய்தியை இந்திய அரசின் வலைத்தளத்திலேயே நாம் பார்க்கமுடியும். வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தரப்படுகின்றன.

நாடு முழுவதும் இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காடுகளில் போராடும் பழங்குடி மக்களை, மாவோயிஸ்டுகளை ஒருங்கிணைக்கிறார்கள். நாடு முழுவதும் பல ஒடுக்குமுறை சட்டங்கள் மூலம், போலிமோதல் படுகொலைகள் மூலம் எதிர்ப்பை அடக்க முயற்சிக்கிறார்கள். நாம் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். மாணவர் சக்தியையும், இளைஞர் சக்தியையும் நாம் திரட்டுவோம். கொல்லப்பட்ட தோழர்கள் குப்புராஜ், அஜிதா தியாகத்தை மனதில் கொண்டு நாம் ஒன்றிணைந்து போராடுவோம் !

***

தோழர் சுதேஷ்குமார், மாநில இணைச் செயலாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

“சட்டத்தின் ஆட்சியா இங்கு நடக்கிறது? போராடி பெற்ற உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளர்கள் இதை ஏற்கவே மாட்டார்கள்”

valluvarkottam_protest_prpc“பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் பழங்குடி மக்களையும், போராளிகளையும்  போலி மோதல் படுகொலைகளை மூலம் கொன்று குவிக்கிறார்கள். குழந்தைகள் என்று கூட பார்ப்பதில்லை.  அரச பயங்கரவாதம் இது !

சட்டத்தின் ஆட்சி அதை கேள்விக்குள்ளாவதை பொறுக்கமுடியாது என்கிறார்கள்.  மாருதி தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கியது தவறு என்றது உச்சநீதிமன்றம்.  கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக 10 ஆண்டுகாலம் போராடி, இப்பொழுது இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாடுகிறார்கள்.  போராடி பெற்ற தொழிலாளர் நல சட்ட உரிமைகளை எல்லாம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது?

நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மார்க்சிய லெனினிய கொள்கைகளை மக்களுக்கு பயிற்றுவிக்கவேண்டும். போராடுவதை தவிர வேறு வழியில்ல

***

தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

“நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல. மூலதனத்தின் ஆட்சி”

ComGanesan
தோழர் கணேசன்

“பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு விசுவாசமான மத்திய, மாநில அரசுகளை, காடுகளில் பழங்குடி மக்களை காலி செய்து கொடு ! என விரட்டுகிறார்கள்.  காங்கிரசை விட வேகமாக நிறைவேற்ற துடிக்கிறது மோடி அரசு !  கார்ப்பரேட்டுகள் அரச படைகளை மட்டும் நம்புவதில்லை.  தங்களுக்கென்று கூலிப்படையை வைத்திருக்கிறார்கள். போராடும் பழங்குடி மக்களில் உள்ள முன்னணியாளர்களை கொலை செய்கிறார்கள். அரசு போராடும் பழங்குடி மக்களை, மாவோயிஸ்டுகளை கொல்கிறார்கள். நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல ! மூலதனத்தின் ஆட்சி. ஒடுக்கப்படும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றுதிரட்டி போராடி முறியடிக்கவேண்டும்.

– உரைகள் தொடரும்

***

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
கனிமவள கொள்ளைக்காக
பார்ப்பனிய மேலாண்மைக்காய்
படுகொலைகள் செய்கின்ற
மோடி அரசை கண்டிக்கின்றோம்
படுகொலைக்கு துணைபோகும்
கேரள அரசை கண்டிக்கின்றோம் !

Muzakkamபடுகொலை ! படுகொலை !
மனித உரிமைப் படுகொலை !
மல்கான்கிரியில், நீலாம்பூரில்
போபாலில் படுகொலை !
அப்பாவிகள் படுகொலை !
கார்ப்பரேட்  கொள்ளைக்காக
அப்பாவிகள் படுகொலை !

சுடலாமா? சுடலாமா?
மாவோயிஸ்ட் என்றால் சுடலாமா?
சிமி என்றால் சுடலாமா?
யாரையும் சுடலாம் என்றால்
அரசியல் சட்டம் எதற்கு?
நீதிமன்றம் எதற்கு?

மோடியின் ஆட்சியிலே
பா.ஜ.கா ஆட்சியிலே
சட்டத்தின் ஆட்சி எங்கே ?
ஜனநாயகத்தின் வாசம் எங்கே?
துப்பாக்கிதான் ஆளுமென்றால்,
போலிசும் – கோர்ட்டும்  தான்
எதற்கு ? எதற்கு ?

இது சட்டத்தின் ஆட்சி இல்லை
இது கார்ப்பரேட் கைக்கூலிகளின்
பார்ப்பனிய வர்னாசிரமத்தை நிலைநாட்டும்  ஆட்சி !

கொல்லாதே கொல்லாதே !
பன்னாட்டு கம்பெனிகளின்
கனிமவள கொள்ளைக்காக
பழங்குடி மக்களையும்
கம்யூனிச போராளிகளையும்
கொல்லாதே கொல்லாதே !

valluvarkottam_protest_prpc2படுகொலைகள் படுகொலைகள்
மல்கான்கிரியில், மலப்புரத்தில்
போபாலில் நடந்தவை எல்லாமே
திட்டமிட்ட படுகொலைகள் !

பயங்கரவாதம், பயங்கரவாதம்
கார்ப்பரேட் நலனுக்காக
இது அரசே நடத்தும் பயங்கரவாதம்
அரச பயங்கரவாதம் !

கொள்ளை போகுது! கொள்ளை போகுது!
நாட்டின் வளங்கள் கொள்ளை போகுது!
ஆறு, மலை, காடுகள்
கொள்ளை போகுது! கொள்ளை போகுது!

விக்கிறான் விக்கிறான் !
லட்சம் ஆண்டாய் பூமித்தாயின்
கருவில் வளர்ந்த இயற்கை கொடையை
நாசகார முதலைகளாம்
பன்னாட்டு கம்பெனிக்கு
கூறு போட்டு விக்கிறான் !

மண்ணை காக்க, மலையை காக்க,
போராடும் மக்களை
பயங்கரவாதி என்கிறான் !

உண்மையை மூடிமறைத்து
என்கவுண்டரில் கொல்லுறான்!

கார்ப்பரேட் பயங்கரவாதிகள்
மிட்டலுக்கும் ஜிண்டாலுக்கும்
அம்பானிக்கும் வேதாந்தாவிற்கும்
சிவப்பு கம்பள வரவேற்பு!
எம் மக்களுக்காக போராடிய
போராளிகளுக்கு என்கவுண்டர்!

valluvarkottam_protest_prpc3பன்னாட்டு கம்பெனிகளின்
கனிமவள கொள்ளையை
எதிர்த்து நின்று போராடினால்
பயங்கராவதி பட்டமா ?

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
கருவில் உள்ள முஸ்லீம் குழந்தையை
பச்சை சிசுவை கொன்றானே
மோடியும்-ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள்

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
நரேந்திர தபோல்கர்
கல்புர்கி – பன்சாரே
பகுத்தறிவுச் சான்றோர்களை
கொன்றானே கொன்றானே
காவிக் கும்பலும் – ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள்

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
முஸ்லீம் முதியவர் அக்லக்-கை
மாட்டுக் கறி வைத்திருந்தார்  என்று
குற்றம் சாட்டி கொண்றானே
வானரக் கூட்டமும்-ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் !

கைக்கூலிகள் கைக்கூலிகள் !
B.J.P யும்  RSS உம்
பன்னாட்டு கம்பெனிகளின்
கைக்கூலிகள் கைக்கூலிகள் !

போராளிகள் போராளிகள் !
அஜிதாவும், தேவராஜீம்

valluvarkottam_protest_prpc5மாவோயிஸ்டும் பழங்குடி மக்களும் !
இம் மண்ணைக் காக்க
போராடிய
போராளிகள் போராளிகள் !

போரை நிறுத்து போரை நிறுத்து !
உள்நாட்டு மக்கள் மீது

இசுலாமிய மக்கள் மீது
நடத்துகின்ற போரை நிறுத்து !

ஒடுக்காதே ஒடுக்காதே
கார்ப்பரேட் கைக்கூலி அரசின்
உண்மை முகத்தை அம்பலப்படுத்தும்
மனித உரிமைப் போராளிகளை
ஒடுக்காதே ஒடுக்காதே !

கைகோர்ப்போம் கைகோர்ப்போம் !
கனிமவள கொள்ளையை
எதிர்த்து நின்று போரிடும்
தேசபக்த போராட்டத்தில்
கைகோர்ப்போம் கைகோர்ப்போம் !

***

ஆர்ப்பாட்டத்தில்  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்  சார்பில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓவியம் : முகிலன்

ஒருங்கிணைப்பு:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC),
சென்னை.
தொடர்புக்கு : 90946 66320

மக்கள் கலை இலக்கியக் கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க