Tuesday, December 10, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுபிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்

பிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பினரின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு ஜனநாயக விரோதமானது என்பதை ஸ்க்ரோல் இணையதளத்தில் சோஹிப் டேனியல் விவரிக்கிறார். அதன் தமிழாக்கம்.

-

ந்திய ஜனநாயகம் தனது சொந்த மக்களை எவ்வாறு கைவிட்டது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி நகரம். தங்களது பகுதியையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துவதாகக் கூறி, வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை  விரிவாக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 மாதங்களுக்கும் மேலாக அந்நகர மக்கள் போராடி வந்தனர். கடந்த மே 22, 23 ஆகிய தேதிகளில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது குறிபார்த்துச் சுடும் போலீசு

போலீசு, தூரத்திலிருந்து குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகளால் மக்களை சுட்டுத் தள்ளுவதை தொலைக்காட்சிகளில் காண முடிந்தது. தற்போதும் மாநில அரசு, நிலைமையை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக மேலதிகமான கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பின் 6 உறுப்பினர்கள் மீது கடந்த திங்கள் கிழமை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகித்துள்ளது.

குறிப்பிட்ட நபர்கள் தேசப் பாதுகாப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபடலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே அவர்களை தடுப்புக் காவலில் சிறைவைக்கலாம் என அரசு நிர்வாகத்திற்கு அனுமதிக்கிறது இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம்.  மேலும், இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு வழக்கறிஞரை சந்திப்பதற்கான வாய்ப்பை மறுப்பதோடு, நீதிமன்றத்தில் அவர்கள் தமது வாதத்தை முன் வைப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கிறது.

ஒருவேளை, கடந்த மே 22 அன்று நடைபெற்ற போராட்டத்தை யாரேனும் வன்முறைக்கு தள்ளியிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருந்தால், அத்தகைய நபர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்களது குறிப்பான செயல்பாட்டிற்கான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பின் 6 உறுப்பினர்களையும் 10 நாட்களுக்கு முன்பே பல்வேறு அடுக்கடுக்கான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறது போலீசு.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 (கலவரம் செய்தல்), பிரிவு 148 (பயங்கரமான ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்), பிரிவு 188 (பொதுப் பணியாளர்களால் முறையாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆணைகளுக்கு கீழ்படிய மறுத்தல்), பிரிவு 353 (தாக்குதல் மூலமாகவோ, குற்றச் செயல்கள் மூலமோ பொதுப் பணியாளர்களை தங்களது கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது), பிரிவு 436 (நெருப்பு மற்றும் வெடி பொருட்களைக் கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபடுவது), பிரிவு 506 (II) (சட்டவிரோதமாக மிரட்டுதல்) மற்றும் தமிழ்நாடு பொதுச்சொத்து பாதிப்பு மற்றும் இழப்பு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3,4 ஆகியவற்றின் கீழ் வழக்குகளைப் போட்டு குவித்துள்ளது.

இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் தடுப்புக் காவல் அதிகாரத்தை பயன்படுத்துவது என்பது நியாயமற்றது. ஒரு குடிமகனை முகாந்தரமின்றி கைது செய்வது ஜனநாயக அரசின் பண்பல்ல. மாறாக அது ஒரு சர்வாதிகார அரசின் பண்பு.

1919-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரவுலட் சட்டத்தை ஒட்டி அதற்கு இருந்த எதிர்ப்பையும், அதை கருப்புச் சட்டம் என்றும் குறிக்கும் நாளிதழ்

இந்தியாவின் தடுப்புக்காவல் சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் அரசின் ஆட்சிக் காலத்திய ‘ரவுலட்’ சட்டத்திலிருந்து வளர்ந்து வந்திருக்கின்றன. 1947-ல் நடைபெற்ற அதிகார மாற்றம், இதனை மாற்றி விடவில்லை. அதன் பின்னர், ஜவர்ஹர்லால் நேரு தடுப்புக்காவல் சட்டத்தை ஏற்படுத்தினார். பின்னர் தடுப்புக்காவல் சட்டம் என்பது, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக அவசரநிலை காலகட்டத்தின் போது அது பிரயோகிக்கப்பட்டது.

1980-ம் ஆண்டில் இந்திய ஒன்றிய அரசாங்கம், நவீன தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. அச்சட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு நபரை 12 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதித்தது. 1981-ம் ஆண்டு ”குடிமைச் சுதந்திரத்திற்கான மக்கள் ஒன்றியம்” (PUCL), இச்சட்டம் மாற்றுக் கருத்துக்களை நசுக்குவதற்கும், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரை ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது,

கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கடந்தும் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. தூத்துக்குடியைப் போலவே, தேசிய பாதுகாப்புச் சட்டம் கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் சந்திரசேகர ஆசாத் மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்புச் செயற்பாட்டாளர் அகில் கோகோய் ஆகியோருக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நன்றி: scroll
ஸ்க்ரோல்’ இணையதளத்தில் சோஹிப் டேனியல் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க