நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான இஸ்லாமியரல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டம் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்துகிறது, பிற அண்டை நாடுகளான இலங்கை, பர்மா ஆகியவற்றில் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களைப் பற்றி சட்டம் ஏதும் சொல்லவில்லை என்ற காரணத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.

ஆனால், அசாமில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணமே வேறு..

1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்தக் குடியேறிகளால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, 1971-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்கு முன்னதாக அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று, அதன் இறுதிப் பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தவர்கள் நினைத்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆக, பொதுவாக எதிர்க் கட்சிகள் காட்டும் எதிர்ப்பு என்பது குடியுரிமை வழங்குவதில் மதரீதியில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதற்காக. அசாமில் நிலவும் எதிர்ப்பு என்பது, யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என்பதற்காக.

இது முக்கியமான வேறுபாடு.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

1 மறுமொழி

  1. அசாமில் மக்கள் போராட்டம் மிக நியாயமானது. கடந்த 200 ஆண்டுகளாக வங்காளத்தில் இருந்து வந்த இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் ஆதிக்கத்தினால் அசாமியர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். இப்போது மாநில மக்கள் தொகையில் மண்ணின் மைந்தர்களின் விழுக்காடு 45க்கும் கீழே போய்விட்டது. மத்திய அரசின் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இன்னும் பலத்த இழப்பை அசாமியர்கள் சந்திப்பார்கள். அகதிகளுக்கு கருணையும் கரிசனையும் தேவைதான். ஆனால் தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க