நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
நாசி கட்சியின் (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’) தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’ என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக் கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வஸ்திக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

படிக்க :
♦ அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
♦ ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !

1920-களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற பெயரில் புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் இந்துத்துவ அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

படிக்க :
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !
♦ அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன்கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டு வரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’ என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்சனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாகப் பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

மு.வி.நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

disclaimer

7 மறுமொழிகள்

  1. உங்கள் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொல்வதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். உங்களின் நோக்கம் தவறு, உங்களின் இந்த கட்டுரையும் தவறு.

  2. அருமையான கட்டுரை. நீங்கள் கூறியுள்ளது போல் இந்நாட்டில் இருப்பது அருவருப்பாகவும் பதட்டமாகவும் உள்ளது.

  3. கட்டுரையாளர் இந்த விஷயத்திற்கு பதில் சொல்ல வேண்டும்.

    1 இந்த வருடம் பிப்ரவரி மாதம் பாக்கிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஷாம் சுந்தர் சேவா மண்டலி கோவிலுக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நுழைந்து அங்கே இருந்த கடவுள் சிலைகளை உடைத்து, பகவத் கீதை, குரு கிரந்த சாஹிப் புத்தகங்களை எரித்து அழித்தார்கள்.

    2 இந்த வருடம் மார்ச் மாதம் ரீனா ரவீனா என்ற இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து அவர்களை இஸ்லாமியருக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். சென்ற வருடம் தீபாவளிக்கு எங்களோடு விளையாடி கொண்டு இருந்த எங்கள் பிள்ளை இந்த வருடம் தீபாவளிக்கு இல்லை என்பது வேதனையாக இருக்கிறது என்று அந்த சிறுமிகளின் தந்தை சொல்லி இருக்கிறார். சிறுபான்மை இன மக்கள் பாகிஸ்தானில் படும் துன்பங்களை பற்றி டான் பத்திரிகை தலையங்கமும் எழுதி இருக்கிறது, எந்தளவுக்கு அரசாங்கமும், காவல்துறையும், நீதிமன்றமும் செயலற்று இருக்கிறது என்பதற்கு ரீனா ரவீனா என்ற சிறுமிகளின் கடத்தல் ஒரு ஆதாரம்.

    3 இந்த வருடம் ஜூன் மாதம் சோபன் குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் நடந்தது காரணம் அந்த குடும்பத்தினர், ஹிந்து குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னதால் அதை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். ஆனால் பாக்கிஸ்தான் காவல்துறை சோபன் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஹிந்துக்கள் மீது தடியடி நடத்தி இருக்கிறது.

    இந்த மூன்று விஷயங்களும் ஒரு சின்ன உதாரணம் தான். இப்போது வினவும், கம்யூனிஸ்ட்கள் என்று சொல்லி கொள்பவர்களும், இந்த கட்டுரை ஆசிரியரும் சொல்ல வேண்டிய விஷயம். பாகிஸ்தானில் ஹிந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வுளவு துன்பங்களை அனுபவிக்கும் ஹிந்துக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?

    இந்த கேள்விகளுக்கு உங்களை போன்றவர்கள் நேர்மையாக பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    1 இந்த துன்பங்களில் இருந்து தப்பித்து இந்தியா வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?

    2 இதற்கும் மோடி பற்றி ஹிட்லர் அது இது என்று கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பொய்களை அவதூறுகளை பரப்பும் உங்களின் இந்த செயல் சரியா ?

    3 ஏற்கனவே 4 லட்சம் இலங்கை அகதிகளுக்கு இந்தியா குடியுரிமை கொடுத்து இருக்கிறது… இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை என்று நீங்கள் பரப்பி வைத்து இருப்பது பச்சை பொய்.

    4 இந்தளவுக்கு நேர்மையில்லாமல் பொய்களையும் அவதூறுகளையும் எங்கள் நாட்டிற்கு எதிராக பரப்பி என்ன சாதிக்க போகிறீர்கள் ?

    • நீங்கள் இவ்வளவு சிரம பட வேண்டாம்… இந்தியாவிலேயே காஷ்மீர், வங்க தேசம் மற்றும் இசுலாமிய பெரும்பான்மை தொகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்த்தாலே போதும்.

      காஷ்மீர் மசூதி ஒலி பெருக்கிகளில் ஹிந்துக்களை ஊரை விட்டு வெளியேற சொல்லி, அங்கு வீடு வீடாக காஃபிர் களை கொன்று குவித்து, அவர்களிடம் இருந்து காப்பாற்ற தன் வீட்டு பெண்களை பெற்றோர்கள் அல்லது சகோதரர்களே கொல்லுமாறு ஆயிற்று.

      மீடியா என்றால் தேச விரோதமாக தான் செயல் படுவார்கள். 2014 ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாலும் 45 “இசுலாமிய தேசம்” இருப்பது போல ஒரு “இந்து தேசம்” கூட உலகில் வராது. .வரவும் வேண்டாம். இந்துக்கள் சுய மரியாதையோடு மட்டும் இருந்தால் போதும். அதற்கு பா ஜ க 20-30 வருடம் ஆட்சி புரிய வேண்டும்

  4. ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுகிட்டு தற்கொலை தானே பண்ணிக்கிட்டான் .. ? …. அடுத்த ஹிட்லர் கால சர்வாதிகாரி முசோலினி மக்கள் அடித்து கொன்று முச்சந்தியில் தூக்கில் தொங்க விட்டார்களா …? எப்போதோ வரலாற்றில் படித்தது …!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க