பாசிச இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது ஒரு வருடத்திற்கு மேலாக கொடூரத் தாக்குதல் நடத்தியதில் 11,825க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்றுள்ளதாகப் பாலஸ்தீன கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (29 அக்டோபர்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி காசாவில் 11,057 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டு 16,897 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று மேற்கு கரையில் 79 பள்ளி மாணவர்களும் 35 பல்கலைக்கழக மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் காசாவில் 441 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் 2,491 பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் மேற்கு கரையில் இரண்டு பள்ளி ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்;17 பேர் காயமடைந்துள்ளனர்.139 பாலஸ்தீன மக்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் 117 கல்வி ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலினால் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியதோடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற அதிர்ச்சிகரமான தகவலையும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் உள்ள 406 பள்ளிகளில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையால் (UNRWA) நடத்தப்பட்டு வரும் 65 பள்ளிகள் வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. மேலும் 77 பள்ளிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. மேற்கு கரையில் 84 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரண உதவியைத் தடுக்கும் பாசிச இஸ்ரேல் அரசு


மேலும் காசாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களும் 20 பல்கலைக்கழகங்களும் குறைந்த அளவில் சேதமடைந்துள்ளன. 20 பல்கலைக்கழகங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டும் 51 பல்கலைக்கழகங்கள் பகுதியளவில் அழிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே நடப்பு கல்வியாண்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படுவதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், காசாவில் உள்ள 88.000 பல்கலைக்கழக மாணவர்கள், 7 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதை அறிக்கை குறிப்பிடுகிறது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக காசாவில் கல்வியறிவு 98 % இருந்துள்ளது. தாக்குதல் தொடங்கிய பின்னர் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியினை வழங்குவதற்காக இணைய கற்றல் முறை மற்றும் கூடாரப் பள்ளிகளை அமைப்பதற்குக் கல்வி அமைச்சகம் போராடி வருகின்றது.

கல்வி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் பாசிச நடவடிக்கையை எதிர்த்து வலிமையான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க