இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட் (Knesset) அக்டோபர் 28 அன்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) இஸ்ரேலில் செயல்படத் தடைவிதிப்பதற்கான இரண்டு மசோதாக்களுக்கு 92 – 10 என்ற அதீதப் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
UNRWA அமைப்பானது பல ஆண்டுகளாக காசாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சில மனிதாபிமான உதவிகளைச் செய்து வரும் அமைப்பாகும்.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், UNRWA மூன்று மாதங்களுக்குள் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், UNRWA ஊழியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளுடனான தொடர்பை இழக்கவும் நேரிடும்.
இதனால், காசா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறையக்கூடும். காசா முழுவதையும் இஸ்ரேல் படைகள் கட்டுப்படுத்துவதால், இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளுக்கு உதவிப் பொருட்களை வழங்குவதற்கு UNRWA-வுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இஸ்ரேலில் உள்ள UNRWA பணியாளர்களுக்கான சட்டப்பாதுகாப்பு முடிவுக்கு வரும். மேலும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகமும் மூடப்படும்.
படிக்க: பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த ஐ.நா பள்ளியின் மீது குண்டு வீசும் பாசிச இஸ்ரேல்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் UNRWA தலைவர் பிலிப் லஸ்ஸரினி ஆகியோர் நெதன்யாகு அரசின் இந்த முடிவிற்கு தங்களது எதிர்ப்பினைப் பதிவுசெய்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள், இஸ்ரேலின் இந்த முடிவு குறித்து ‘வருத்தம்’ தெரிவித்துள்ளன.
“இது முற்றிலும் தவறான நடவடிக்கை” என பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். “இச்சட்டம் பாலதீனர்களுக்கு முக்கியமான UNRWA-வின் பணியைச் செய்வதைத் தடுக்கிறது. இதனால் காசாவில் நடக்கும் சர்வதேச மனிதாபிமான முயற்சிகளும் ஆபத்திற்கு உள்ளாகும்” என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறினார்.
“காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் UNRWA மிகவும் முக்கிய பங்காற்றிவருகிறது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. “இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.
காசாவில் உள்ள UNRWA ஊழியர்கள் ஹமாஸுடன் இணைந்து செயல்படுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துத்தான் பாசிச இஸ்ரேல் அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அக்டோபர் 7-ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் UNRWA-வின் 19 ஊழியர்கள் ஈடுபட்டதாகவும் இஸ்ரேல் குறிப்பிடுகிறது. ஆனால், தனது விரிவான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வழங்கவில்லை என்று ஐ.நா கூறியுள்ளது.
படிக்க: காசா: தஞ்சமடைந்த பள்ளியில் தாக்குதல் நடத்திய கொலைகார இஸ்ரேல்! | படக்கட்டுரை
பாலஸ்தீன மக்களுக்குக் குறைந்தபட்சமான மனிதாபிமான உதவிகள்கூட கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இனவெறியுடன் நெதன்யாகு அரசு இந்த இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை மேலும் தீவிரப்படுத்தப் போகிறது என்பதற்கான சமிக்ஞை.
இதை அறிந்திருந்த போதிலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்கள் தங்களது ‘வருத்தம்’ மற்றும் ‘கவலை’யை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இஸ்ரேலுக்கு எந்த நெருக்கடியையும் தர முன்வரவில்லை. இஸ்ரேலால் நடத்தப்படும் இந்த இனப்படுகொலைக்கு ஆயுதங்களை வழங்கிவரும் அவர்கள் எப்படி இஸ்ரேலுக்கு நெருக்கடி தருவார்கள்!
எனவே, அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச அளவில் நெருக்கடிகள் கொடுக்கப்பட வேண்டும். பரந்த அளவிலான மக்கள் போராட்டங்கள் மூலம் மட்டுமே அத்தகைய நிலைமையைத் தோற்றுவிக்க முடியும்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
இதில் மோடி அரசும் மௌனம் காக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை விட்டு விட்டீர்கள்.