பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த ஐ.நா பள்ளியின் மீது குண்டு வீசும் பாசிச இஸ்ரேல்

இஸ்ரேலிய படைகள் நான்கு வாரமாக முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்து வரும் ஜபாலியா மற்றும் வடக்கு காசாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தான் ஐ.நா. பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் என்று துணை மருத்துவ நிபுணர் ஹுசைன் மொஹ்சென் கூறினார்.

ஷாதி அகதிகள் முகாமில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமையால் (யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ) நடத்தப்படும் அஸ்மா பள்ளியை தாக்கிய இஸ்ரேல் இராணுவம்

க்டோபர் 27 அன்று இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா நகரின் ஷாதி (Shati) அகதிகள் முகாமில் உள்ள அஸ்மா பள்ளியில் (Asma School) நடந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர் என்று காசாவின் சிவில் பாதுகாப்பு படை (Civil Defence) அக்டோபர் 27 அன்று தெரிவித்துள்ளது. (சிவில் பாதுகாப்பு படை என்பது உள்துறை அமைச்சரின் நேரடி பொறுப்பின் கீழ் பாலஸ்தீனிய பாதுகாப்பு சேவைகளின் முக்கிய கிளைகளில் ஒன்றாகும்)

இது இப்பள்ளியின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதலாகும். முன்னதாக, அக்டோபர் 19 அன்று இப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கோரச் சம்பவம் குறித்து தாஹர் அல்-ரான்டிசி (Taher al-Rantisi) என்பவர் கூறுகையில், “ஒரு விமானம் கட்டிடத்தை அழித்ததைக் கண்டேன், அது மக்கள் மீது இடிந்து விழுந்தது. இந்த தாக்குதல் என்பது ஒரு படுகொலை” என்று கூறினார்.

“பள்ளிக் கட்டிடத்தில் தஞ்சம் புகுந்துள்ள பாலஸ்தீனியர்களில் அப்பாவி குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அடங்குவர். தாக்கப்பட்டபோது அனைத்து மக்களும் குழந்தைகளும் கிழித்தெறியப்பட்டனர்” என்று ரான்டிசி மேலும் கூறினார்.

ஒரு இளம் பெண் உட்பட ஆறு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குடிமை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய படைகள் நான்கு வாரமாக முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்து வரும் ஜபாலியா மற்றும் வடக்கு காசாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தான் ஐ.நா. பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் என்று துணை மருத்துவ நிபுணர் ஹுசைன் மொஹ்சென் (Hussein Mohsen) கூறினார். “இஸ்ரேல் பள்ளிகளைக் குறிவைப்பது இது முதல் முறை அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்திய மாதங்களில், இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனிய போராளிகள் செயல்படுவதாகக் கூறி, தங்குமிடங்களாக மாற்றப்பட்ட பல பள்ளிகள் மீது குண்டுகளை வீசியுள்ளது. ஆனால், இஸ்ரேல் தனது கூற்றிற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

சமீபத்திய நாட்களில், முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேலின் குண்டுவீச்சு காரணமாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். காசா மீதான இனப்படுகொலைப் போர் தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய படைகள் கிட்டத்தட்ட 43,000 பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் உட்படக் காயமடைந்தவர்கள் பலர் காசா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
காசா நகரின் ஷாதி அகதிகள் முகாமில் உள்ள அஸ்மா பள்ளியில் நடந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
ஒரு இளம் பெண் உட்பட ஆறு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடும் மக்கள்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க