மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

நாள் : 22.12.2019, ஞாயிறு, காலை 10.30 மணி.
இடம் : நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம். (சோகோ அறக்கட்டளை), கே.கே. நகர், மதுரை.

தலைமை :

பேராசிரியர் அ. சீநிவாசன்
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

கருத்தரங்க தலைப்பு :

அயோத்தி – காஷ்மீர் – சபரிமலை – தேசிய குடிமக்கள் பதிவேடு
பறிக்கப்படும் மனித உரிமைகள் தகர்க்கப்படும் அரசியல் சட்டம்.

கருத்தாளர்கள் :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

திரு ஆளூர் ஷாநவாஸ்
மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் தியாகு
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

நன்றியுரை :

திரு ம. லயனல் அந்தோணி ராஜ்
செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.

நூலரங்கம் :

கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.
தொடர்புக்கு : 73393 26807.

*****

Vinavu LIVE : தொழில்நுட்ப பிரச்சினை இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வு மதுரையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் – இணைந்திருங்கள்

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சுதந்திரம், நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மீதான மிகப்பெரிய தாக்குதல்.

1992, டிச.6-பாபர் மசூதி இடிப்பு “தேசிய அவமானம்” என்றது உச்சநீதிமன்றம். நவ.9, 2019 தீர்ப்போ மனித குலத்திற்கே அவமானம்! ஆக்கிரமிக்கப்பட்ட ஓர் “அசையாச் சொத்து” தொடர்பான சிவில் வழக்கை – இந்து-முசுலீம் பிரச்சினையாகக் கருதி, அகழாய்வு செய்து, அரசியல் சட்ட அமர்வு விசாரித்ததே அப்பட்டமான அரசியல் சட்ட விரோதம்!

1858-லிருந்து 1885 வரை பாபர் மசூதியின் வெளிப்பகுதி ஆக்கிரமிப்பிற்கு எதிராக 8 வழக்குகள் நடந்து தீர்ப்பு பாபர் மசூதி நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. 1934-ல் பாபர் மசூதியின் டூம்கள் சேதப்படுத்தப்பட்டதை, சரிசெய்தது வெள்ளை அரசு. பாபர் காலத்திலிருந்து, வெள்ளை அரசுவரை மசூதிக்கு மானியம் வழங்கப்பட்டது.

1949, டிச.16-வரை பாபர் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டது; டிச.22-ல் சட்டவிரோதமாக சிலைகள் உள்ளே வைக்கப்பட்டது என்பதை ஏற்கும் நீதிமன்றம் இசுலாமியர்களிடம் தொடர்ந்து அனுபவம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்கிறது!

பிரிட்டிஷ் ஆட்சிவரையிலான பிரச்சினைகளை மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும் என்று சொல்லும் உச்சநீதிமன்றம், 1528-1858 வரை முசுலீம்கள் தொழுகை நடத்தியதற்கு ஆதாரம் கேட்பதேன்? 12-ம் நூற்றாண்டு ராமர் கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ; 12-16 நூற்றாண்டுகள் (400 ஆண்டுகள்) வரலாறே இல்லை என்று சொல்லும் உச்சநீதிமன்றம், கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டினார் என்று சொல்லி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் – விஎச்பி – பாஜக கூட்டத்தைக் கண்டிக்காததுடன், டிச.6, 1992 மசூதி இடிப்பு வழக்கு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காதது ஏன்?

பாபர் மசூதி பிரச்சனை இந்து-முசுலீம் பிரச்சினை அல்ல. பெரும்பான்மை இந்துக்கள் – பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் பிறந்தார் என நம்பவும் இல்லை. தென்னகம், வட கிழக்கு மாநிலங்களில் இராமனுக்கு கோயிலே இல்லை. 17-ம் நூற்றாண்டுவரை உத்தரப் பிரதேசத்திலேயே ராமனுக்குக் கோயில் இல்லை. இந்த நாட்டின் இந்துக்களும் இசுலாமியர்களும் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். கலவரம் – வன்முறை செய்வதை தனது தொழிலாகக் கொண்டிருக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ்-தான் பாபர் மசூதி பிரச்சனையை உருவாக்கி நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தியது. மசூதியை திட்டமிட்டு இடித்தது.

மசூதி இருந்திருந்தால், அகழாய்வு நடந்திருக்குமா? மசூதியை இடித்து கோயில் கட்டு, என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? வழக்கு நடக்கும் போது, வழக்குச் சொத்து இடிக்கப்படுகிறது! எந்த நடவடிக்கையும் இல்லை ! வரலாற்றுக் குற்றத்தை சரிசெய்ய உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பால் தோற்றது இசுலாமியர்கள் அல்ல! நாட்டின் அரசியல் சட்டம், சமத்துவம், மதச்சார்பிமை, உலக அரங்கில் இந்திய மதிப்பு! சாட்சியத்தை நிராகரித்து, நம்பிக்கையின் அடிப்படையிலான பாபர் மசூதி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் கறுப்பு நாளே!

படிக்க:
Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release
♦ குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எல்லோரும் ஏற்றே தீர வேண்டும் எனப் பேசும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கிறது. முத்தலாக் பிரச்சனையில் இசுலாமியப் பெண்களின் உரிமை பேசும் பாஜக, சபரிமலை செல்லும் இந்துப் பெண்களை அடித்து விரட்டுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது தீண்டாமை என்று சொன்ன உச்சநீதிமன்றமோ மவுனம் காக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உலகில் வேறெங்கும் இல்லாதவகையில் 75 லட்சம் காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு, காஷ்மீர் மக்களின் அரசியல் சட்டம் தூக்கி எறியப்பட்டது. காஷ்மீர் இந்திய அரசோடு இணைந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதி அப்பட்டமாக மீறப்பட்டது.

காஷ்மீர் மக்கள், அரசு, சட்டப்பேரவை, அரசியல் அமைப்பு அவை எல்லாம் மத்திய அரசின் கவர்னருக்குச் சமம் என்ற அரசியல் சட்ட மோசடி அரங்கேற்றப்பட்டது. கடந்த 5 மாதங்களாக காஷ்மீர் மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதிக்கும் உச்சநீதிமன்றம் வாய்திறக்க மறுக்கிறது.

பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து, விலைவாசி உயர்ந்து, மக்கள் வேலையிழந்து, வாழ்விழந்து தவிக்கும்போது தேசிய குடிமக்கள் பதிவேடு என்று சொல்லி ஒரே இரவில் 20 லட்சம் அசாம் மக்களை “சட்டவிரோதக் குடியேறிகளாக்கி” நாட்டை விட்டு வெளியேறக் கெடு விதிக்கிறது மோடி அரசு. இப்பாசிசச் சட்டம் இசுலாமியர்கள், தமிழர்களைக் குறிவைத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்தால் போதும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது பாஜகவின் புதிய குடியுரிமைச் சட்டம். 40, 50 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்கும் இசுலாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு இச்சட்டம் பொருந்தாதாம்! எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? மத, இன அடிப்படையில் பிரிவினை செய்யக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம்! ஆனால் பாஜக மீறுகிறது, உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.

மாற்றுக் கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சி கோருவோரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி – அமித்ஷா அரசு. பார்ப்பனீயத்தை எதிர்த்தால் கவுரி லங்கேஷ், கல்புர்க்கி போல சுட்டுத் தள்ளுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்கிறது.

எனினும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல பாஜக. வரலாறு மாபெரும் சர்வாதிகாரிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. மகாராஷ்டிரத்தில் மண்ணைக் கவ்வினார் மாவீரர் அமித்ஷா.

சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க