நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள் : பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

ருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டிருப்பதை ஆதரிக்கும் அனைவரும், “தகுதி இல்லாதவர்கள்” மருத்துவர் ஆவதைத் தடுப்பதற்காகத்தான் தேசிய அளவிலான ஒரே தேர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அத்தகுதித்  தேர்வின் நோக்கம் பொருளாதாரரீதியாகவும், சாதிரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் –  கவனிக்க, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் பின்தங்கியவர்கள் அல்ல –  மருத்துவர் ஆவதைத் தடுப்பதுதான் என்பது நீட் அமலுக்கு வந்த அதே ஆண்டில் நடந்த அனிதாவின் தற்கொலை மூலம் அம்பலமானது.

வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு ஒரே தேர்வுமுறை அநீதியானது என ரத்தத்தால் எழுதிப் போராடும் மாணவர்கள். (கோப்புப் படம்)

நீட் தேர்வு முறை அதன் தன்மையிலேயே ஒருதலைபட்சமானது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி மாநிலப் பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அடிப்படையில் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படுவது; நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துத் தயாரிக்கப்படுவது; தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் அவ்வினாத்தாள் வழங்கப்பட்டாலும், அவற்றில் ஏதாவது தவறுகள் நேர்ந்தால் ஆங்கில வினாத்தாள்தான் இறுதியானது என நியாயத்திற்குப் புறம்பான முறையில் மட்டையடியாக ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு +2 மதிப்பெண்களைக் கணக்கிலே கொள்ளாமல், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணை மட்டுமே தகுதியாகக் கொண்டிருப்பது ஆகிய இவை அனைத்துமே இத்தேர்வு முறையின் ஓரவஞ்சனையை எடுத்துக்காட்டுகின்றன.

இவை காரணமாக அத்தேர்வு, அதன் இயல்பிலேயே அரசுப் பள்ளிகளில், அதுவும் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு எதிராக அமைகிறது.  மேலும், தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கில் வழியில் பயிலும் மாணவர்கள்கூட நீட் தேர்வு எழுதுவதற்குத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுவதைக் கட்டாயமாக்கி, +2 பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது.

படிக்க:
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து ! 

இத்தனியார் பயிற்சிப் பள்ளிகளும்கூட ஒருபடித்தானவை கிடையாது. பத்தாயிரம், இருபதாயிரம் கட்டணம் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. இலட்சக்கணக்கில் வசூலிக்கும் தனிப் பயிற்சிப் பள்ளிகளும் உண்டு. மேலும், இத்தனிப் பயிற்சிப் பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிகளை எடுத்துக்கொண்டால், அவை ஒரு வருட பயிற்சித் திட்டம், இரண்டு வருட பயிற்சித் திட்டம், எட்டாம் வகுப்பு தொடங்கியே நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கும் திட்டம் என காசுக்குத் தக்கபடி விதவிதமாக உள்ளன.

நீட் தேர்வு வந்த பிறகு அத்தேர்வை மூன்று முறை எழுதவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருப்பதால், +2 முடித்த பிறகும்கூட ஓரிரு ஆண்டுகள் நீட் தேர்வுக்காகத் தனிப் பயிற்சி எடுத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு பொருளாதார வசதி படைத்த மாணவர்களுக்குக் கிட்டியிருக்கிறது.

ஏழை மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் தமது பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்புக்களையும் அரசு நடத்தும் தனிப் பயிற்சி வகுப்புக்களையும்தான் நீட் தேர்வு எழுதுவதற்கு நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களால் நீட் கோச்சிங்கிற்காக பல பத்தாயிரக் கணக்கில் பணம் செலவு செய்யக்கூடிய பணக்கார மாணவர்களோடு எப்படிப் போட்டியிட முடியும்?

ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த உதித் சூர்யா (இடது) மற்றும் இர்ஃபான்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுள் பெரும்பாலோர் ஆதிக்க சாதியினராகவும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினராகவும் இருப்பது எதார்த்தமான உண்மை. அது போல சாதிரீதியாகவும் பொருளாதார ரீதியாவும் பின்தங்கிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். எனவே, நீட் தேர்வு அதன் தன்மையிலேயே அடித்தட்டு வர்க்கத்தினரைப் புறக்கணிப்பதாகவும், உயர்சாதி, பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்குச் சாதகமாகவும் அமைகிறது. மேலும். இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளிலும் கூடப் பத்தாயிரக் கணக்கில் பணம் செலவழித்துத் தனிப்பயிற்சிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள்தான் மருத்துவராகும் கனவைக்கூடக் காண முடியும்.

இவை ஒருபுறமிருக்க, மிக மிக வசதியான குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய தேவையும் கிடையாது. அவ்வாரிசுகள் நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்திருந்தாலே போதும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் அல்லது தனியார் மருத்துவப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பல இலட்சங்களை வீசியெறிந்து இடத்தைப் பிடித்துவிட முடியும்.

ஆகவே, நீட் தேர்வு எதிர்பார்க்கும் தகுதி என்பது பிரதானமாகப் பணம்தான். தற்பொழுது தமிழகத்தில் அம்பலமாகியிருக்கும் ஆள் மாறாட்டங்கள், பாதாளம் வரை பாயக்கூடிய பணபலத்தின் முன் நீட் தேர்வெல்லாம் சப்பை மேட்டர் என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும், நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசியத் தேர்வு முகமை என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அமைப்பும் இம்மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் தோற்றுப்போய்விட்டது.

♦ ♦ ♦

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, இர்ஃபான், ராகுல், பிரவீன், பிரியங்கா ஆகிய ஐந்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இம்மாணவர்களுள் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும்; மற்ற மூன்று பேர் வெவ்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆள் மாறாட்டத்தின் மூலம் சேர்ந்து படித்து வந்தனர்.

உதித் சூர்யாவிற்குப் பதில் வேறொரு நபர் நீட் தேர்விலும், மருத்துவக் கலந்தாய்விலும், பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கையின் போதும் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் உதித்சூர்யாவினுடையது. கல்லூரி தொடங்கிய பிறகு உதித்சூர்யா வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

மாணவிகளின் துப்பட்டாவையும், கொண்டை ஊசியையும் கூட பிடுங்கிக் கொண்டு ‘கடுமையாகச் சோதித்த’ நீட் தேர்வு அதிகாரிகள். பேனைத் தேடி பொருச்சாளியை விட்ட கதை.

பிரவீனும் ராகுலும் சென்னையில் நீட் தேர்வு எழுதிய அதேசமயத்தில், அவர்களது பெயர் மற்றும் முகவரியில் போலி நபர்களும் வடநாட்டு மையங்களில் அவர்களுக்காகத் தேர்வு எழுதியிருக்கிறார்கள். பிரவீனும் ராகுலும் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அவர்கள் இருவரும் போலியான நபர்கள் எடுத்த அதிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்தித் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் கண்காணிப்பு, கெடுபிடிகள் நடத்தப்படும்போது, வடநாட்டு மையங்களில் ஆள்மாற்றாட்டம் சர்வசாதாரணமாக நடைபெற்றிருக்கிறது. தமிழகம் மைய அரசால் ஓரவஞ்சனையாகவும் சந்தேகக் கண்ணோடும் நடத்தப்படுகிறது என்பதை இந்தப் பாரபட்சமான அணுகுமுறை நிரூபிக்கிறது.

படிக்க:
நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

இந்த ஆள்மாறாட்டத்தை நீட் தேர்வை நடத்தும் அதிகாரம் கொண்ட தேசியத் தேர்வு முகமையோ, மருத்துவ மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்கக்கூடிய இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட வேறு அதிகார அமைப்புக்களோ கண்டுபிடிக்கவில்லை. மேலும், அரசு நடத்தும் கலந்தாய்வு உள்ளிட்ட இடங்களிலும் இந்த மோசடி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக, படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவனான உதித் சூர்யா பற்றிய விவரங்கள் சமூக ஊடகம் வழியாகக் கசிந்து வெளியில் வர, அதன் பிறகுதான் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமானது.

♦ ♦ ♦

திகார வர்க்கத்திற்கு இலஞ்சம் கொடுத்து போலியான இருப்பிடச் சான்றிதழைப் பெற்று தமிழகத்தைச் சேராத 150 மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாகியிருக்கிறது. மேலும், இம்மோசடியில் ஈடுபட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் இந்த ஐந்து பேர் மட்டும்தானா,  மற்ற மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடைபெற்றிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஏனென்றால், இந்த ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் பீகாரைச் சேர்ந்த நிதிவர்மன் என்ற இரண்டு மாணவர்கள் போலியான மாணவர் சேர்க்கைச் சான்றிதழ் கொடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்று பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தில்லியில் உள்ள கும்பல் ஒன்றிடம் பணம் கொடுத்து இந்தப் போலிச் சான்றிதழ்களை வாங்கியதாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

போலி சேர்க்கைச் சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ், ஆள் மாறாட்டங்கள் என்பவையெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆள் மாறாட்டங்களில் ஈடுபட்டு நீட் தேர்வை எழுதிய நபர்கள் கேரளாவையும் வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உதித் சூர்யாவும் இர்ஃபானும் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்ற சென்னை அண்ணா நகரிலுள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டருக்கும் இம்மோசடியில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தமிழக போலீசு கூறியிருக்கிறது.

இந்த ஆள் மாறாட்ட மோசடிக்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் குழும அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 30 கோடி ரூபாய் ரொக்கமும் 150 கோடி ரூபாய்க்குக் கணக்கில் வராத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீட் மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கிரீன் பார்க் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 30 கோடி ரூபாய் பணமும், 150 கோடி ரூபாய் பெறுமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இவை ஒருபுறமிருக்க, 2017-ம் ஆண்டு ஆள்மாறாட்டம் செய்த நான்கு மாணவர்கள் கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 2018-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சீதாதேவி என்ற மாணவி குறுக்கு வழியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விவகாரம் அம்பலமானது. 2013-ம் ஆண்டிலிருந்தே வட இந்திய மாநிலங்களில் நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் ஒரு கிரிமினல் கும்பல் இந்தியா முழுமைக்கும் வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொண்டு, அதிகார வர்க்கம், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கோச்சிங் சென்டர்கள் ஆகியோரைக் கையில் போட்டுக்கொண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி வருவது தெளிவாகிறது.

தமிழக போலீசு விசாரித்து வரும் இந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கு அக்கிரிமினல் கும்பலை, அதற்குத் துணையாக நிற்கும் அதிகார வர்க்கத்தைக் கைது செய்யும் திசையில் இதுவரை நகரவில்லை. உதித் சூர்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் கீழ்மட்டத்திலுள்ள மூன்று தரகர்கள் கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த மோசடியின் சூத்திரதாரிகள் யார் என்று இதுவரையிலும் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக அரசோ, இது மைய அரசின் பிரச்சினை என ஒதுங்கிக் கொள்கிறது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை உள்ளிட்ட மைய அரசின் நிறுவனங்களோ இம்மோசடி பற்றி வாயே திறக்க மறுக்கின்றன. இவை யாவும் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்களோடு வழக்கை முடித்துவிடுவார்களோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

♦ ♦ ♦

மோடி அரசு நீட் தேர்வைத் தமிழகத்தின் மீது திணித்தபோதே, இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலைத் தேசியமயமாக்குவதில்தான் முடியும் என அம்பலப்படுத்தி எழுதியிருந்தோம். அது இப்பொழுது உண்மையாகியிருக்கிறது.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வின் போது காப்பியடிக்க உதவுவது, விடைத்தாளை மாற்றுவது, தேர்வுக்கு முன்பே வினாத்தாளை வெளியிடுவது, போலியான ஆவணங்கள் சமர்ப்பிப்பது எனப் பல வகைகளில் பல ஆண்டுகளாக வியாபம் முறைகேடு மத்தியப் பிரதேசத்தில் நடந்து வந்தது. அம்முறைகேட்டின் பின்னே ஒரு பெரிய மாஃபியா கும்பல் இருந்ததும், மாநில ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் என அதிகாரம் படைத்த பலருக்கும் அம்முறைகேட்டில் நெருங்கிய தொடர்பிருந்ததும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

வியாபம் ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., 2000-க்கும் அதிகமானவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்திருப்பதைத் தாண்டி, வேறெதையும் இதுவரை சாதிக்கவில்லை. இம்முறைகேடுகளை அம்பலப்படுத்தி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர்களுள் ஒருவரான ஆனந்த் ராய், “விசாரணையைத் தாமதப்படுத்துவதன் மூலம், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. முயலுகிறது” எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பு வரை சென்ற வியாபம் ஊழலின் விசாரணைக்கே இதுதான் கதி எனும்போது, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மினி வியாபம் ஊழலின் விசாரணை மட்டும் ஐந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்களையும் தாண்டி, இந்த ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் கிரிமினல் கும்பலையும் அதிகார வர்க்கத்தினரையும் தண்டித்துவிடும் என நம்புவதற்கு இடமில்லை.

இந்த ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமான பிறகு, நீட் தேர்வில் பயோ- சோதனையைப் புகுத்த வேண்டும் எனக் கோரியிருக்கிறது, தமிழக அரசு. இது கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற விவாதத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம்.

நீட் தேர்வு பலி கொண்ட மாணவிகள் அனிதா மற்றும் பிரதீபா.

இம்முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தொடங்கி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எந்தளவிற்கு அவசியமானதோ, அதனைவிடப் பலமடங்கு அவசியமானது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை. ஏனென்றால், நீட் தேர்வு அதன் தன்மையிலேயே ஏழை மாணவர்களின், தாய்மொழியில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் மருத்துவக் கனவுகளை முளையிலேயே நசுக்கிவிடும் ஓரவஞ்சனைமிக்கது. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் பணம் படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமானது. தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களைத் தமிழகத்தைச் சேராத மாணவர்கள் குறுக்குவழியில் அபகரித்துக்கொள்ளும் அபாயமிக்கது.

மேலும், ஊழல், முறைகேடுகளால் புரையோடிப் போயிருக்கும் இந்த அமைப்பு முறை எத்தனை கண்காணிப்புகள், சோதனைகளைக் கொண்டுவந்தாலும், அதிலெல்லாம் ஓட்டைபோட்டுப் பணத்தை வீசியெறிபவர்களுக்குச் சாதகமாகச் செயல்படவே செய்யும்.

எனவே, இனியும் அனிதா போன்ற மருத்துவராகும் தகுதி படைத்த ஏழை மாணவ – மாணவிகள் நீட்டால் ஏமாற்றமடைந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என்றால், நீட்டை அடியோடு ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் எழ வேண்டும்.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க