டந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் அரங்கேற்றப்படும் கும்பல் வன்முறைகளை மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாளப்போகின்றன என உச்ச நீதிமன்றம் கேள்விகேட்டதன் பெயரில், கும்பல் வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற விவாதம் எழுந்தது.

இதன் அடிப்படையில் மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்க அரசுகள் கும்பல் வன்முறை தடுப்பு சட்டங்களை நிறைவேற்றின. ஆனால், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க அரசுகள் நிறைவேற்றிய சட்டங்களின் உள்ளடக்கங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது மத்திய உள்துறை அமைச்சரகம்.

கடந்த ஆகஸ்டு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கும்பல் வன்முறைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, கர்நாடக அரசு நோடல் அதிகாரிகள் மற்றும் துணை நோடல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. கும்பல் கொலை மற்றும் தொடர்புடைய வன்முறைகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களை மகாராஷ்டிர மாநிலம் வெளியிட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மணிப்பூர் மாநிலம், சட்டமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதில் கூடுதலாக வெறுப்பு குற்றங்களையும் கும்பல் வன்முறையின் கீழ் கொண்டுவந்துள்ளது. கும்பல் வன்முறைகளை தடுக்கத் தவறினால் மாநில அரசின் போலீசு அதிகாரி ‘கடமையை செய்யத் தவறியவராக’ கருதப்படுவார் எனவும் அந்த தீர்மானம் கூறுகிறது.

அதுபோல, மேற்கு வங்கம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களும் தங்களுடைய சட்ட மன்றங்களில் கும்பல் வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றின. இவை அந்தந்த மாநில ஆளுநர்களால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

படிக்க:
டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
♦ அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி ! 

அரசியலமைப்பின் 200-வது பிரிவின் படி, இந்த மசோதாக்கள் இப்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அவருடைய மேசையில் காத்திருக்கின்றன.

கும்பல் வன்முறை தடுப்பு சட்டம், இராஜஸ்தானின் விதான் சபாவில் ஆகஸ்டு 2019-ல் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. கும்பல் கொலையாளிகளுக்கு வரவேற்பு அளித்த இராஜஸ்தான் பாஜகவினரின் கடுமையான எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேறியது.

2019, செப்டம்பர் மாதம் மேற்கு வங்கம் கும்பல் வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவை சபையில் அறிமுகப்படுத்திய மம்தா பானர்ஜி, ‘இந்திய தண்டனை சட்டத்தைவிட கடுமையானது’ எனக் கூறினார். காவல் அதிகாரிகள் கும்பல் வன்முறைக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளை கண்காணிக்கவும் தடுக்கவும் இது விதிகளை வகுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில், மத்திய அரசாங்கம் உயர் மட்ட அளவில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு, கும்பல் வன்முறைகளை ஆராயவும் அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கவும் பரிந்துரையை சமர்பிக்கவும் செய்யும் என அறிவிக்கப்பட்டது.

கவுபா அறிக்கை 2018, ஆகஸ்டு 29-ம் தேதி அமைச்சர்கள் குழுவிடம் சமர்பிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு முறை ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு கூடியபோதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதன்பின், உள்துறை அமைச்சகம் அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது!

‘தி இந்து’ நாளிதழில் வந்த ஒரு செய்தி, கும்பல் வன்முறைகளுக்கு இருக்கும் சட்டங்களே போதும் எனவும் புதிய சட்டங்கள் தேவையில்லை எனவும் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்ததாக கூறுகிறது. இருக்கும் சட்டங்களில் திருத்தம் எதுவும் தேவையில்லை; அதை அமலாக்குவதில்தான் பிரச்சினை உள்ளது. இந்த வழக்குகளில் தண்டனை உறுதி செய்ய காவல்துறைக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

படிக்க:
கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !
♦ கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

2019, செப்டம்பர் 11 தேதியிட்ட தி இந்துவில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களில் நிறைவேற்றிய சட்டங்கள் அமலாக்கப்படும் முன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அவை ஒப்புதல் பெற வேண்டும் என்று செய்தி வெளியானது.

மத்திய சட்டங்களுடன் பொருந்தாது இருக்கின்றனவா, தேசிய அல்லது மத்திய சட்டங்களிலிருந்து விலகிப் போகின்றனவா, சட்ட மற்றும் அரசியலமைப்பு அடிப்படையாகக் கொண்டவை என மூன்று கோணங்களில் மாநிலங்கள் இயற்றும் சட்டங்கள் ஆராயப்படுகின்றன. அமைச்சகத்தின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு குடியரசு தலைவர் ஒரு மசோதாவை நிராகரிக்கலாம் அல்லது ஒப்புதல் அளிக்கலாம்.

ஆனால், உள்துறை அமைச்சகம் இதுவரை கள்ள மவுனமே சாதிக்கிறது. மூன்று மாநிலங்களில் இயற்றப்பட்ட கும்பல் வன்முறை தடுப்பு சட்டங்கள் குடியரசு தலைவர் மேசையில் தேங்கிப் போயிள்ளன.

கும்பல் வன்முறைகள் மேற்கத்தியர்களின் கண்டுபிடிப்பு எனவும், இந்திய மானத்தை வாங்குவதற்காக வேண்டுமென்றே கும்பல் வன்முறைகளை மிகைப்படுத்துவதாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கும்பல் வன்முறையாளர்கள் மீது கரிசனப்பட்டார். யதார்த்தம் இப்படி இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஆட்சி நடத்தும் பாஜக அரசாங்கம் எப்படி தங்களுடைய காவிப் படைக்கு எதிராகவே சட்டம் இயற்றும்?

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி :  சப்ரங் இந்தியா. 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க