கலையரசன்

ளம்தலைமுறை சினிமா இரசிகர்கள் அடாவடித்தனம் பண்ணுவது தமிழர்களுக்கு மட்டுமேயான “சிறப்புரிமை” அல்ல. இது உலகம் முழுவதும், மேற்கத்திய நாடுகளிலும் நடக்கும் விடயம் தான். என்ன வித்தியாசம்? இங்கே சினிமா பைத்தியம் என்றால் அங்கே கால்பந்து பைத்தியம். அவ்வளவு தான். இரசிகர்களின் வெறி மனநிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கும். முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளில், இந்த வெறியுணர்வு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.

உலகிற்கே முதலாளித்துவம் போதித்த நாடு, தொழிற்புரட்சி நடந்த இங்கிலாந்து அல்லவா? அதனால் இந்த “வெறித்தனம்” கூட அங்கே தான் தோன்றியுள்ளது. பொது இடங்களில் அடாவடித்தனம் செய்யும் விளையாட்டு இரசிகர்களை ஆங்கிலத்தில் ஹூலிகன் (Hooligan) என்பார்கள். அந்தச் சொல் அதே உச்சரிப்புடன் பிற ஐரோப்பிய மொழிகளும் உள்வாங்கப் பட்டுள்ளது.

Hooligan
விளையாட்டின் பெயரில் வெறித்தனம் செய்யும் ‘இரசிகர்கள்’. (மாதிரிப் படம்)

இங்கிலாந்து கால்பந்து இரசிகர்கள் செய்யும் அடாவடித்தனம் உலகப் பிரசித்தமானது. எங்காவது ஓர் ஐரோப்பிய நகரத்தில் இங்கிலாந்து டீம் விளையாடும் மேட்ச் நடந்தால், அங்கு இங்கிலாந்து விளையாட்டு இரசிகர்களும் வந்து குவிந்து விடுவார்கள். மேட்ச் நடக்கும் நாள் முழுவதும், மதுபான விடுதிகள் நிரம்பிய நகர மத்திய பகுதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட இடம் போல காட்சியளிக்கும்.

சாதாரண பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வார்கள். இங்கிலாந்து கால்பந்து இரசிகர்கள் குடித்து விட்டு ரகளை செய்வதும், பொதுச் சொத்துக்களை அடித்துடைத்து நாசம் விளைவிப்பதும் வழமையானவை. இதனால் சில நேரம் பிற ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து இரசிகர்களுக்கு பிரயாணத் தடை விதித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
♦ மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !

நெதர்லாந்தில் உலகப் புகழ் பெற்ற இரண்டு விளையாட்டுக் கழகங்கள் உள்ளன. ஆம்ஸ்டர்டாம் நகருக்குரிய ஆயாக்ஸ் (Ajax) ரொட்டர்டாம் நகருக்குரிய பையனோர்ட்(Feyenoord). பிற உலக நாடுகளிலும் இவ்விரண்டையும் பற்றி அறிந்திராத விளையாட்டு இரசிகர்கள் கிடையாது.

நெதர்லாந்து ஆயாக்ஸ் – பையனோர்ட் கால்பந்து விளையாட்டு இரசிகர்களை, நம்மூரில் விஜய் – அஜித் (அல்லது அந்தக் காலத்து எம்ஜிஆர் – சிவாஜி) சினிமா இரசிகர்களுடன் ஒப்பிடலாம். அந்தளவு வெறித்தனம். கிட்டத்தட்ட பிரதேசவாதம் போன்று காணப்படும் இந்த பிரிவினை மூன்றாவது தலைமுறை இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இரண்டு பக்க இரசிகர் பட்டாளங்கள் வாய்த்தர்க்கம் செய்வதும், அது முற்றி கைகலப்பு நடப்பதும் வாடிக்கையானது.

ஆம்ஸ்டர்டாம் அல்லது ரோட்டர்டாம் நகரில் ஆயாக்ஸ் – பையனோர்ட் உதைபந்து போட்டி நடந்தால் சொல்லவே தேவையில்லை. இரு பக்க ஹூலிகன் பட்டாளங்களும் கத்தி, பொல்லு, வாள்களை மறைத்து வைத்து கொண்டு வந்திருப்பார்கள். ஒரு தடவை ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்தளவுக்கு மோசமாக நடந்து கொள்வார்கள். மேட்ச் நடக்கும் நாட்களில், கவச உடை அணிந்த போலீசார் குவிக்கப்பட்டு, அந்த இடம் ஒரு யுத்தகளம் போன்று காட்சியளிக்கும்.

ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில், சினிமா அல்லது விளையாட்டு மீதான இரசிகர்களின் வெறித்தனம், ஆள்வோரால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. சினிமா / விளையாட்டு பைத்தியம் இளையோரின் மனநிலையை சீர்குலைக்கிறது. இதன் மூலம் அவர்களை அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தலைமுறையினராக வளர்க்க முடிகிறது.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க