• சியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893-ஆம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.
  • இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் இவ்வாறு பலவகையான தொழிற்பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.
  • 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாதப் போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

படிக்க :
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !
♦ நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்

  • இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 – 1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.
  • எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

  • இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல் :
  1. ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு  உருவாக்கப்பட்டது.
  2. தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
  3. தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  4. வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப்பட்டன.
  5. பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது.
  6. தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன.
  7. தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.

இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

  • 1977-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.
  • ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ – லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.
  • 1978-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.
  • அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.
  • நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.
  • 1980-ஆம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
  • அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.
  • ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப்பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

  • 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடை செய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடை செய்யப்பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.
  • வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்றுவிட்டது.
  • விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002-ஆம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
  • தென்னிலங்கையில் 1987 – 1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

படிக்க :
♦ இலங்கை : புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !
♦ காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !

  • ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்கப் போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.
  • மறுபுறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்கப்பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.


கலையரசன்
முகநூலில் : Kalai Marx

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க