இலங்கையில் நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் இயக்கம் !

தோட்டத்தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாயக மாற்ற வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்றும் (28.01.2019) போராட்டங்கள் நடைபெருகின்றன.

தொழிலாளிகள் கோரிக்கையை நீத்துப் போகச் செய்யும் சதித்தனமான அறிவிப்பாக நாளொன்றுக்கு 700 ரூபாய் சம்பளம் என பேசப்படுகிறது. ஆனால் தொழிலாளிகள் இதனை ஏற்கவில்லை. மேலும் இப்போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல 1000 Movement என்ற அடிப்படையில் ஒரு முகநூல்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தகவல் :
1000 இயக்கம் முகநூல் பக்கத்திலிருந்து…

*****

லங்கையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து, கரடுமுரடான மலைகளை சீர்படுத்தி தங்கள் “உள்ளங்கால் வெள்லெலும்பு” தெரிய உழைத்த மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

ஆம் கடந்த 23 ஜனவரி 2019 அன்று தோட்டத் தொழிலாளர்கள் தங்களது தினக்கூலியாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுதழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தங்கள் போராட்டத்தை நடத்தினர். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக இலங்கையின் மூன்று இன மக்களும் ஒன்றாக கைகோர்த்து உள்ளனர்.

இந்த போராட்டத்தை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைத்து நடத்தினர்.

மாத்தளையில் நடந்த போராட்டம்…

யாழ்பாணத்தில் நடைபெற்ற போராட்டம்…

கண்டியில் நடைபெற்ற போராட்டம்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இலங்கை
முகநூல் பக்கத்திலிருந்து…

*****

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து பலரும் தங்களது முகநூல் பக்கத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்…

Mohana Dharshiny

லையக தோட்டத் தொழிலாளர்களின் 1000/- அடிப்படைச் சம்பளக் கோரிக்கைகான போராட்டங்கள் இலங்கை முழுவதும் சுமார் 30 இடங்களில் இன்று நடைபெற்றிருக்கிறது. இன, மொழி , பிரதேசவாதங்களைக் கடந்து இலங்கை முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரும் அவர்தம் பிள்ளைகளும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருக்கிறார்கள்.

அரசியலற்றவர்களாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் நலன்விரும்பிகளும் இளைஞர்களும் சமூக ஜனநாயகவாதிகளும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் கேட்கும் மலையக மக்களின் போராட்டத்தில் பங்கேற்றிருப்பது நம்பிக்கையான முன்னேற்றம்.
ஆனால் , இந்த சம்பள கோரிக்கையை வென்றெடுப்பதில் தொழிற்சங்க அரசியல் இருக்கிறது.

40% தொழிற்சங்க பலத்தைக் கொண்ட தொழிற்சங்கங்களே , முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள்.

அவர்கள் யாருக்கு சார்பாக முடிவெடுப்பார்கள் என்பது தொழிலாளர்கள் அறிந்ததே…
பெருந்தோட்ட கம்பனிகளுக்காக உழைக்கும் அதே தொழிற்சங்கங்களுக்கு தொடர்ந்தும் சந்தா செலுத்திக் கொண்டு இருக்கப் போகிறோமா என்பதை தோட்டத் தொழிலாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

*****

Kalai Marx

லையகத் தமிழர்கள் வெறும் கூலிக்காக மட்டும் போராடவில்லை. அது அவர்களது நில உரிமைக்கான போராட்டமும் கூட. நூற்றி ஐம்பது வருடங்களாக பண்படுத்தி பயிரிட்டு வந்த நிலம், அந்த மக்களுக்கு சொந்தமாக வேண்டும். அதை மறுப்பதற்கு நீங்கள் யார்?

“வடக்கிற்கு வந்து குடியேறுங்கள். அதிக கூலி கொடுக்கிறார்கள்.” என்று சில வடக்கத்திய வலதுசாரிகள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். மலையகத் தமிழர்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை இது.

பெருந்தோட்ட முதலாளிகள் அந்த மக்களை சுரண்டி முடிந்து, தற்போது வடக்குத் தமிழ் முதலாளிகள் சுரண்ட விரும்புகிறார்கள். “அதிகம் சுரண்டுவது யார்?” என்று சிங்கள முதலாளிகளும், தமிழ் முதலாளிகளும் போட்டி போடுகிறார்கள். இந்த அயோக்கியத்தனத்திற்கு தமிழ்த் தேசிய முகமூடி ஒரு கேடு.

ஏற்கனவே கிளிநொச்சி போன்ற இடங்களில் குடியேறிய பெருந்தொகையான மலையகத் தமிழர்கள், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் ஏழைகளாக, கூலித் தொழிலாளர்களாக தான் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு முதலாளியை காட்டுங்கள் பார்ப்போம்.

உங்களுக்கு தெரியுமா? நீங்கள் குறிப்பிடும் அதிக கூலி மலையகத்திலும் கிடைக்கிறது! தேயிலைத் தோட்டங்களை விட்டு விட்டு வேறு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நாட்கூலி ஆயிரம் ரூபாய்களுக்கு மேலே கிடைக்கிறது. இதனால் பல மலையக இளைஞர்கள் காய்கறித் தோட்டங்களிலும், கட்டுமானத் துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.

ஆகவே, மலையகத் தமிழரின் கோரிக்கை வெறும் கூலி உயர்வு சார்ந்தது அல்ல. அதுவும் அரசியல் உரிமைப் போராட்டம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க