சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்
பருவ வயதுடைய 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கு மரபு என்ற பெயரிலும் சட்டப்படியும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு (review petition) செய்யக் கோரும் மனுக்கள் மற்றும் பருவ வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கு மீண்டும் தடை விதிக்கக் கோரும் மனுக்கள் (writ petitions) என ஐம்பதுக்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்துவந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில், ஆர்.எஃப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகள் இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து, ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டனர். அதேசமயம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகிய மூவரும் இப்பிரச்சினையோடு தொடர்புடைய வேறு சில பிரச்சினைகளையும் அம்சங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தனர்.
இம்மனுக்கள் மீது மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதால், “பெரும்பான்மைத் தீர்ப்பு” என்ற அடிப்படையில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கூறியிருக்கும் பரிந்துரைதான் சபரிமலைத் தீர்ப்பின் தற்போதைய நிலை. அதாவது, சபரிமலை வழக்கில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள் ரத்து செய்யப்படவில்லை. அவற்றை, அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் வருங்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படும்போது விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதால், அம்மனுக்கள் கிடப்பில் (pending) வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பெரும்பான்மை நீதிபதிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்காததாலும், சிறுபான்மை நீதிபதிகள் அத்தீர்ப்பை உறுதிசெய்திருப்பதாலும் அத்தீர்ப்புதான் நடைமுறையில் உள்ளது.
10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட உரிமையுண்டு என்ற தீர்ப்புதான் சட்டப்படி செல்லத்தக்கது என்றபோதும், அத்தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசக் கும்பல் மட்டுமின்றி, கேரள இடதுசாரிக் கூட்டணி அரசாங்கமும் நடைமுறையில் ரத்து செய்துவிட்டது. சபரிமலைக்கு வரத் துணியும் பெண்களை மிரட்டுவது, தாக்குவது ஆகிய சட்டவிரோதமான வன்முறை வழிகளின் வழியாக வலதுசாரிக் கும்பல் இத்தீர்ப்பை ரத்து செய்கிறது எனில், கேரள இடதுசாரிக் கூட்டணி அரசோ தீர்ப்பில் குழப்பம் இருப்பதாக வேண்டுமென்றே சித்தரித்தும் சபரிமலைக்கு வர விரும்பும் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாது எனக் கூறியும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய தனது பொறுப்பை, கடமையைத் தட்டிக் கழிப்பதன் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்கிறது.
இவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மட்டுமின்றி, கோவிலுக்குச் செல்லத் தமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனப் பெண்கள் கோரியிருக்கும் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று தம்முன் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இறுதி முடிவை இன்னமும் தெரிவிக்கவில்லை என்று சங்கப் பரிவாரத்தினர் போலவே பேசியிருக்கிறார்.
கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு மறு ஆய்வு மனுக்களை ஏற்கவுமில்லை. முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவுமில்லை. இந்நிலையில் நீதிபதி நாரிமன் கூறியிருப்பது போல, பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு அமலில் இருக்கிறது என்பதுதான் சட்டப்படியான நிலை. எனவே, நீதிபதி பாப்டேவின் கூற்று அப்பட்டமாகவே சட்டவிரோதமானதாகும்.
♦ ♦ ♦
இந்து மதத்தில் காணப்படும் சாதி, தீண்டாமை போன்ற பல்வேறு மனிதத் தன்மையற்ற பழக்க வழக்கங்கள் குறித்து யாரேனும் சங்கிகளிடம் விவாதித்தால், உடனே அவர்கள் இஸ்லாத்திலும், கிறித்தவத்திலும் காணப்படும் குற்றங்குறைகள் குறித்துப் பட்டியல் போட்டுக் கேட்டவரின் வாயை மூடிவிட எத்தணிப்பார்கள். அடுத்தவன் தவறைக் காட்டித் தனது தவறை நியாயப்படுத்தும் இந்த குறுக்குவழியைப் பயன்படுத்தித்தான் சபரிமலைத் தீர்ப்பு குறித்துத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களைப் பெரும்பான்மை நீதிபதிகள் தரப்பு கிடப்பில் போட்டுள்ளனர்.
ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையுடைய பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் வேறு சில பிரச்சினைகளையும், அம்சங்களையும் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டியிருப்பதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்:
மசூதி மற்றும் தர்காக்களில் முஸ்லிம் பெண்கள் சென்று வழிபாடு செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை; பார்சி மதத்தைச் சேர்ந்த பெண்கள், பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், தமது புனிதமான ஆக்யாரி கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்குள்ள தடை; போரா முஸ்லிம் பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் மதப் பழக்கம், அம்மதத்தின் இன்றியமையா நடவடிக்கையா? ஆகியவற்றோடு, மதம் மற்றும் மத நிறுவனங்களுக்கு அரசியல் சாசனப் பிரிவுகள் 25 மற்றும் 26 வழங்கியிருக்கும் உரிமைகளுக்கும், அரசியல் சாசனப் பிரிவு 14 வழங்கப்பட்டிருக்கும் தனிநபர் உரிமைகளுக்கும் இடையேயான உறவில் எது தீர்மானகரமானது? அரசமைப்பு சட்டத்தின்படியான ஒழுக்கம் மத ஒழுக்கத்தின் மீது மேலாண்மை செலுத்த முடியுமா? ஒரு மதத்தின் இன்றியமையாத நடவடிக்கை என்பதை யார் தீர்மானிப்பது? தனி வகையறாக்கள் என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒரு மதத்தைச் சேராத வெளியாள் அம்மதத்தின் நம்பிக்கைகள் குறித்துப் பொதுநல வழக்குத் தொடுப்பதை எந்தளவில் நீதிமன்றத்தில் அனுமதிப்பது?
இவற்றுள் முதல் மூன்றுக்கு முஸ்லிம் மற்றும் பார்சி பெண்களின் வழிபாட்டு உரிமை, போரா முஸ்லிம் பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைத்தல் எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளில் வெவ்வேறு நிலைகளில் விசாரணையில் உள்ளன. மற்ற அம்சங்களைப் பொருத்தவரை, சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் அவற்றைத் தமக்குத்தாமே எழுப்பி, அவற்றையும் பரிசீலிக்க வேண்டுமெனக் கோருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் பாரிய தவறுகள் அல்லது குறைபாடுகளை அம்மனுக்கள் சுட்டிக் காட்ட வேண்டும். அல்லது வழக்கு விசாரணையில் இருந்தபோது நீதிமன்றத்திடம் அளிக்கப்படாத சாட்சியங்கள், விவரங்கள் புதிதாகக் கிடைத்து, அதன் அடிப்படையில் மறு ஆய்வு கோரலாம். இப்படி எந்தவிதமான குறிப்பான குறைபாடுகளோ, சாட்சியங்களோ மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்படாவிட்டால், அவற்றைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பது மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு அனுமதிப்பதற்கான சட்டவிதிமுறை.
ஐயப்ப பக்தர்கள் தனி வகையறாக்கள் கிடையாது; 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடத் தடை விதிப்பது அப்பெண்களின் மதச் சுதந்திரத்தைப் பறிப்பதால், அதனை அங்கீகரிக்க முடியாது; தனி நபரின் உரிமையைப் பறிப்பதை மத உரிமையாக அங்கீகரிக்க முடியாது; இவ்வயதுடைய பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதைத் தடை செய்யும் கேரள அரசின் இந்து கோவில்கள் பொதுவழிபாட்டுச் சட்டத்தின் பிரிவு 3(b) அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமின்றி, இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் சுதந்திரமாகக் கோவிலுக்குச் சென்று வழிபடலாம் எனக் கூறும் அச்சட்டத்தின் பிரிவு 3 எதிரானது; இவ்வயதுடைய பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதைத் தடை செய்வது இந்து மதத்தின் இன்றியமையா நடவடிக்கையாகக் கருத முடியாது என்பதால், அத்தடை அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியற்றது; மேலும், தீட்டு என்ற பெயரில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமையின் இன்னொரு வடிவமே” என்ற வாதங்களின் அடிப்படையில்தான் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் சபரிமலையில் வழிபடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
ஏற்கெனவே அளிக்கப்பட்ட இத்தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தவறுகள் எதுவும் சுட்டிக் காட்டப்படவில்லை; எந்தவொரு புதிய சான்றும் காட்டப்படவில்லை” என்பதைச் சுட்டிக்காட்டித்தான் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் அம்மனுக்களைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பை உறுதிசெய்தும் உத்தரவிட்டனர். மேற்குறிப்பிட்ட மனுக்கள் மட்டுமல்ல, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகிய மூவரும்கூட ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் எந்தவொரு தவறையும் சுட்டிக் காட்டவில்லை. தீர்ப்பு குறித்து எந்தவொரு தவறையும் சுட்டிக்காட்டாமலேயே, இம்மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தன்னிச்சையாகப் பரிந்துரைத்திருப்பது சட்டவிரோதமானது என மூத்த வழக்குரைஞர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும், முஸ்லிம் மற்றும் பார்சி பெண்களின் வழிபாட்டு உரிமை குறித்த வழக்குகளை வெவ்வேறு உச்ச நீதிமன்ற அமர்வுகள் விசாரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளின் மனுதாரர்களுக்கும் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளுக்குமே தெரியாமலும், அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலும் அந்த வழக்கு விசாரணைகளையும் தன்னிச்சையாக முடக்கியிருக்கிறார்கள் கோகோய் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள். இது சட்டவிரோதம் மட்டுமல்ல, அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
படிக்க :
♦ அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
♦ பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !
பெரும்பான்மையினரின் இந்தத் தீர்ப்பை மறுத்து ஒரு மறு ஆய்வு மனுவை ஏற்பதற்கான வரையறையை நீதிபதி நாரிமன் சுட்டிக்காட்டுகிறார். இந்த நீதிமன்ற அமர்வின் முன் இருப்பது இந்த நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே அளித்த தீர்ப்பு மீதான மறு ஆய்வு மனுக்கள் மட்டும்தான். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் எதிர்காலத்தில் அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு, அந்நீதிமன்றம் கருத்தில் கொள்ளக்கூடிய அல்லது கொள்ளாத மற்ற பிரச்சினைகள் எல்லாம், நிச்சயமாகச் சொன்னால், இந்த நீதிமன்ற அமர்வின் முன் இல்லை. இதன் விளைவாக, நீதிமன்றம் தலையீடு செய்யக்கூடிய வரம்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த அமர்வு மறு ஆய்வு மற்றும் ரிட் மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக” உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பருவ வயதுடைய பெண்கள் சபரிமலையில் வழிபட அனுமதித்து அளிக்கப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட், தனி மனித உரிமையைவிட மத நிறுவனங்களின் உரிமை பெரிது கிடையாது; மத ஒழுக்கத்தைவிட அரசியல் சாசன ஒழுக்கம்தான் தீர்மானகரமானது, ஒரு மதத்தின் இன்றியமையா நடவடிக்கையானது சமூகத்தின் ஒரு பிரிவினரை ஒதுக்குவதாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது” என்பனவற்றை அரசியல் சாசனச் சட்டப்படி விளக்கியிருக்கிறார்.
நீதிபதி சந்திரசூட் அம்மூலத் தீர்ப்பில் அளித்திருக்கும் இந்த விளக்கங்களை மறுதலிக்காமல், அவரது தீர்ப்பில் ஆராயப்பட்ட பிரச்சினைகளைப் புதியவை போல தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட மூவரும் பரிந்துரைப்பது கயமைத்தனமானது. மேலும், தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட வழக்குகளைத் தூக்கிவந்து சபரிமலை வழக்கில் இணைப்பது சூழ்ச்சிகரமானது. பார்ப்பன பாசிசத்தின் அரசியல் பண்பாட்டு நிலைப்பாடுகளை எந்த விதத்திலும் கேள்விக்குள்ளாகாமல் பாதுகாப்பதும் அவற்றுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதும்தான் இந்த தீர்ப்பின் நோக்கம்.
ராம ஜென்மபூமி விவகாரத்தைத் தொடர்ந்தும் உடனடியாகவும் உச்ச நீதிமன்றத்தால் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இன்னொரு வெகுமதி இது.
ஆர்.ஆர்.டி.
மின்னூல் :
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
யார் இந்த பிந்து அம்மிணி.. கஞ்சா விற்பவள் போல இருக்கிறாள்.. மூஞ்சியே சரியில்லை .. இதெல்லாம் சபரி மலைக்கு பக்தர் என்கிற போர்வையில் வருமாம், இந்துக்கள் சகோதரர்கள் ஏன் கொதிப்படைய மாட்டார்கள்
படித்த ‘பொறுக்கி’ ரெபெக்கா மேரி…
இவருக்கு இந்து மதத்தின் மேல் எதற்காக காதல் என்று இப்போதுதான் புரிகிறது. மனிதர்களை உருவத்தின் பெயரால் இழிவுபடுத்துவது இந்து மதத்தில் வசதியல்லவா..!
சகோதரி பிந்து செய்தது தவறுதான்… இப்படி ஓடாமல் திரும்பி நின்று அந்த “வீர” இந்துவின் முகத்தில் முஷ்டியை முறுக்கி ஒன்று விட்டிருந்தால் அந்த வலி ரெபேகா மேரி வரை புரிந்திருக்கும்..