எழுத்தாளரும் கல்வியாளருமான எம்.எம்.கல்புர்கி, 2015-ம் ஆண்டு இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கர்நாடக போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரவீன் பிரகாஷ் சதூர் (27) கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது, கல்புர்கி கொல்லப்படுவதற்கு முன் இறுதி பயிற்சி முகாம் மங்களூர் அருகே உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நடந்ததாகவும் இந்த பயிற்சியை சனாதன் சன்ஸ்தா ஏற்பாடு செய்ததாகவும் சதூர் தெரிவித்துள்ளார்.
கல்புர்கியை சுட்டுக்கொல்ல கணேஷ் மிஷ்கின் (27) என்பவரை கல்புர்கியின் வீடுவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தது சதூர் என்பதும் போலீசு விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது சதூர் தெரிவித்த ஆயுத பயிற்சி எடுக்கப்பட்ட ரப்பர் தோட்டம், மங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் கே. ஆனந்த் காமத் என்பவருக்கு சொந்தமானது. இவர் சனாதன் சன்ஸ்தாவின் துணை அமைப்பான ஜனஜக்ருதி சமிதியில் இயங்கிவருபவர் என போலீசு விசாரணை தெரிவிக்கிறது.
சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கிலும் இவருடைய தொடர்பை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. கவுரியின் கொலைத்திட்டத்துக்கு வாகனங்களை அளித்து உதவியதாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோதும், ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இவர் மீது வழக்கு பதியப்படவில்லை.
தர்மஸ்தலம் செல்லும் வழியில் 25 ஏக்கரில் அமைந்துள்ள ஆனந்தின் ரப்பர் தோட்டத்தில்தான் தங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கவுரி லங்கேஷ் கொலையில் கைதான பலரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
“2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மங்களூர் அருகே உள்ள பிலாத்பெட்டா ரப்பர் தோட்டத்தில் ஒரு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெல்காவியிலிருந்து நாங்கள் நால்வரும் தர்மஸ்தலா சென்றிருந்தோம். அமோல் காலே, மிதுன் என்கிற கணேஷ் மிஷ்கின், கோவிந்த், மெக்கானிக், சரத் கலாஸ்கர், பெங்காலி மொழி பேசிய இருவர் அந்த முகாமில் எங்களுடன் பங்கேற்றனர்” என கவுரி லங்கேஷ் வழக்கில் ஒரு சாட்சி சொன்னதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது.
படிக்க :
♦ மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
“முகாமின் இரண்டாம் நாள், எங்களுக்கு துப்பாக்கியும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் தரப்பட்டது. ரப்பர் மரங்களைக் குறிவைத்து சுடும்படி எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது” எனவும் சாட்சியத்தின் வாக்குமூலம் கூறுகிறது.
பெங்காலி மொழி பேசியவர்களில் ஒருவர், முகாமுக்கு வெடிகுண்டு செய்முறை பயிற்சியளிக்க வந்த பிரதாப் அஸ்ரா என்பவர் எனவும் பலர் சாட்சியமளித்துள்ளனர். இன்னொருவர், மெக்கா மசூதி, மலேகான் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கல்புர்கி கொலை வழக்கில் சதூர் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் அளித்த நிலையில் பயங்கரவாத முகாமாக செயல்பட்ட ரப்பர் தோட்டத்துக்கு போலீசு அவரை அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், ஆதாரங்கள் எதையும் அந்த இடத்திலிருந்து போலீசால் கைப்பற்ற முடியவில்லை.
2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே, கல்வியாளர் எம்.எம். கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து பயங்கரவாத அமைப்பால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கான பல்வேறு ஆதாரங்கள் கடந்த ஐந்தாண்டுகளாக வெளிவந்த கொண்டிருந்த போதிலும், இந்தப் படுகொலைகளை நடத்திய ‘சனாதன் சன்ஸ்தா’ சுதந்திர அமைப்பாகவே ‘சேவை’ ஆற்றிக்கொண்டிருக்கிறது.
தமிழாக்கம் : அனிதா
செய்தி ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்.