நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 11

முக்கிய நபர் தமது அறையில் உட்கார்ந்து, பல ஆண்டுகளாகத் தாம் பார்க்காத தமது பழங்கால நண்பரும், குழந்தைப் பருவத் தோழரும் சமீபத்தில் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்திருந்தவருமான ஒருவருடன் மிக மிகச் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் பஷ்மாச்கின் என்ற ஒருவன் அவரைக் காண விரும்புவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. “யார் அது?” என்று வெடுக்கென வினவினார் முக்கிய நபர். “யாரோ எழுத்தனாம்” எனப் பதில் கிடைத்தது. “ஓ அப்படியா? காத்திருக்கச் சொல்லுங்கள். இப்போது எனக்கு நேரமில்லை” என்றார் முக்கிய நபர்.

முக்கிய நபர் சொன்னது பச்சைப் பொய் என்பதை இங்கே கூறிவிடுவது நல்லது. அவருக்கு நிறைய நேரம் இருந்தது. அவரும் நண்பரும் பேச வேண்டியதையெல்லாம் எப்போதோ பேசி விட்டார்கள். வெகு நேரமாகவே நடு நடுவே நீண்ட மௌனத்தில் ஆழ்ந்துவிடுவதும், மௌனத்துக்கு மத்தியில் ஒருவரையொருவர் முழங்காலில் அடித்து, “ஆச்சா, இவான் அப்ராமவிச்!” “அப்படியாக்கும் சேதி, ஸ்தெபான் வர்லாமிச்!” என்பதுமே அவர்களுடைய உரையாடலாகத் திகழ்ந்தது. இருந்தபோதிலும் அவர் எழுத்தனைக் காத்திருக்கச் சொன்னது எதற்காகவென்றால், அரசுப் பணியிலிருந்து வெகுகாலத்துக்கு முன்பே விலகி, கிராம வீட்டிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த நண்பருக்கு, எழுத்தர்கள் எவ்வளவு நேரம் தமது பேட்டிக்காக நடையில் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காகத் தான். கடைசியில் வேண்டிய அளவு பேசிவிட்டு, அல்லது உண்மையில் மௌனமாயிருந்து முடிந்து, வசதியான சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து இன்பமாகச் சுருட்டு புகைத்து முடிந்ததும் முக்கிய நபர் திடீரென எதோ நினைவுக்கு வந்தது போன்று, கத்தைக் காகிதங்களும் கையுமாகக் கதவருகே நின்று கொண்டிருந்த தமது செயலாளனை விளித்து, “அங்கே யாரோ எழுத்தன் காத்திருக்கிறான் போலிருக்கிறது பேட்டிக்கு. அவனை வரச் சொல்லும்” என்றார்.

அக்காக்கியின் எளிய தோற்றத்தையும் பழைய உடுப்பையும் கண்டதும் முக்கிய நபர் சட்டென அவன் பக்கம் திரும்பி, தமக்கு தற்போதைய வேலையும் ஜெனரல் பதவியும் கிடைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தனிமையில் நிலைக் கண்ணாடிக்கெதிரே நின்று பயிற்சி செய்து கொண்ட கடுமையான குரலில், “உமக்கு என்ன வேண்டும்?” என்று வெடுக்கெனக் கேட்டார்.

ஏற்கெனவே வேண்டிய அளவு அச்சமும் நடுக்கமும் நிறைந்திருந்த அக்காக்கிய், சற்றுத் தடுமாற்றங் கொண்டு, “வந்து…” “அதாவது…” என்று அசைச் சொற்களை வழக்கத்துக்கு அதிகமாகவே உபயோகித்து, தன் மேல்கோட்டு புத்தம் புதியதென்றும் மனிதத்தன்மையற்ற முறையில் அது அபகரிக்கப்பட்டு விட்டதென்றும், தான் முக்கிய நபரிடம் வந்திருப்பது, அவர் தக்கவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லியோ, நகரப் போலீஸ் கமிஷனருக்கோ வேறு யாருக்கேனுமோ எழுதியோ தனக்கு மேல்கோட்டு திரும்பக் கிடைக்கச் செய்வார் என்ற நம்பிக்கையுடனேயே என்றும், தன்னால் இயன்றவரை, குழறும் நா அனுமதித்த அளவுக்கு விவரமாக விளக்கினான். அவன் இவ்வாறு தம்மை அணுகியது முறையற்ற சொந்தம் பாராட்டுதல் என்று என்ன காரணத்தாலோ முக்கிய நபருக்குப் பட்டது. “என்ன அய்யா, ஒன்றும் புரியவில்லையே! ஒழுங்கான நடைமுறை உமக்குத் தெரியாதா என்ன? இங்கே எதற்காக வந்தீர்? விவகாரத்தை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதோ உமக்கு? இதைப் பற்றி விண்ணப்பம் எழுதி நீர் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பம் தலைமை எழுத்தர் பார்வைக்கு வந்திருக்கும், அதாவது அலுவலகப் பிரிவின் தலைவருக்கு; அவர் அதை என் செயலாளருக்கு அனுப்பியிருப்பார், செயலாளர் என் கவனத்துக்கு அதைக் கொணர்ந்திருப்பார்…” என்று கடுகடுத்த குரலில் சீறினார்.

அக்காக்கிய் தன்னிடமிருந்த சொற்ப மனோ தைரியத்தை முழுவதும் திரட்டி, மேல்காலெல்லாம் வியர்த்துக் கொட்ட, “ஆனால், பெரிய துரை அவர்களே, நான் மாட்சிமை பொருந்திய தங்களைத் தொந்தரவுபடுத்தத் துணிந்தது எதனாலென்றால், செயலாளர்கள் இருக்கிறார்களே இவர்கள்… அதாவது… வந்து… நம்பகமானவர்கள் அல்லர்…” என்று ஆரம்பித்தான்.

படிக்க:
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

“என்ன? என்ன? என்ன சொன்னீர்?” என்றார் முக்கிய நபர். “இம்மாதிரிப் பேச எங்கிருந்து ஐயா வந்தது உமக்கு நெஞ்சுத் துணிச்சல்? இந்த உதவாக்கரை எண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன உமக்கு? தங்கள் தலைவர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் எதிராக இளைஞர்களுக்கிடையே பரவிவரும் இந்தக் கலக உணர்ச்சிக்கு என்ன ஐயா அர்த்தம்?” என்று விளாசினார். அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது என்பதை முக்கிய நபர் கவனிக்கவில்லை போலும். அவனை இளைஞன் என்று அழைத்தது, எழுபது வயதானவனுடன் ஒப்பிட்டால் அவன் இளைஞன் என்ற பொருளிலேயே என நினைக்க வேண்டியிருக்கிறது. “யாரிடம் இதையெல்லாம் சொல்லுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு? உம் எதிரே நிற்பது யார் என்பது புரிகிறதா ஐயா? புரிகிறதா ஐயா இது? புரிகிறதா ஐயா? உம்மைத் தான் கேட்கிறேன்.”

இவ்வாறு கூறுகையில் அவர் காலைத் தொப்பென்று அடித்துக் குரலை உச்சத் தொனிக்கு உயர்த்திவிடவே, அதனால் குலைபதறியது அக்காக்கிய் அக்காக்கியெவிச் ஒருவனுக்கு மட்டுமே அல்ல. அக்காக்கிய் கதி கலங்கிப்போய், கால்கள் குடுமாற, மெய்விதிர்க்க, நிற்க முடியாமல் தத்தளித்தான். வாயில் காப்போர் ஓடிவந்து தாங்கியிராவிட்டால் அவன் துவண்டு தரையில் சாய்ந்திருப்பான். அநேகமாக உணர்ச்சியற்ற நிலையில் அவனை வெளியே கொண்டு போனார்கள். விளைவு தாம் எதிர்பார்த்ததையும் விஞ்சி விட்டது என்பதைக் கண்டு திருப்தியடைந்த முக்கிய நபர், தமது வாய்ச்சொல் ஒருவனை உணர்விழக்கச் செய்யும் வன்மை கொண்டது என்ற எண்ணத்தால் உவகை மீதார, தமது நண்பர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவரைக் கடைக் கண்ணால் நோக்கினார்; நண்பர் மனநிம்மதியின்றித் தவிப்பதையும், தாமே அரண்டு போயிருப்பதையும் பார்த்து அவருக்கு மன நிறைவு ஏற்படாமலில்லை.

எப்படி மாடிப்படி இறங்கினோம், எப்படித் தெருவுக்கு வந்தோம் என்பது ஒன்றுமே அக்காக்கிய்க்கு நினைவில்லை. அவன் கை கால்கள் உணர்விழந்து மரத்துப் போய் விட்டன. வாழ்வில் ஒரு முறைகூட அவன் ஒரு முக்கிய நபரால், அதுவும் வேறு அலுவலக முக்கிய நபரால் இவ்வளவு கடுமையாக அதட்டி உருக்கப்பட்டது கிடையாது. வீதியில் இரைச்சலுடன் அடித்துக் கொண்டிருந்த பனிப் புயலில், நடைபாதையிலிருந்து இடறி இடறி விழுந்தவாறு நடந்தான்; காற்றோ, பீட்டர்ஸ்பர்க் வழக்கப்படி எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாச் சந்துகளிலிருந்தும் எககாலத்தில் வீசிக் கொண்டிருந்தது. கணப்போதில் அவன் தொண்டை அழன்றுபோயிற்று, எப்படியோ தள்ளாடியவாறு வீடு வந்து சேர்ந்ததும் அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. மேலெல்லாம் வீக்கங்கண்டிருந்தது. உடனே படுக்கையில் படுத்தான். அதிகாரிகளின் சரியான விளாசல் சில சமயங்களில் அவ்வளவு வன்மையுள்ளதாகும்!

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க