லங்கையில், “கொழும்பு துறைமுக நகரம்” (Clombo Port City) என்ற பிரம்மாண்டமான நகரத்தை சீனா அமைக்கவுள்ளது. அந்நகரத்தை நிர்வகிக்கும் ஆணையம் தொடர்பான “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டம்” (Colombo Port City Economic Commission Act) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த மே 19-ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

2014-ல் சீன அதிபர் ஷி ஜின்பிங் இலங்கைக்கு வருகை தந்தபோது, 1.4 பில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாகக் கொண்டு ராஜபக்சே அரசுடன் சீன அரசு போட்டுக் கொண்ட பெருந்திட்டமே கொழும்பு துறைமுக நகரத் திட்டமாகும்.

படிக்க :
♦ இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
♦ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

இலங்கையில் ராஜபக்சே கும்பலுக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே – அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசாங்கம் சுற்றுச்சூழல் காரணங்களை முன்வைத்து 2015-இல் இத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது, உலக மேலாதிக்க அமெரிக்கா மற்றும் பிராந்திய மேலாதிக்க இந்தியாவின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். 2019-இல் சீன ஆதரவு ராஜபக்சே கும்பல் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிறகு இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய திட்டம் என்று கோத்தபய ராஜபக்சே அரசால் வர்ணிக்கப்படும் இத்துறைமுக நகரத் திட்டமானது, உண்மையில் அந்நாட்டின் மீதான சீனாவின் ஆதிக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்தோடு, தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவத் தளமாக இலங்கையை மாற்றுவதில் முக்கியமான நகர்வைத் தொடங்கியுள்ளது.

சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்காக இக்கண்டங்களில் உள்ள பல நாடுகளுக்கு திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடனை அளித்து, அந்நாடுகளைத் தனது போர்த்தந்திர நோக்கத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் உத்தியை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசானது, ஈராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை ஆக்கிரமித்து தனது காலனியாக்கிக் கொண்டது என்றால், சீனாவானது, வளரும் நாடுகளுக்குக் கடன் கொடுத்து, அக்கடனுக்கு ஈடாக அந்நாட்டின் சில பகுதிகளைத் தனது காலனியாக்கிக் கொண்டு வருகிறது. இவ்வாறு சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் நாடுகளின் பட்டியலில், தெற்காசியப் பிராந்தியத்தில் அண்மைக்காலச் சான்றாக இலங்கை விளங்குகிறது.

தெற்காசியப் பிராந்தியத்தில், ஆசிய – ஐரோப்பிய கடல் போக்குவரத்தின் நடுவே இலங்கை அமைந்திருப்பதால், புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் (Belt & Road) வாயிலாக அந்நாட்டைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர சீனா தொடர்ந்து தீவிரமாக முயற்சித்தது.

2010-ஆம் ஆண்டில், 361 மில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாகக் கொண்டு அம்பாந்தோட்டை (Hambantota) எனும் இடத்தில் துறைமுகம் அமைப்பதற்காக, சீனாவின் அரசு வங்கியான எக்சிம் வங்கியானது 85% பணத்தை (306 மில்லியன் டாலரை 6.5% வட்டிக்கு) இலங்கைக்குக் கடனாக அளித்தது. மேலும், 2012-க்குப் பின்னர், இரு தவணைகளாக, முறையே 300, 600 மில்லியன் டாலரைக் கடனாக அளித்தது.

2017-இல், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கும் மேலான இக்கடன் சுமையானது, இலங்கையின் கழுத்தை நெறித்தது. வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் சீனாவின் அரசு நிறுவனமான சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) என்ற நிறுவனத்திடம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுக் கொண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70% பங்கையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலப்பரப்பையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை அரசு சீனாவுக்கு எழுதிக் கொடுத்தது. அப்போது இலங்கையில் கடும் அந்நிய செலாவணி பற்றாக்குறை இருந்ததால், தனது இந்த அடிமைத்தனமான ஒப்பந்தத்தை சாதனையாகப் பீற்றிக் கொண்டது அப்போதைய ரணில் விக்ரம சிங்கே அரசு. தெற்காசியப் பிராந்தியத்தில், ஆசிய – ஐரோப்பிய கடல் போக்குவரத்தின் நடுவே அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றுவதில் சீனா தீவிரமாக இருந்துள்ளதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

கொழும்பு துறைமுக நகரம் : இலங்கையில் ஒரு சீனத் தீவு

இலங்கையின் தலைநகரான கொழும்புவின் கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 269 ஹெக்டேர் (660 ஏக்கர்) நிலப்பரப்பை மீட்டமைத்து (land reclamation – அதாவது, கடலை நிலமாக்கி) வானுயரக் கட்டிடங்களுடன் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் – என ஒரு பிரம்மாண்டமான நகரத்தைக் கட்டுவதும், அந்நகரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (Special Economic Zone – SEZ) நிறுவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 2040-இல் இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இது, இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய திட்டம்; இதன் மூலம் ஆண்டுக்கு 11 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும்; இலங்கையின் கடன்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்; துபாய், சிங்கப்பூர், ஹாங்காங்கைப் போல, தெற்காசியாவின் நுழைவாயிலாக கொழும்பு நகரம் மாறும்; மிகப் பெரிய வணிக நகராக வளரும்; ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; ஏராளமான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும்” – என்றெல்லாம் இத்திட்டத்தைப் பற்றி ஊதிப் பெருக்கி பிரச்சாரம் செய்கிறது, கோத்தபய அரசு. ஆனால், இத்திட்டம் “சீனாவின் காலனியாக இலங்கையை மாற்றுகிறது” என முதலாளித்துவ பத்திரிகைகளே எழுதுகின்றன.

சீனத் துறைமுகப் பொறியமைப்பு நிறுவனம் (China Harbour Engineering Company – CHEC) என்ற சீன அரசின் நிறுவனம், இந்த நில மீட்டமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டதிற்காக 1.4 பில்லியன் டாலர்களை இலங்கையில் சீனா முதலீடு செய்துள்ளது. அதற்குக் கைமாறாக மீட்டமைக்கப்பட்ட 269 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு அளித்துள்ளது, இலங்கை.

இவ்வாறு கட்டப்படும் நகரத்தை நிர்வகிக்கும் அதிகார அமைப்பு தொடர்பான சட்டம்தான் மே 19-இல் நிறைவேற்றப்பட்ட “கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணையச் சட்டம்” (Colombo Port City Economic Commission Act) ஆகும். மார்ச் 23-இல் இச்சட்டம் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டபோதே கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் கிளப்பியது. மிக முக்கியமாக, இம்மசோதாவில் உள்ள பல கூறுகள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் அந்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானவையாக உள்ளன என்றும், இம்மசோதா மீது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் 19 மனுக்களை இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.

கொழும்புவின் கடலில் இருந்து மீட்டமைக்கப்பட்டுள்ள 660 ஏக்கர் நிலப்பரப்பு

அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் உச்சநீதி மன்றத்தால் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, இம்மசோதாவுக்கெதிரான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இலங்கை அரசுக்கு இரண்டு பரிந்துரைகளைச் செய்தது.

ஒன்று, இதை அப்படியே சட்டமாக்க வேண்டுமானால், மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியம். இரண்டாவது, இதில் உள்ள சில கூறுகளைத் திருத்திவிட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டு இதைச் சட்டமாக்கிக் கொள்ளலாம் என்று கூறியது. இந்த இரண்டாவது வழிமுறையின் மூலம், மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு வழியமைத்துக் கொடுத்தது நீதிமன்றம்.

எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல இரண்டாவதைத் தேர்வு செய்தது, கோத்தபயா அரசு. அடிப்படையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இம்மசோதாவில் சில திருத்தங்களை மட்டும் செய்து, 225 பேரைக்கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 149 பேரின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது.

இச்சட்டத்தின்படி, அந்நகரத்தை நிர்வகிக்க “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம்” என்ற அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. அந்நகரில் வரிவசூலித்தல், திட்டங்களை வகுத்தல், நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இவ்வாணையத்துக்கே வழங்கப்படவுள்ளது. இலங்கையில் ஒரு ஆட்சி இருக்கும்போதே, அதற்குக் கட்டுப்படாத தனித்த அதிகார அமைப்பாகச் செயல்படும் தன்மை கொண்டதாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் மிக முக்கியமான 25 சட்டப் பிரிவுகளிலிருந்து இவ்வாணையத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சட்டத்தின்படி, துறைமுக நகருக்குள் வரக்கூடிய முதலீட்டாளர்கள், நிலம் வாங்குபவர்கள், வீடுகளை வாங்குபவர்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகிய அனைத்துக்கும் இவ்வாணையமே அனுமதி வழங்கும். துறைமுக நகருக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், நிர்வாக ரீதியிலான தீர்மானங்களை எடுத்தல், அனுமதிகளை வழங்குதல், விதிவிலக்குகளை மேற்கொள்ளுதல், தேவையான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களையும் இவ்வாணையமே மேற்கொள்ளும்.

“இலங்கை குடிமகன் ஒருவர், கொழும்பு துறைமுக நகருக்குள் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும்; விசா-வை ஒத்த சிறப்பு அடையாள அட்டை நடைமுறையொன்று அமல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது; அந்நகருக்கு சென்று திரும்புவதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படவும் வாய்ப்புள்ளது” என்று இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

7 பேரைக் கொண்ட இவ்வாணையத்தை இலங்கை அதிபர்தான் அமைப்பார் என்ற போதிலும், நாடாளுமன்றத்தால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும், சீனர்களையும் இவ்வாணையத்தில் நுழைக்கக் கூடிய அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இவ்வாணையத்தால் தீர்மானிக்கப்படும் வெளிநாட்டு நாணயமே – சீனாவின் யுவான் நாணயமே – இந்நகரத்தில் புழக்கத்தில் இருக்கும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், கொழும்பு துறைமுக நகரம் என்பது இலங்கையின் நிலத்தில் ஒரு சீனத் தீவாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஆணையத்தின் வழியாக, இலங்கையின் நிலப்பரப்பில் சீனா தனது சொந்த ஆட்சியையே நடத்தவிருக்கும் சித்திரம் நம்முன் தெரியும்.

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் இரண்டையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, அவற்றை வணிக நோக்கங்களுக்கு மட்டுமின்றி, இராணுவத் தளமாகவும் பயன்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

ஒருபுறம், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு “குவாட்” கூட்டணியை அமெரிக்கா நிறுவியுள்ளது. மற்றொருபுறம், தெற்காசியப் பகுதியில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா துடிக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டாபோட்டி தீவிரமடைந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் 8 பில்லியன் டாலரை இலங்கையின் ‘வளர்ச்சித் திட்டங்களுக்கு’ சீனா கடனாக வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழினவாதிகளும் இலங்கையின் எதிர்க்கட்சிகளும்

நிலைமையோ இவ்வாறு இருக்க, ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின்போது இந்தியாவை நம்பச் சொல்லி அம்மக்களுக்குத் தொடர்ச்சியாக துரோகம் செய்த தமிழினவாதிகளோ, இப்பிரச்சனையை இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈழத் தமிழர்களின் நலனுக்கு மட்டுமே எதிரானது என்பது போலப் பேசி வருகின்றனர்.

ம.தி.மு.க-வின் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவின் இராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் அபாயம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கைக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியில் இராணுவத் துருப்புகளை நிறுத்தத் துணிந்தால் தமிழ்நாட்டிற்கு கேடு விளையும். எனவே, ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று சீனவுக்கெதிராக மோடி அரசுக்கு கொம்பு சீவி விடுகிறார்.

அதேபோல, பா.ம.க-வின் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியப் பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரையில்லாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதன்மூலம் இந்தியாவைக் கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்ட நாள் கனவாகும். தென்னிந்தியாவில் இலங்கை தாக்குதல் நடத்த முயன்றால், இலங்கை வழியாகத்தான் நடைபெறக் கூடும் என்பதை நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.” இதை எதிர்கொள்ள “ஐ.நா மூலம் ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துக் கொடுத்து, இந்தியாவின் வலிமையை இலங்கையில் அதிகரிக்க வேண்டும்” என்று கூப்பாடு போடுகிறார்.

இந்திய வெளியுறவுத்துறையே “இதை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும்” என்று அறிக்கைவிட்டு அடக்கி வாசிக்கும்போது, இவர்களோ இந்தியாவுக்கு ஆபத்து, தமிழகத்துக்கு ஆபத்து, மோடி அரசே எதாவது செய்யுங்கள் என்று பொங்குகிறார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் இந்தியாவின் (குறிப்பாக பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின்) சீன எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒத்துப்போவதோடு, சீனாவுக்கெதிராக தமிழ் மக்களிடம் தேசியவெறியைக் கிளப்புவதன் மூலம், நாடெங்கும் சீனாவைக் காட்டி தேசவெறியைக் கிளறிவிடும் மோடி அரசுக்குச் சேவை செய்கிறார்கள். ஒருவேளை இதைச் சாக்கிட்டு தமிழகத்தின் எல்லையோரங்களில் இராணுத்தை குவிக்க மோடி அரசு முற்பட்டால், “வேறுவழியில்லை, இப்போதைக்கு மோடி அரசை ஆதரிக்க வேண்டும்” என்றும் இவர்கள் பேசக்கூடும்.

இன்னொருபுறம் ஈழத்தில் உள்ள தமிழினவாதிகளோ, “தமிழ் வின்”, “லங்கா ஸ்ரீ”, “குறியீடு” போன்ற இணைய தளங்களில் எழுதும் கட்டுரைகளில், “இலங்கை நிரந்தரமாக இந்தியாவின் கையைவிட்டுப் போகிறது” என்றும், “ஈழத் தமிழர்களை இந்தியா கைவிட்டதால்தான் அவர்களில் சிலரிடம் சீனாவுக்கு ஆதரவான மனநிலை உருவாகியுள்ளது” என்றும் எழுதுகிறார்கள். இதன் உச்சமாக, “இரண்டுபடும் உலக ஒழுங்கு: இலங்கை யார் பக்கம்? ஈழத்தமிழ் மக்கள் யார் பக்கம்?” என்ற கட்டுரை நேரடியாக, ஈழத் தமிழர்களை அமெரிக்கா தலைமையிலான இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்கிறது.

அதாவது, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கத் துணைநின்ற சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்பதற்காக, ஈழத் தமிழர்கள் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்ல வேண்டும் என்று கூவுகிறார்கள்.

உண்மை என்னவென்றால், ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சிதைக்கவும், அதை ஒடுக்கவும் இந்தியா (காங்கிரசு, பா.ஜ.க. இரு அரசுகளுமே) செய்த அட்டூழியங்கள் ஏராளம். ஈழ விடுதலைப் போராட்டக் குழுக்களை சிதைக்க இந்திய உளவுத் துறையான “ரா” வேலை செய்தது, இலங்கைக்குப் ‘அமைதிப் படைகளை’ அனுப்பி ஈழ மக்களை கொன்றது, பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, இறுதிப் போரின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று இந்திய ராணுவத்தின் மூலம் வியூகம் வகுத்துக் கொடுத்தது – என இலங்கை அரசோடு துணைநின்று இனப்படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிதான் இந்திய அரசு.

தமிழின அழிப்புப் போரின் இறுதி நேரம் வரை ஈழத்திலும் தமிழ்நாட்டிலுமுள்ள தமிழினவாதிகள் எல்லோரும் இந்தியாவை நம்புமாறு, இந்தியாவின் மீதான பிரமையை உருவாக்கினார்கள். இப்போதும் கூட ஈழத் தமிழர்களின் மீதான இனப் படுகொலையை ஐ.நா. மன்றத்தில் சீனா நேரடியாக ஆதரிக்கிறது என்றால், இந்தியா மறைமுகமாக ஆதரிக்கிறது. இவற்றையெல்லாம் மூடிமறைக்கும் இத்தமிழினவாதிகள் ஈழ மக்களுக்கு மீண்டும் துரோகத்தையே செய்கிறார்கள்.

இந்தியாவின் ஆதரவில்தான் தனித் தமிழீழம் அமையும், அதற்கு இந்தியாவையும் அமெரிக்காவையும் எப்படியேனும் பயன்படுத்தலாம் என்ற பிரமையை மக்களிடம் உருவாக்குவது, அமெரிக்காவின் அடியாளாக தெற்காசியப் பிராந்தியத்தில் செயல்படும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை மூடிமறைப்பது, இலங்கையில் முதலீடு செய்துள்ள டாடா, அதானி போன்ற தரகு-அதிகாரவர்க்க முதலாளிகளின் நலன்களுக்கேற்பத்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இருக்கும் என்பதை மூடி மறைப்பது, ஈழத் தமிழர்களின் எதிரிதான் இந்தியா என்பதை மூடி மறைப்பது, இலங்கையும் சீனாவும் மட்டுமே எதிரிகள் என்ற கருத்தை மக்களிடம் உருவாக்குவது – ஆகிய இந்திய அடிவருடித்தனத்தைத் தொடர்ச்சியாக இவர்கள் செய்து வருகிறார்கள்.

தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஒடுக்குவதில் ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகளிடையே கொள்கை வேறுபாடு எதுவும் இல்லை என்பதை நாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். ஆனால் தமிழினவாதிகளோ, ஈழத் தமிழர்களை மீண்டும் இந்திய அரசை நம்புமாறு பிரமைகளை உருவாக்குகிறார்கள்.

இதுவொருபுறமிருக்க, “வரலாற்று ரீதியாக இந்துமாக் கடலில் முதன்முதலில் கடல் கடந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள். அதாவது, சோழர்கள்தான். அவர்கள் ஏறக்குறைய தென்கிழக்காசியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இதன் மூலம் சோழர்களின் நீச்சல் தடாகமாக அது விளங்கியது. 16–ஆம் நூற்றாண்டில் அது ஐரோப்பியர்களின் நீச்சல் தடாகமாக மாறியது. ஆனால், இன்று பசிபிக்கில் மையம் கொண்டுள்ள இந்து சமுத்திர நாடல்லாத சீனா, (அழுத்தம் நம்முடையது) இந்து சமுத்திரத்தில் கால் பதித்துள்ளது” என்று குறிப்பிடுகிறது தமிழ் வின் இணைய தளத்தில் வெளியான மேற்சொன்ன கட்டுரை.

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அகண்ட பாரதக் கனவும், தமிழினவாதிகளின் ‘சோழ சாம்ராஜ்ஜியப் பெருமை’யும் இணையும் புள்ளி இதுவாகும். இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் ஈழ விடுதலையைப் பேசி வந்த தமிழினவாதிகளில் ஒரு பிரிவினரின் உண்மையான முகம் இதிலிருந்து பளிச்சென வெளிப்படுவதை நாம் காணலாம். மேலும், தமிழ்நாட்டிலும் ‘சோழ சாம்ராஜ்ஜியப் பெருமை’ பேசும் சீமான் போன்றோரின் கருத்துகளும் இதே வகையில் இருக்கும் அதிசயத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

இன்னொருபுறம், இத்திட்டத்தை எதிர்த்துச் சவடால் அடிக்கும் ஐக்கிய மக்கள் முன்னணி (SJB), மக்கள் விடுதலை முன்னணி (JVP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளிட்ட இலங்கையின் எதிர்க்கட்சிகளும் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரானவை அல்ல. ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போரின் போது இராஜபக்சே அரசை ஆதரித்த கட்சிகள்தான் இவை.

எனவே, இனவாதிகள் சொல்வது போல், சீனா அமைக்கும் இத்துறைமுக நகரம் இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் மட்டும் எதிரானதல்ல; அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மேலாதிக்கத்திற்கான போட்டாபோட்டி தீவிரமடைந்து வருவதானது, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது. இதில் எந்தவொரு தரப்பையும் தெற்காசிய நாடுகளின் உழைக்கும் மக்கள் ஆதரிக்க முடியாது.

படிக்க :
♦ கோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி
♦ இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி

மேலும், உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவோ, அல்லது அதனுடன் போட்டியிடும் சீனாவோ, அமெரிக்க விசுவாச பிராந்திய மேலாதிக்க வல்லரசான இந்தியாவோ ஈழத் தமிழர்களுக்கு எக்காலத்திலும் விடுதலையைப் பெற்றுத் தராது. சிங்கள, தமிழின உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடியும்.

எனவே, ஈழத் தமிழ் மக்களும் சிங்கள உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து, சொந்த நாட்டைச் சீனாவுக்குத் தாரைவார்க்கும் கோத்தபய அரசுக்கு எதிராகவும், இலங்கையில் நடந்துவரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உள்நாட்டுச் சேவகர்களுக்கும் எதிராகவும், இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டா போட்டிக்கு எதிராகவும், தெற்காசிய பிராந்திய அடியாளான இந்தியாவுக்கு எதிராகவும் உடனடியாகப் போராடியாக வேண்டிய காலம் இது.

தங்கம்

2 மறுமொழிகள்

 1. சீனா , ஆசியாவின் சண்டியர் ஆனதன் விளைவு – முதல் உலகப் போர் என்றால் , அதே சீனா இலங்கையைக் காலனி நாடாக்குவது – மூன்றாம் உலகப் போருக்கு வித்தாகலாம் .

  மிகத் தெளிவான வரலாற்றுக் கட்டுரை..!

  மருது பாண்டியன் –
  பத்திரிகையாளர் ( உசிலம்பட்டி )

 2. சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை -இக்கட்டுரை தரவுகளைக்கொண்டு தர்க்க ரீதியில் பூகோள அரசியல் பேசுகிறது.மூன்றாம் உலக நாடுகளை நவீண காலணியாக்க அமெரிக்கா குண்டுமழைப்பொழிவதும் அதற்கு மாற்றாக சீனா பணமழை பொழிவதும் தங்களது போர் உத்திகளாக கடைப்பிடிப்பதை விளக்குகிறது.இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கும் மேலான கடன் சுமைக்கு ஈடாக இலங்கை,கேந்திரமான தன் நாட்டின் துறைமுகத்தையே தாரை வார்த்துள்ளது.
  மறுபுறம் “தமிழினவாதிகளோ, ஈழத் தமிழர்களை மீண்டும் இந்திய அரசை நம்புமாறு எப்படி பிரமைகளை உருவாக்குகிறார்கள்” என்பதை விளக்கி “பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அகண்ட பாரதக் கனவும், தமிழினவாதிகளின் ‘சோழ சாம்ராஜ்ஜியப் பெருமை’யும் இணையும் புள்ளி இதுவாகும்.” என்பதை துலக்கமாக தெளிப்படுத்துகிறது.
  இந்திய,இலங்கை,ஈழ உழைக்கும் மக்கள் முனைப்புடன் “தெற்காசிய பிராந்திய அடியாளான இந்தியாவுக்கு எதிராகவும் உடனடியாகப் போராடியாக வேண்டிய காலம் இது.”என்று வர்க்க அரசியலை கூர்மைப்படுத்துகிறது.
  இதே காலணிய அரசியல்தான் இந்தியாவிலும் பாசிச மோடி தலைமையில் சுழண்றடிக்கிறது.இந்தியாவின் நீண்ட அழகிய கடற்கரைகளும் துறைமுகங்களும் விமான நிலையங்களும் அதாணி கும்பல்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.இலங்கை மாதிரியே அச்சாக இந்திய நீதிமன்றங்களும் துணைப்போகின்றன.கார்ப்பரேட்டுகளின் காவல் பிராணிகள்தான் இந்த பாஸிட்டுகள் என்று மொழிகடந்து தேசங்கடந்து இவர்கள், நிரூப்பிக்கிறார்கள். ஆனால் உழைக்கும் மக்களை மட்டும் பிரித்து மேய்வதில் குறியாய் இருக்கிறார்கள்.

  பின் குறிப்பு; இம்மாதிரி ஆழமான அரசியல் கட்டுரைகள் எழுதும்போது”கூப்பாடுபோடுகிறார்”
  .”பொங்குகிறார்கள்”.என்று,எதிர்மறைச்சொற்கள் ஒன்றிரண்டு இருந்தாலும் அது கட்டுரையின் திடத்தண்மையை குலைக்கிறது. மேலோட்டமான வசவு வார்த்தைகள் ஆழமான தரவுகளை மூடிவிடும் அபாயம் நிகழும்.கவனம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க