ஊடக அறிக்கை
நாள் : 02.03.2021
ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஒன்றரை வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீட்கப்படவோ சுபீட்சம் நோக்கிக் கொண்டு செல்லப்படவோ இல்லை. அதன் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களினது விலைகள் மிகவும் உயர்ந்து செல்கின்றன. இவற்றால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.
வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து, அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள் நெருக்கடிகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாகி நிற்கின்றனர். இவற்றை மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பவே கோவிட்-19 தொற்று ஊதிப் பெருப்பித்துக் காட்டப்படுவதுடன், அதன் மறைவில் இராணுவ மயமாக்கலும் முன்னெடுக்கப்படுகிறது.
படிக்க:
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
♦ இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
அதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் மீது உருவாகி வளர்ந்துவரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்கே தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்கள் மீதான இன ஒடுக்குமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருமெடுப்பில் ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் இலங்கை முழுவதும் வாழும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும், பேரினவாத ஒடுக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ள தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் பொதுக்கோரிக்கைகளை முன்னிறுத்தி பரந்துபட்ட வெகுஜனப் போராட்டத்தளம் ஒன்றினைத் தோற்றுவிப்பது இன்றைய அவசியமாகி உள்ளது. இத்தகைய வெகுஜன அரசியல் மார்க்கத்தில் பயணிப்பதையே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தி நிற்கின்றது.
எமது நாட்டின் பொருளாதாரம் இன்றைய நெருக்கடி நிலையில் வீழ்ச்சியடைந்து உள்ளமைக்கு அடிப்படைக் காரணமாக, எமது தேசிய வளங்களை விருத்தி செய்து, ஒரு சக்திமிக்க தேசிய பொருளாதாரத்தை, கடந்த நாற்பத்து இரண்டு வருடங்களாக ஆட்சியாளர்கள் கட்டி வளர்க்கத் தவறியதுடன், அந்நிய வல்லரசு சக்திகளின் ஆலோசனைக்கு அமைய நாட்டு வளங்களையும் மக்களின் உழைப்பையும் பல்தேசியக் கம்பனிகளுக்கும் பெரும் முதலாளிகளிற்கும் தாரைவார்த்துக் கொடுத்தமை விளங்குகிறது.
இக்காலப்பகுதியில் மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் எல்லோருமே தாராளமயம், தனியார்மயம், உலகமயமாதல் பாதையில் பயணித்ததன் பாரிய விளைவையே இன்று நாடும் மக்களும் அனுபவித்து நிற்கின்றோம். இதே நாசகாரப் பாதையிலிருந்து இன்றைய கோட்டாபய அரசாங்கமும் விலகத் தயாரில்லாத நிலையிலேயே பயணித்து வருகிறது. ‘சுபீட்சத்தின் நோக்கு’ vd;gJ வெறும் பெயர்ப்பலகை மட்டுமே. அதனாலேயே இன்று அந்நிய வல்லரசுகளின் ஆடுகளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தவறிய அதேவேளை, நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை நியாயபூர்வமான அடிப்படையில் தீர்வுக்குக் கொண்டு வர மறுத்த ஆட்சியாளர்கள், சிங்கள பௌத்த பேரினவாத நிலைநின்று தமிழ், முஸ்லீம், மலையகத் தேசிய இனங்களை ஒடுக்குவதிலும், அவ் ஒடுக்குமுறையைப் போராக மாற்றுவதிலுமே எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளனர். அதனாலேயே கொடிய முப்பது வருடப் போருக்குப் பின்பும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீடித்து வருவதுடன், அதனைத் தீர்வுக்குக் கொண்டு வர எந்த ஆட்சியினரும் தயாராக இல்லாத நிலை தொடர்கிறது.
இதன் அண்மைய எடுத்துக்காட்டாக நியாயமான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, அகிம்சையான முறையில், மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு எதிராகத் தற்போது பொலிசாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நாம் நோக்குகிறோம். இத்தகைய வெகுஜன நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் அச்சுறுதல் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும்.
மக்கள் நீண்டகாலமாக முன்வைக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்லியல், வனவளம் ஆகிய பெயர்களில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்களை விடுவித்தல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி ஆகிய நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வினை வழங்க வேண்டும்.
அதேவேளை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியில் தீர்வுக்கான பொதுக் கோரிக்கைகளை முன்வைக்காது பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை ஆசனங்களுக்கான வாக்கு வங்கி அரசியலையே தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் அரசியல் தரப்புக்கள் முன்வைத்து வருகின்றன.
முஸ்லீம், மலையகத் தமிழ் அரசியல் தரப்புகளில் சிலர் தம்முள் பிரிந்து நின்று சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முட்டுக் கொடுத்தே வந்துள்ளனர். அதற்கான அண்மைய உதாரணமாக ஜனநாயகத்தின் மீது மண் போடும் இருபதாவது திருத்தத்திற்கு இவர்களில் பலர் வழங்கிய திடீர் ஆதரவைக் குறுப்பிடலாம்.
காலங்காலமாக அத்தியாவசிய தேவைகளான காணி, வீடு உரிமை மறுக்கப்பட்டு, முகவரி அற்ற மக்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதிலும் ஆட்சியாளர்கள் தோட்டக் கம்பனி முதலாளிகளுடன் இணைந்து பெரும் ஏமாற்று இழுத்தடிப்புகளையே முன்னெடுத்து வருகின்றனர். மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்டத் துரையால் மேற்கொள்ளப்படும் அடாவடிகளும், அடக்குமுறைகளும் காலணித்தவ கால துரைத்தனத்தின் தொடர்ச்சியாக இன்றும் இடம்பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அதேநேரம் ஆதிக்க மனநிலை கொண்ட தமிழ் அரசியல் தரப்புகள் குறுகிய தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுடன் வாக்கு வங்கி அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் அடிக்கு மேல் அடிவாங்கினாலும், ஏமாற்றுக்களைத் தொடர்ந்தாலும் நீங்களே எங்களின் எசமானர்கள் என்றவாறு இந்திய, அமெரிக்க, மேற்குலகம் மீதான அடிமைத்தன அரசியல் நிலைப்பாட்டினையே தமிழர் தரப்பு தலைமைகள் முன்னெடுத்து வருகின்றன.
பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் அனுபவித்து, இன்றும் அவற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியாது தவிக்கின்ற தமிழ் மக்களை, ஐ.நா. தீர்வு தரும், ஐரோப்பிய ஒன்றியம் தலையிடும், அமெரிக்கா அதற்கு உதவும், இந்தியாவே எமக்கு இரங்கவேண்டும் என்று தொடர்ச்சியாகப் பிழையான வழிகாட்டுதல்கள் மூலம் ஏமாற்றித் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்து வரும் இவர்கள் தமது எசமானர்களை நோக்கி நீங்களே வந்து வடக்கு கிழக்கில் நிலை கொள்ளுங்கள் என்று கேட்கும் துரோகத்தன அரசியலுக்கு செல்லத் தயாராக இருப்பது விசனத்திற்குரியதாகும்.
படிக்க :
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !
♦ பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !
இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த வல்லரசும் இலங்கையில் கால் ஊன்றவும் வளங்களைச் சுரண்டவும் ஆதிக்கம் செலுத்தவும் வேண்டாம் என்ற குரல் தெற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் ஓங்கி ஒலிக்கும் போதே இலங்கைக்குரிய விடுதலையும் சுதந்திரமும் தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையும் கிடைக்க முடியும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
இவ் அறிக்கை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி