ஊடக அறிக்கை

நாள் : 08.06.2019

முஸ்லீம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல்களை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கண்டிக்கின்றது !

சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் கடந்த எழுபது ஆண்டுகளில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கும், மலையகத் தமிழ் மக்களுக்கும் அவ்வப்போது முஸ்லீம் மக்களுக்கும் எதிராக வாய் பிளந்து இரத்தம் குடித்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத வெறிபிடித்த சக்திகள், இப்போது முஸ்லீம் மக்கள்மீது முழுமையாகப் பாய்ந்துகொண்டு நிற்கின்றன.

கடந்த ஏப்ரல் 21 ஈஸ்ரர் தின குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாத வன்முறைகள், சொத்து அழிவுகள் அனைத்து முஸ்லீம் மக்களையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. அத்துடன் சந்தேகத்தின்பேரில் சுமார் இரண்டாயிரத்து முன்னூறு வரையான சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் வயது வேறுபாடின்றிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இனவாத ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் மிக மோசமான முஸ்லீம் விரோதப் பரப்புரைகளை முன்னெடுத்தும் வருகின்றன.

கடந்த காலத்தில் அரசாங்க சுற்றுநிருபத்தின் மூலம் அரச பணிகளில் ஈடுபடும் ஆண்கள் நீளக் காற்சட்டையுடன் சேட் அல்லது தேசிய உடை அணியவேண்டும் எனவும், பெண்கள் சேலை மாத்திரமே அணியமுடியும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லீம் பெண்களின் பாரம்பரிய உடையான ஹபாயா எனப்படும் முழு நீள ஆடை நிராகரிக்கப்பட்டது. பின்பு இச் சுற்றுநிருபம் பல்வேறு தரப்பினரினதும் எதிர்ப்புகளால் இரத்துச் செய்யப்பட்டாலும், இச்செயற்பாட்டின் மூலம் முஸ்லீம் விரோதப் போக்கும், ஆணாதிக்க சிந்தனையும் வெளிப்பட்டு நின்றது கண்கூடு.

அதேபோன்று முஸ்லீம் விரோதத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் பேரினவாத வெறித்தன நோக்குடனேயே அண்மையில் கண்டியில் முன்னெடுக்கப்பட்ட பௌத்த துறவியும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரரின் மூன்று நாட்கள் இடம்பெற்ற உண்ணாவிரதம் அமைந்திருந்தது.

இதில் அண்மையில் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட இன்னொரு பௌத்த துறவியான ஞானசார தேரரின் வன்முறைப் பிரச்சாரமும் பரவலாக இடம்பெற்று வருவது கவனிக்கத்தக்கது.

இவர்களால் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் முஸ்லீம் மக்கள் பயப் பீதியுடனும், பதற்றத்துடனும் தமது அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய துன்ப நிலை தொடர்கின்றது.

ஞானசார தேரோ

இத்தகைய முஸ்லீம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல்களை எமது புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

அத்துடன் இவ் அவல நிலைக்குக் காரணமான இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளின் வன்முறைகளையும் கண்டித்து நிற்கின்றது.

சிங்கள பௌத்த மத அடிப்படைவாத சக்திகள் இப்போது வெறித்தனமாக முஸ்லீம் மக்கள் மீது அபாண்டங்களையும் அச்சுறுத்தல்களையும் சுமத்தி மக்கள் மத்தியில் இன, மத அடிப்படையிலான வன்முறைகளுக்குத் தூபமிட்டு வருவதையும் எமது கட்சி கண்டிக்கின்றது.

நாட்டின் பிரதான முரண்பாடாக இருந்துவரும் தேசிய இனப் பிரச்சினையின் உள்ளடக்கமான வடக்குக் கிழக்குத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர் ஆகிய சிறுபான்மைத் தேசிய இனங்களின் தனித்துவங்களும், பண்பாட்டு அடயாளங்களும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் நியாயமான அரசியல் தீர்வு காணப்பட்டிருப்பின் இன்றைய அவல நிலை தோன்றியிருக்காது.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் இரத்த ஆறு ஓட வைத்த அதே சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ சக்திகளே இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக மற்றுமொரு இன, மத அடிப்படையிலான மோதலுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றன.

மத அடிப்படைவாத சிந்தனை நான்கு மதங்களுக்குள்ளும் இருந்து வருவது வெளிப்படை. இதில் ஒன்றை எதிர்த்து, ஏனையவற்றை நியாயப்படுத்த யார் முற்பட்டாலும், அத்தகையோர் மக்களுக்கு விரோதமானோரேயாவர்.

படிக்க:
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
♦ இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

முஸ்லீம் மக்கள் தனியே மத அடயாளத்திற்கு மட்டும் உரியவர்கள் இல்லை. அவர்கள் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் ஆவர். அவர்கள் அநேகர் இந்நாட்டையும் ஏனைய இன, மத மக்களையும் நேசிப்போராகவும், முற்போக்கு ஜனநாயக சிந்தனை உடையோராகவும் இருந்துவருகின்றனர்.

மத்திய கிழக்கின் பல நாடுகளிலும் அந்நிய ஏகாதிபத்திய தலையீடுகளிற்கும், பிற்போக்கான ஆட்சி அதிகாரங்களுக்கும் எதிராக மக்கள் போராடி வருகின்றனர். குறிப்பாகச் சிரியாவின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் இடதுசாரி மாக்சிச லெனினிசக் கட்சியைச் சேர்ந்த போராளிகள் ஏனைய தரப்புகளுடன் இணைந்து போராடியே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து தமது பிராந்தியத்தையும் மக்களையும் பாதுகாத்தனர். குர்திஸ்தான் போராளிகளும் முஸ்லீம்களே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்க சூழலில் நாட்டின் அரசியல் பற்றியும், பேரினவாதக் கட்சிகள் பற்றியும் முஸ்லீம் மக்களுக்கான மாற்று அரசியல் மார்க்கம் பற்றியும் முஸ்லீம் மக்கள் தூரநோக்குடன் சிந்திப்பது அவசியம். அடயாள அரசியலுக்கு அப்பால், முஸ்லீம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை உணர்ந்து, அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்குப் பொருத்தமான அரசியல் மார்க்கம் எது என்ற ஆய்வை மேற்கொள்வது இன்றைய இளம் தலைமுறையின் அவசியமானதொரு கடமையாகவுள்ளது.

இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளோடு இணைந்து முன்செல்லக்கூடிய மாற்று அரசியல் நிலைப்பாடு முஸ்லீம் மக்களுக்கு அவசியமானதொன்று என்பதை எமது கட்சி இவ்வேளை சுட்டிக்காட்டுகின்றது.

இவ் அறிக்கையானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
பு.ஜ.மா.லெ கட்சி.

1 மறுமொழி

  1. முஸ்லீம் மக்கள் அவர்கள் அநேகர் முற்போக்கு ஜனநாயக சிந்தனை உடையோராகவும்,
    தனியே அல்ஹாவே தான் உலகம் என்று முஸ்லீம் மத அடயாளத்திற்கு மட்டும் உரியவர்களாக இல்லைலாமலும். நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினராகவும் தனது நாட்டையும் ஏனைய இன மத மக்களையும் நேசிப்போராகவும் முற்போக்கு ஜனநாயக சிந்தனை உடையோராகவும் இருந்துவந்திருந்தால் முஸ்லீம் மத தீவிரவாதம் எப்படி தலை எடுக்க முடியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க