21.11.2020

ஆளில்லா விமானங்களை வைத்து எமது வீடுகளை வேவு பார்க்கும் இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறிக்கை

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்ததாக பெருமை பேசும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஓராண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். ஆனால், இக்காலப்பகுதியில் நாட்டு மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அதேவேளை, அவை மேன்மேலும் மோசமடைந்து செல்வதையே காண முடிகின்றது.

தோழர் சி.கா.செந்திவேல்

இச்சூழலில் தற்போது முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், வாழ்க்கைச்செலவின் அதிகரிப்பினாலும் ஏனைய அன்றாட நெருக்கடிகளினாலும் அல்லலுற்று வரும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஆறுதல் தருவதாகவோ மாற்றுத் திட்டத்தினை முன்வைப்பதாகவோ காணப்படவில்லை. உத்தேச வருமானம் 1 இலட்சத்து 88 ஆயிரத்து 600 கோடி ரூபா எனவும், செலவினம் 3 இலட்சத்து 44ஆயிரத்து 100 கோடி ரூபா ஆகவும் உள்ள அதேவேளை துண்டுவிழும் தொகை 1 இலட்சத்து 55ஆயிரத்து 500 கோடி ரூபாவாக உள்ளது. இதனை ஈடுசெய்வதற்கு நாட்டு மக்களின் தலைகளில் கடன் சுமையை ஏற்றுவதைத் தவிர இன்றைய அரசாங்கத்திற்கு வேறு வழி இல்லை எனப் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளாரும் மூத்த பொதுவுடமைச் செயற்பாட்டாளருமான தோழர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் கடந்த பல வரவு செலவுத் திட்டங்களில் காணப்பட்டு வந்த வழமையான மக்கள் விரோத செயற்பாட்டையே இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றின் இப்போதைய 75-வது வரவு செலவுத் திட்டத்திலும் காண முடிகிறது. ஏற்றுமதிப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ரூபாவின் நாணயப் பெறுமதி குறைவடைந்ததன் காரணமாக இறக்குமதிகளால் அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. இதற்கான மாற்றுத் திட்டமோ செயல்முறைகளோ உரியவாறு முன்வைக்கப்படாது வழமைபோன்று உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவோம் என்ற வாய்ப்பாடே ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !
♦ பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

அடுத்து, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிப் பட்டியலைப் பார்க்கும் போது போர்க்காலத்தின் நினைவையே கொண்டு வருகின்றது. ஆகக் கூடுதலான தொகையான 355 பில்லியன் ரூபாய் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து நெடுஞ்சாலைகளுக்கு 330 பில்லியனும் ஏனைய அத்தியவசிய விடயங்களான விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, நீர்ப்பாசனம், போக்குவரத்து போன்றவற்றுக்கு குறைவான ஒதுக்கீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியத்துவம் பெறும் சுகாதாரத்திற்கு வெறும் 159 பில்லியனும் கல்விக்கு 126 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களின் விசேட செலவினங்களுக்காக 2,559 கோடி 74 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இதன் மூலம் இவ்வரவு செலவுத் திட்டம் நாட்டின் ஏகப்பெரும்பன்மையான உழைக்கும் மக்களுக்கானதல்ல என்பதே தெரிகின்றது.

மேலும் இவ்வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட்சம்பளம் எதிர்வரும் தை மாதத்திலிருந்து வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது சாத்தியமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது, ஏனெனில், மேற்படி சம்பளத்தை வழங்குவது தோட்டக் கம்பனிகளேயன்றி அரசாங்கமல்ல. ஆனால் இம் முன்மொழிவு முன்வைக்கப்பட்ட மறுநாளே தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தமது மறுப்பைத் தெரிவித்துவிட்டது. இந்த அரசாங்கமும் அதற்கு முந்தைய ஆட்சிகளும் தோட்ட முதலாளிகளையும் நாட்டின் ஏனைய முதலாளிகளையும் எதிர்த்து தொழிலாளர்களுக்குச் சார்பாக சம்பள உயர்வுகளையோ ஏனைய சலுகைகளையோ வழங்கியதாக வரலாறு கிடையவே கிடையாது. எனவே, 1000 ரூபா சம்பள உயர்வு வெறும் ஏமாற்று மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் காணி, வீட்டுரிமை, கிராமமாதல், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிக்கொள்ளும் ஆளும் வர்க்கத் தந்திரத்தைக் கொண்டதுமாகும்.

அதேபோன்று, வடக்குக் கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள வறுமை, வேலையின்மை, காணி, வீடு, தொழில் முயற்சிகள், சுகாதாரம், கல்வி உட்பட விவசாயம், மீன்பிடி ஆகியவற்றுக்கான வழிவகைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக மூன்று தசாப்தகால போரினால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து வறுமையுடனும் வெறுமையுடனும் இருந்துவரும் வடக்குக் கிழக்கு இவ்வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

எனவே, எவ்வளவுக்குப் பூசி மெழுகிப் பொய் புளுகுகளைக் கூறிக்கொண்டாலும், இவ் வரவு செலவுத் திட்டமானது ஆளில்லா விமானங்கள் பத்தினை வைத்து வானத்திலிருந்து எமது வீடுகளை வேவு பார்க்கும் இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டமாகவே காணப்படுகிறது. அத்துடன், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையையும் கொண்டிருக்கின்றது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தை முன்னெடுத்துவரும் இன்றைய பாசிச ஆட்சியின் அரசியலானது எத்திசையில் செல்லப்போகிறது என்பதை இவ் வரவு செலவுத் திட்டம் சுட்டிக்காட்டி நிற்கின்றது. இது நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள், சிறுபான்மை சமூகங்களுக்கும் வரப்போகும் எதிர்கால அபாயத்தை கோடிட்டுக் காட்டுகின்றது.

அத்துடன், இருபதாவது திருத்தம் கொண்டு வந்த ஆளும் வர்க்க சர்வாதிகார அரசியலையும் இவ் வரவு செலவுத் திட்டம் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, இலங்கை.

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க