ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!

“கட்டமைப்பு சீர்திருத்தம்” என்ற பெயரில், ஐ.எம்.எஃப் விதித்துள்ள நிபந்தனைகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை இலங்கையில் மேலும் தீவிரமாக்கியுள்ளது.

றுகாலனியாக்கக் கொள்கைள் மற்றும் சீன-அமெரிக்க மேலாதிக்கப் போட்டாபோட்டியின் விளைவால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கையில், கடந்த ஆண்டு மிகப்பெரிய மக்கள் எழுச்சி நடந்து ராஜபக்சே-க்கள் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திகொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அடிவருடியான ரணில் விக்ரமசிங்கேவை அதிபராக்கியது.

மீட்பராக முன்னிறுத்தப்பட்ட அமெரிக்க அடிவருடியான ரணில் விக்ரமசிங்க அதிபராக நியமிக்கப்பட்ட பிறகும் எந்த முன்னேற்றமும் அடையாத இலங்கைப் பொருளாதாரம் 46 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனோடு நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund – IMF) மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை 17-வது முறையாக இலங்கை கடனாக பெற்றுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி எற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஐ.எம்.எஃப்-யிடம் ரணில் அரசு மீண்டும் கடன் வாங்கியதற்கு இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் சொத்துக்கள் பெரிய அளவில் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் என்றும் பொருட்களின் விலைவாசியும் மக்கள் மீதான வரிச்சுமையும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது ஐ.எம்.எஃப் இலங்கைக்கு கடன் வழங்கியதற்கான ஒப்பந்தமானது கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஐ.எம்.எஃப் விதித்த கடுமையான 15 நிபந்தனைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றிய பிறகுதான் முதல் தவணை கடன் வழங்கப்பட்டது. இதுகுறித்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த சவாலான கொள்கை நடவடிக்கைகளை இலங்கை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பது பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளது. “கட்டமைப்பு சீர்திருத்தம்” என்ற பெயரில், ஐ.எம்.எஃப் விதித்துள்ள நிபந்தனைகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை இலங்கையில் மேலும் தீவிரமாக்கியுள்ளது.

ஐ.எம்.எஃப்-இன் கட்டளையின் பேரில், ரணில் அரசு செலவினங்களை கடுமையாகக் குறைத்து வருகிறது. மேலும், 14 அரசு நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 4.5 பில்லியன் டாலரை திரட்ட திட்டமிட்டுள்ளது.


படிக்க: இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1


கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பிப்ரவரி மாதத்தில் மின்சாரக் கட்டணங்களை 66 சதவிகிதம் உயர்த்தியுள்ளது ரணில் அரசு. இதன் மூலம் மின்சாரக் கட்டண உயர்வு 200 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது. எரிபொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

அதேபோல், கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசு நிறைவேற்றிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி 36 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய போதும், “இது ஐ.எம்.எஃப்-இன் நிபந்தனையாக இருப்பதால் வருமான வரியை குறைக்க முடியாது” என்று விக்கிரமசிங்க நேரடியாகவே கூறினார்.

பணவீக்கம் சுமார் 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக உணவு, எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த மக்கள்தொகையில், 33 சதவிகித மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. “சேவ் தி சில்ட்ரன்” என்ற அமைப்பு, கடந்த மாதம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள பாதி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவின் ஒரு பகுதியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறுகிறது.

இவையெல்லாம் ஐ.எம்.எஃப்-இன் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதால் கடனை பெறுவதற்கு முன்பே இலங்கை மக்கள் சந்தித்த நிலைமை. தற்போது இந்நிலைமை மேலும் தீவிரமடையும். வரும் காலங்களில் இலங்கையில் இன்னும் வறுமையும் வேலையின்மையும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கடனை பெறுவதற்கு விதித்துள்ள நிபந்தனைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது. அது எவ்வளவுக்கு எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் இலங்கை அரசால் அதனை மறுக்க முடியாது. ஒருவேளை அப்படி மறுத்தால் ஐ.எம்.எஃப்-இன் அனைத்து உதவிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு நெருக்கடியை தீவிரபடுத்துவதற்கான வேலையில் ஐ.எம்.எஃப் இறங்கும். இதுதான் 2019ஆம் ஆண்டு ராஜபக்சே அரசாங்கத்திற்கும் நிகழ்ந்தது.

எனவே, ஐ.எம்.எஃப்-இன் நிபந்தனைகளை நடைமுறைபடுத்தக் கூடாது என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மக்கள் போராட்டத்தை ஒடுக்குவற்காகவும் மக்களின் எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதற்காகவும் ரணில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சான்றாக, தனிநபர் வருமான வரியை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்த உத்தரவு ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைய ஆரம்பித்தன. இதை ஒடுக்குவதற்காக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது ரணில் அரசு. இதன்மூலம் பொதுப் போக்குவரத்து, உணவு விநியோகம், எரிபொருள்கள் விநியோகம், ரயில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் அனைத்து துறைகளும் “அத்தியாவசிய சேவை”க்குள் கொண்டு வரப்பட்டு, வேலைநிறுத்தம் செய்யும் எவரும் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று மிரட்டப்படுகிறார்கள்.

குறிப்பாக, பிப்ரவரி மாதத்தில் வரி மற்றும் கட்டண உயர்வுக்கு எதிராக, தேசிய வேலைநிறுத்தத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்ததையடுத்து அதனை ஒடுக்குவதற்காகவே இந்த உத்தரவானது பிறபிக்கப்பட்டது. தற்போது வரை இந்த சட்டத்தை வைத்து போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை மிரட்டி ஒடுக்கி வருகிறது ரணில் அரசு.


படிக்க: இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 2


அதேபோல் தனக்கு எதிரான மக்களின் வெறுப்பை எதிர்க்கொள்ள முடியாது என்பதால் கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்தது. இதற்கு நிதி பற்றாக்குறை காரணமாக கூறப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு செலவு செய்ய நிதி இல்லாத அதே வேளையில் இலங்கையின் ‘சுதந்திர தின’த்தை கோலாகலமாக கொண்டாடி ரணில் அரசு அதன் பாசிச தன்மையை வெளிப்படுத்தியது.

ஆனால், இவை அனைத்தையும் மீறி இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரணில் அரசின் வரி உயர்வுக்கு எதிராக ஜனவரி மாதத்தில் ஏறக்குறைய அனைத்து பிரிவு தொழிலாளர்களும் போராட்டம் நடத்தினர். உள்ளாட்சித் தேர்தலை முடக்கியதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி ஐ.எம்.எஃப்-க்கு எதிராக நடந்த போராட்டத்தில் மருத்துவம், கல்வித்துறை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் 14 சர்வதேச விமானங்களை பாதிக்கும் வகையில், இரண்டு மணிநேரம் மெதுவாகச் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டங்களை ஒடுக்குவதற்காக அத்தியாவசிய சேவைகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் போராட்டங்கள் ஓய்ந்த பாடில்லை. ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்த போராட்டம் இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் மீது அடுக்குமுறைகளையும் நெருக்கடியையும் சுமத்தும் ரணிலுக்கு எதிராக மக்கள் உறுதியாக போராடி வருகின்றனர். ஆசிரியர்கள், மருத்துவர்கள், கப்பற்படை தொழிலாளர்கள், விமான தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்தான் இலங்கை ஐ,எம்.எப்-யிடம் கடன் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஐ.எம்.எஃப்-யிடம் 2.9 பில்லியன் டாலர் பெற்றதோடு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து 3.75 பில்லியன் அமெரிக்க டாலர் வரை கடன் பெறுவதற்கும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் நாட்டு மக்களை அடகு வைத்தது போதாது என்று பிற எகாதிபத்தியங்களிடமும் அடகு வைக்க நாக்கை தொங்கவிட்டு காத்துக்கிடக்கிறது ரணில் அரசு.

இதனால், இலங்கையின் பொருளாதாரமும் மக்களின் வாழ்நிலையும் மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. அதற்கு எதிர்வினையாய் இலங்கை மக்களின் போராட்டமும் மேலும் தீவிரமடையும். அதாவது மீண்டும் ஒரு மக்கள் எழுச்சியை இலங்கை எதிர்கொள்ள உள்ளது. ஆனால், கடந்த முறை நடந்ததைப் போன்று, ஒரு மாற்றுத் திட்டத்தோடு இந்த எழுச்சியை அமைப்பாக்கத் தவறினால், சமூக பொருளாதார தளத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போகும். ஏகாதிபத்திய சுரண்டலாளர்களை தூக்கியெறிய முடியாமல் போகும்.

அத்தனை லட்சம் மக்கள் உறுதியாகப் போராடி, இனவெறி பாசிஸ்டுகளான ராஜபக்சேக்களை தூக்கியெறிந்த போதிலும் அதனால் மக்களுக்கு பெரிதாக எந்த நலனும் வாய்க்கப்படவில்லை. மீண்டும் அப்படி நடந்தால் ஏகாதிபத்தியங்கள் ‘அடுத்த ரணிலு’க்கான ஏற்பாட்டைச் செய்து முடிக்கும்.

எனவே, இலங்கையில் உள்ள புரட்சிகர சக்திகள், மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்கள் போராட்டத்தை அமைப்பாக்கும் வேலையில் இறங்க வேண்டும்.

பானு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க