டந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியிருந்தது. அரசி, பருப்பு, காய்கறிகள், பால் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களும்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற மிக அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் விண்ணை முட்ட விலை உயரத்தொடங்கின. எரிபொருட்களைப் பொருத்தவரை மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. எரிபொருள் நிரப்பும் மையங்களில், பல மணிநேரங்கள் மக்கள் வரிசை கட்டி நிற்க வேண்டியிருந்தது.
இலங்கையில் மின்சாரமானது பெருமளவு எரிபொருட்களைச் சார்ந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. டீசல் இல்லாததால், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இரண்டு ஆலைகளைத் தவிர, மற்ற அனைத்து மின் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டன. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணி நேரங்களுக்கு மேலாகவாவது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான மருந்துகள், குழந்தைகளுக்கான இன்ட்யூபேஷன் கருவிகள் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் தீர்ந்துபோய்விட்டன; இறக்குமதி செய்வதற்கு அரசிடம் பணம் இல்லாததால், மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளைக் குறைக்கத் தொடங்கின. காகிதங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலையில், பள்ளி-கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
நெருக்கடியின் சுமைகள் தாளமுடியாமல், மக்களில் ஒருபிரிவினர் நாட்டைவிட்டே வெளியேறினர். பல ஈழத் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுடன் குடும்பம் குடும்பமாக கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரத் தொடங்கினர். அதேநேரம் அரசை எதிர்த்த போராட்டங்களோ சிறுசிறு தீப்பொறிகளாகக் கிளம்பி, நாட்டின் பலப் பகுதிகளிலும் பரவிக்கொண்டிருந்தன. தொடக்கத்தில், அவை எதிர்க்கட்சிகளின் அடையாளப் போராட்டங்களாகவே இருந்தன. பின்னர் மக்கள் போராட்டங்களாக தீவிரமடைந்தன.
தடுக்க முடியாத போராட்டப் பெருவெள்ளம்
மார்ச் 25-ஆம் தேதிக்கு பின்னர் பல்வேறு நகரங்களில், “ராஜபக்சேக்களே வீட்டுக்கு போங்கள்”, “கோ கோத்தபயா” போன்ற முழக்கங்கங்களை ஒலித்தபடி, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான ரெய்ட் அவென்யு (Reid Avenue), வி.எம்.டி பார்க் (VMD Park), நெகம்போ (Negambo), பண்டரகம (Bandaragama), நுகேகொட (Nugegoda), கொஹுவல சந்திப்பு (Kohuwela Junction) ஆகிய பகுதிகளில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். இது மெல்ல மெல்ல தென்னிலங்கையின் மற்ற பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
கணக்கீடு ஒன்றின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 19 தேதிகளுக்குள் மட்டும் நாடு முழுவதும் 304 அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் மிகப்பல தென்னிலங்கையில் நடைபெற்றவை. குறிப்பாக, கொழும்புவைச் சுற்றிமட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. ஒரு சூறாவளியின் கருவைப் போல, போராட்டங்களின் குவிமையமாக கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மாறிக் கொண்டிருந்தன.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், முதன் முதலில் மிகப்பெருமளவு கவனத்தை ஈர்த்த போராட்டமாக அமைந்தது மிரிஹானை (Mirihana) போராட்டமாகும். மார்ச் 31 அன்று, நுகேகொட புறநகர் பகுதியான மிரிஹானையில் கூடிய மக்கள், மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர், அருகாமையில் அமைந்திருந்த கோத்தபய இராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிடுவதற்காகப் பேரணியாகச் செல்லத்தொடங்கினர். போராட்டம் பிற்பகல் சுமார் ஆறு மணி அளவில் தொடங்கியது. நடு இரவுவரையில் மிரிஹானையை நோக்கி மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கப் பிரிவினர்.
மின் தடை, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் அரசை எதிர்த்து வீதிக்கு வரும்படி கட்டாயப்படுத்தியிருந்தது.
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இப்போராட்டம்தான் காலிமுகத்திடல் போராட்ட முகாமுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் உருத்திரள்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத இராஜபக்சேக்கள், ஆரம்பத்திலேயே இதனை கிள்ளியெறிய முற்பட்டார்கள். ஆனால் தோற்றுப் போனார்கள்.
அதிபரின் வீட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிறப்பு போலீசுப் படை, வரவழைக்கப்பட்ட போலீசு கும்பல் ஆகியவை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் மக்களை கலைக்க முயற்சித்தது. பதிலுக்கு மக்கள் கையில் கிடைத்தப் பொருட்களை போலீசை நோக்கி வீச ஆரம்பித்தார்கள். எனவே போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டங்களை செய்தியாக்க வந்த ஊடகங்களுக்கு அதிபர் மாளிகையிலிருந்து மிரட்டல்கள் குவிந்தன. ஊடகவியலாளர்கள் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இப்போராட்டத்தை ஒட்டி, போலீசால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேர்களுள் (ஏப் 2 வரை) ஊடகவியலாளர்களும் அடக்கம்.
இவற்றின் மூலம் கோத்தபயவின் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததே ஒழிய, போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. இரவு முழுவதும் போராட்டச் செய்திகளும் போலீசின் ஒடுக்குமுறைகளும் சமூக ஊடகங்களில் போராட்டக்காரர்களால் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. “கோட்டா கோ ஹோம்” (#Gota Go Home – கோத்தபயவே வீட்டுக்கு போ) – என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இவை இதர பகுதி மக்களுக்கும் கிளர்ச்சியூட்டின. அரசின் அடக்குமுறையைக் கண்டு ஆத்திரமுற்றனர் மக்கள். அடுத்தடுத்த நாட்களிலேயே தென்னிலங்கையின் வீதிகள் மக்கள் போராட்டங்களால் மூழ்கத்தொடங்கின.
ஏப்ரல் 2 ஆம் தேதி, அவசர நிலை மற்றும் நாடுதழுவிய ஊரடங்கை அறிவித்தது கோத்தபய அரசு. தங்களது ஆட்சிக்கெதிராக ‘தீவிரவாதிகள்’ சதிசெய்ததாகவும்; ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதக் குழுவொன்று, இலங்கையில் ‘அரபு வசந்தத்திற்கு’ அழைப்பு விடுத்துள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் இதனை திட்டமிட்டதாகவும் புலம்பியது அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு அறிக்கை.
காலிமுகத்திடல் போராட்ட மைதானம். மாலைநேரமொன்றில், மைதானத்தில் குவிந்திருக்கும் மக்கள் வெள்ளத்தின் ஒருபகுதி.
முகநூல், வாட்ஸப், டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் என அனைத்து வகை சமூக ஊடகங்களும் திடுமென முடக்கப்பட்டன. “கோட்டா கோ ஹோம்” என்ற பெயரில் முகநூல் பக்கம் தொடங்கியதற்காக, அனுருத்த பண்டார என்பவர் கைதுசெய்யப்பட்டார். ஊரடங்கை மீறியதாக, ஒரே நாளில் 660 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய முயற்சிகளின் மூலம் போராட்டங்களை பரவாமல் இருக்கச் செய்யவும், கலைத்துவிடவும் முயற்சித்தது அரசு.
ஆனால், போராட்டங்கள் மேலும் தீவிரமடையவே செய்தன. ஒடுக்குமுறைகள் தூள் தூளாக்கப்பட்டன. ஊரடங்கையும் மீறி, வீதிகள் ஆர்ப்பாட்டங்களால் அழகுபடுத்தப்பட்டன. மிரிஹானை போராட்டம் தொடர்பாக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேரையும் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராளிகளை கைதட்டி, முழங்கங்களை முழங்கி ஆரவாரமாக வரவேற்றனர். வழக்கு முடிகின்ற வரை ஒருவர் கூட நீதிமன்றத்தை விட்டு வெளியேறவில்லை. காயம்பட்ட போராளிகளுக்கு, மருத்துவர்கள் சிறப்பு கவனமெடுத்து மருத்துவம் பார்த்தனர். நாடு முழுவதிலும் காணப்பட்ட கொதிநிலையை அறிந்துகொண்ட மஹிந்த-கோத்தபய அரசு வேறுவழியே இல்லாத நிலையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. 15 மணிநேரத்திற்கு பிறகு முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் விடுவிக்கப்பட்டன.
கொழும்பு கடற்கரையை நோக்கி தன்னெழுச்சி அலை
மக்கள் போராட்டங்கள் அரசின் அடக்குமுறைகளையும் கடந்து தீவிரமாகி வந்ததால், ஓட்டுக் கட்சிகள் மக்கள் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஏப்ரல் 4-ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் கொழும்புவில் பேரணியாக சென்றனர். அன்றைய நாளே, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள், “அரசின் சில தவறான நடவடிக்கைகள்தான் நெருக்கடிக்கு காரணம்” என்று கூறி கூண்டோடு பதவி விலகினர்.
கோத்தபயவும் மஹிந்தவும் உடனடியாக பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சித் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஓட்டுக்கட்சிகளின் கபடநாடகத்தால் மக்கள் கவரப்படவில்லை. போராட்டக்காரர்களில் பலரும் (60 சதவிகிதம் பேர்) எந்தக் கட்சிகளும் யோக்கியம் இல்லை; நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களுமே பதவி விலக வேண்டும் என்று கருதுவதாக, “மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்” என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் 96.2 சதவிகிதம் மக்கள், அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; மக்களை கொள்ளையிட்டுச் சேர்த்த அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
***
ஏப்ரல் 5, 6-ஆம் தேதிகளில் கொழும்புவைத் தாண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் திரள் திரளாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளிலும் வாகனங்களிலும் கருப்புக் கொடிகளை ஏற்றுவது, “கோட்டா கோ ஹோம்” என்ற முழக்கம் பதித்த அட்டைகளை வீட்டின் மேல் மாட்டுவது, சுவர்களில் எழுதுவது என நாடே போர்க்கோலம் பூண்டது. ஒரு பக்கம் பல்வேறு பகுதிகளிலும் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் 6 ஆம் தேதிக்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்பு கடற்கரையை நோக்கி திரளத் தொடங்கினார்கள். கொழும்புக் கடற்கரை, அதிபர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காலிமுகத் திடல் மக்கள் கூட்டங்களால் நிரப்பப்பட்டது. பீதியானது அரசு.
இலங்கையில் 1953-ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் பேரெழுச்சி.
ஏனெனில், காலி முகத்திடல் ஏற்கெனவே வர்க்கப் போராட்டத்தின் குறியீடாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மிகப்பெரிய தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இதே காலி முகத்திடலில் நடைபெற்றது; அந்த ஆண்டு ஜீலை மாதம் 23-ஆம் தேதி, சுமார் இரண்டு இலட்சம் மக்கள் – அதிகம் தொழிலாளர்கள் – காலிமுகத்திடலில் ஒன்றுகூடினார்கள். அதைப் போன்றதொரு போராட்டம் மீண்டும் நடைபெற்றுவிடக்கூடாது என்று பயந்த கோத்தபய-மஹிந்த அரசு, அதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் இறங்கியது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எப்போதும் வழங்கும் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பதிலாக, ஒரு வார காலம் விடுமுறை வழங்கியது. கொழும்பு, ஓர் தலைநகரம். நமது சென்னை நகரத்தோடு கொழும்புவை ஒப்பிடலாம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரத்தில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் விடுமுறை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஆனால், நடந்ததோ தலைகீழானது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து கொழும்பு கடற்கரையை நோக்கி அணிவகுத்தார்கள். திகைத்துப் போனது அரசு. போராட்டத்தை கலைப்பதற்கு, வாடகைக்கு எடுத்த குண்டர்களை அனுப்பி வாகனங்களை எரித்து கலவரத்தை நடத்தியது. பொதுமக்களை, ‘வன்முறையாளர்களாக’ சித்தரித்து போலீசை ஏவி ஒடுக்கும் முயற்சியாக அது இருந்தது. அரசு ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பி எச்சரிக்கை செய்வது, போலியான சமாதான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை திசைதிருப்புவது என எவையுமே பலிக்கவில்லை.
அனைத்தையும் கடந்து, ஏப்ரல் 9 அன்று தன்னெழுச்சியாகத் திரண்ட மக்கள், ஒரு மாபெரும் பேரணியாகச் சென்று காலிமுகத்திடலை கைப்பற்றிக் கொண்டார்கள். கொழும்பு நகரத்தின் மொத்த மக்கள் தொகையே 7 இலட்சம்தான் என்ற நிலையில், இந்த பேரணியில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.
காலிமுகத்திடல்: இலங்கையின் மெரினா!
50 நாட்களைக் கடந்து, இன்றுவரை தொடர்ந்துவரும் காலி முகத்திடல் போராட்டத்தை, நாம் சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அது இலங்கையின் மெரினாப் போராட்டம், ஷாகீன்பாக், டெல்லிச் சலோ…
பலதரப்பட்ட மக்கள், அன்றாடம் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக வேலைசெய்யும் நேரம் போக, மாலை நேரங்களில் காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு செல்கிறார்கள். (ஒரு பிரிவு மக்கள் அங்கேயே முகாமிட்டுள்ளார்கள்) அது ஒரு வாடிக்கையாக இருக்கிறது. பிபிசி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆட்டோ ஓட்டும் தமிழ்த் தொழிலாளி, “நான் அன்றாடம் மாலை நேரம் போராட்டத்திற்குச் செல்கிறேன்; போராடினால்தான் விடிவுகாலம் பிறக்கும்; அந்த மைதானத்திற்கு செல்லும்போது, இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவது உற்சாகமூட்டுவதாக இருக்கிறது” என்று பூரிப்படைகிறார்.
போராட்டம் தொடங்கிய மூன்று வாரங்களில், ஒவ்வொரு நாள் மாலையும் சுமார் 40,000-லிருந்து 50,000 வரையிலான மக்கள் காலிமுகத்திடலுக்கு வரத்தொடங்கினார்கள். இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.
 அந்தப் போராட்டக் களமே தங்கும் முகாம்கள், தற்காலிகக் கழிப்பிடங்கள், மருத்துவ நிலையம், நூலகம், சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம் ஆகியவை உள்ளடங்கிய “கோட்டா கோ கம” (Gota Go City) எனும் மாதிரி நகரமாக உருவாகியிருக்கிறது. இந்த மைதானத்தை, மக்கள் சிங்கள மொழியில் “அரகலய” (மக்கள் போராட்டம்) என்று அழைக்கிறார்கள்.
படிக்க :
♦ இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1
♦ இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், கூடாரங்கள், முதலுதவிப் பொருட்கள் அனைத்தும் சிறு வணிகர்களாலும், சில பெரு நிறுவனங்களாலும் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. போராடும் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்களும், சிகிச்சையளிக்க மருத்துவர்களும் மக்களுடன் சேர்ந்து போராட்டக்களத்தில் காத்திருக்கின்றனர்.
“கோட்டா கோ ஹோம்” மட்டுமல்லாமல், “மக்களை வதைக்கும் அரசை விரட்டியடிப்போம்; மக்கள் நேய ஆட்சியை கட்டியெழுப்புவோம்”, “நமது உச்சநீதிமன்றத்தில் வரலாறு தீர்பளிக்கும்”, “சாதி, மதம், இனம் கடந்து இலங்கையர்களாக ஒன்றிணைவோம்” என மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல வண்ண முழக்க அட்டைகள் போராட்டக் களத்தை அழகுபடுத்துகின்றன. குடைகள், டீ சர்டுகள், தலையில் அணியும் ரிப்பன்கள் என பல வடிவப் பொருட்களிலும் முழக்கங்கள் வரையப்பட்டிருக்கிறது.
போராட்டக்களத்தின் ஒருபகுதியில், 2005 முதல் 2015 வரை இராஜபக்சே அரசால், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூறும் வகையில், அவர்களின் புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன.
மஹிந்த இராஜபக்சேவைப் போல வேடமிட்ட சிலர், அவர் மக்களால் சிறைப்படுத்தப்பட்டிருப்பதைப்போல காட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர். பங்கேற்பாளர் உரைகள், பாடல்கள், ஓவியங்கள், நடனம், நாடகம் என ஓர் கலை-இலக்கிய விழா மேடையாகவே காலி முகத்திடல் காணப்பட்டது. தோழர் லெனின் சொன்னதைப் போல, புரட்சிப் போராட்டம் என்பது பொதுமக்களின் திருவிழா அல்லவா.
ஏப்ரல் 13-ஆம் தேதி, பிரதமர் மஹிந்த இராஜபக்சே, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி தூதுக்குழுவொன்றை ஏற்பாடு செய்தார்; “பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை; நீங்கள் அரசாங்கத்தைவிட்டு அகலும்வரை நாங்கள் அரகலய-வை (போராட்டம்) விட்டு அகலப்போவதில்லை” – என முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டனர் மக்கள்.
(தொடரும்…)

பூபாலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க