னவெறி பாசிஸ்டு மஹிந்த இராஜபக்சே பதவி விலகி, இரணில் அரியணை ஏறியிருப்பதன் மூலம் இலங்கை ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது. எனினும் சீனாவிடம் நாட்டை அடகுகொடுத்த மஹிந்தவுக்கு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் விசுவாச அடிமையான இரணில் எந்தவகையிலும் ஒரு மாற்று அல்ல.
ஐ.எம்.எஃப். – உலக வங்கியிடன் கடன்பெறுவதன் மூலம் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார் இரணில். ஆனால், ஐ.எம்.எஃப். கொடுக்கும் கடன்களின் மூலம் நெருக்கடியை நிரந்தமாகத் தீர்த்துவிட முடியாது. 1950 ஆம் ஆண்டு ஐ.எம்.எஃப்-ல் இலங்கை உறுப்பினரானதில் இருந்து இதுவரை 16 முறை கடன்கள் வாங்கபட்டுள்ளன. தற்போது முயற்சித்துக் கொண்டிருப்பது 17 வது முறையாக கடன் பெறுவதற்கு.
ஒவ்வொரு முறை கடன் வாங்கும்போதும், “மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டு, வரிகள்-கட்டணங்களை உயர்த்து, அரசுத்துறைகளை தனியார்மயமாக்கு” – என ஐ.எம்.எஃப். விதித்த நிபந்தனைகள் இலங்கையை மென்மேலும் தீவிர மறுகாலனியாக்கத்துக்கே தள்ளியுள்ளன. இந்த முறை பெறப்போகும் கடனுக்காக, ஐ.எம்.எஃப். விதிக்கும் நிபந்தைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார் இரணில். இது நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியில்லை, அதை நிரந்தரமாக்குவதற்கான வழி.
000
“தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்” என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதும், அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் ஓர் அங்கமாகவும்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வெடித்திருக்கிறது என்று நாம் சொல்கிறோம். எனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் வழி பற்றி பேச வேண்டுமானால், தவிர்க்கவியலாமல் நாம் மேற்கூறிய இரண்டு விசயங்களையும் தொடாமல் பேச முடியாது.
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
இலங்கை பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலந்தொட்டே, ஏகாதிபத்திய சுரண்டல்முறைக்கு ஏற்பதான் நாட்டின் பொருளாதாரம் கட்டியமைக்கப்பட்டு வந்துள்ளது. அதிகார மாற்றத்திற்கு பின், நிலவிய கொஞ்ச நஞ்ச தற்சார்பு பொருளாதாரமும் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் போக்கில் புதைகுழிக்கு அனுப்பப்பட்டது.
சிறு-குறு வணிகம், விவசாயம் ஆகிய தேசிய உற்பத்தி துறைகள் புறக்கணிக்கப்பட்டு, உலகச் சந்தைக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்துகொடுக்கும் தொழிற்சாலையாக இலங்கையின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விளைவு, இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கூட அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சான்றாக, இலங்கையின் முதன்மை உற்பத்திப் பொருட்களான தேயிலை, இரப்பர், பீங்கான் பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவை ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் வரும் அந்நிய செலாவணியை நம்பித்தான் இலங்கையின் பொருளாதாரமே இயங்குகிறது. இதைவிட்டால், சுற்றுலாத்துறை. உள்நாட்டுச் சந்தைக்கான உற்பத்தி என்பதே காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கமானது, உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதியிலும், சுற்றுலாத்துறையிலும் ஏற்படுத்திய பாதிப்பே பொருளாதார நெருக்கடியாக வெடித்துள்ளது.
இலங்கை உற்பத்தித் துறையின் ஏகாதிபத்திய சார்ப்புத் தன்மையே, சீனாவின் பக்கம் சாயும் இலங்கையை தடுப்பதற்கு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு உதவின. அதாவது இலங்கைப் பொருளாதாரத்தின் குடுமி ஏகாதிபத்தியங்களிடம் உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவைதான் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தையில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். ஆக, பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை விதிப்பது, வர்த்தகச் சலுகைகளை இரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு நிலைகுலைவை ஏற்படுத்த முடியும். ஜி.எஸ்.பி. வரிச்சலுகைகளை இரத்துசெய்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் அதைத்தான் செய்திருக்கிறது.
இந்த அடிமை நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியமைத்துக் கொள்வதே இலங்கைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஆனால், ஒரு நீண்டகாலப் போக்கில் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை, திடுமென ஒரு மாயவித்தையின் மூலம் மாற்றிவிடவும் முடியாது.
இன்றைய நிலைமையிலிருந்துப் பார்த்தால் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது; பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்யவில்லையெனில், பொதுபோக்குவரத்தை இயக்குவது, மின் உற்பத்தியை மேற்கொள்வது ஆகியவை சாத்தியமில்லை; தொழிற்சாலைகளை இயக்குவதற்கு மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் அந்நிய செலாவணி – டாலர்கள் தேவை.
ஐ.எம்.எஃப். கொடுக்கும் கடனுதவிகளோ அல்லது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அந்நிய நாடுகளின் கடனுதவிகளோ – அனைத்தும் மேலாதிக்க நோக்கத்திற்காக, நிபந்தனையின் பெயரில் வழங்கபடுபவையே அன்றி, மனிதநேயத்தால் அல்ல.
அப்படி இருக்க, அந்நிய செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க அந்நாடுகளது நிபந்தைகளை ஏற்றுக் கொண்டு கடனுதவி பெறுவது, மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவே இருக்கும். ஒடுக்கப்படும் நாடுகளுக்கு நிபந்தையில்லாமல் உதவுவதற்கு, முன்பு சோவியத் யூனியன் மற்றும் சோசலிச சீனா இருந்ததைப் போல, இன்று உலகில் ஒரு சோசலிச முகாமும் இல்லாத சூழல்.
 இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கிற இந்த அரசமைப்பை வைத்துக் கொண்டே, ஒரு தேசியப் பொருளாதாரத்தை கட்டியமைப்பதும் சாத்தியமில்லை. ஐ.எம்.எஃப், உலக வங்கி மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் தங்களது மேலாதிக்க நோக்கத்திற்காக வழங்கிய கடன்களை நிபந்தனை இல்லாமல் இரத்துசெய்ய வேண்டும்; அந்நாடுகளுடனான சமத்துவமற்ற அரசியல்-பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும்; புரட்சியின் மூலம் நிலவுகின்ற ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே அதை சாதிக்க முடியும். வேறு எளிதான தீர்வுகளோ, இடைக்கால தீர்வுகளோ எதுவும் இல்லை.
புரட்சிகர அரசாங்கம் நிறுவப்பட்டு அது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து வலுப்படுத்துவதற்கு நிச்சயம் சில காலம் ஆகும். அதுவரை இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உதவுவது, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் கடைமையாகும்.
உலகெங்கினும், அது தேச விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஜனநாயக அல்லது சோசலிசப் புரட்சிகளாக இருந்தாலும் சரி, சாரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் வெற்றி காணமுடியாது என்பது பொதுவிதி. இவ்விதி இலங்கைக்கும் பொருந்தும்.
குறைந்தபட்சம் தெற்காசிய பிராந்தியாத்தில் உள்ள நாடுகளின் உழைக்கும் மக்களாவது, இலங்கையின் புரட்சிகர அரசாங்கத்திற்கு நிபந்தனையில்லாமல் உதவும்படி தங்கள் நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதும், அதே நேரம் தங்கள் நாட்டு ஆளும் வர்க்கங்கள் இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்வதற்கு எதிராக குரலெழுப்புவதும் வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு இலங்கை விசயத்தில் கூடுதல் பொறுப்பு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் இலங்கையர்களும் தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக, புரட்சிகர அரசாங்கத்தை ஆதரித்து குரல் எழுப்ப வேண்டும்.
000
மேற்கூறியவைகளை எல்லாம் நாம் கற்பனையில் பேசிக் கொண்டிருக்க முடியாது, இதனை சாதிக்க வேண்டுமென்று சொன்னால், அதற்கு உள்நாட்டில் (இலங்கை) மக்களை புரட்சிப் போராட்டங்களுக்கு அணிதிரட்டி, அதிகாரத்தை நிறுவும் வகையிலான வல்லமை மிக்க புரட்சிகரக் கட்சி இருப்பது அவசியமாகும்.
வருத்தத்திற்கு உரிய விசயம் என்னவென்றால், இலங்கை முழுக்க அனைத்து தரப்பு மக்களும் அரசாங்கத்தை எதிர்த்து வீதிக்கு வந்துள்ளார்கள்; ஆளும் வர்க்கம் பல்லாண்டுகாலமாக உருவாக்கி வைத்த, இன-மத பேதங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு வர்க்க ஒற்றுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இராஜபக்சே ஏவிய குண்டர்களின் வன்முறைத் தாக்குதலுக்கு, அதேபாணியில் பதிலளித்துள்ளார்கள்; இவ்வாறு புரட்சிகர நெருக்கடியும் மக்கள் எழுச்சியும் இருந்தபோதும், அது ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க முடியவில்லை.
காரணம், இலங்கையில் மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சியொன்று இல்லாத நிலைதான். உலகெங்கும்கூட இன்றைக்கு அதுதான் நிலைமை.
பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்நிலையை மிகப்பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது; ஆளும் கட்சி உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மையையும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல், நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ, தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.
உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், அது தன்னெழுச்சியான மக்கள்திரள் போராட்டங்களில் தலையிட்டு செல்வாக்கு செலுத்துமளவிற்கான மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியாக இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது.
படிக்க :
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்
♦ இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?
மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம், சில சலுகைகளைப் பெற்றுத்தரலாம், ஆளும் வர்க்கங்களை தற்காலிகமாக தங்கள் திட்டங்களிலிருந்து பின்வாங்க வைக்கலாம் – ஆனால், ஆடுகளத்தை தீர்மானிப்பது அவர்களாகவே இருப்பார்கள். துனிசியா, எகிப்து, லிபியா, ஏமன் போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வெடித்த ‘அரபு வசந்தத்தின்’ தோல்விகள் நமக்கு கூறும் பாடமும் அதுதான்.
இலங்கையின் மக்கள் எழுச்சி எவ்வளவு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தபோதும், “இராஜபக்சே கும்பல் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கைக்கு அப்பால் செல்லவில்லை. தற்போது தொடரும் போராட்டங்களில்கூட கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையே முதன்மையாக இருக்கிறது. மக்கள் எழுச்சி கொடுத்த நெருக்கடியை, சீன ஆதரவு இராஜபக்சே கும்பலை தூக்கியெறிந்துவிட்டு, தனது பொம்மை ஆட்சியை கொண்டுவர நினைத்த அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன என்பதுதான் துயரம்.
ஆகவே, இலங்கையில் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள், நாட்டுப் பற்றாளர்கள் அனைவரும் இந்த தருணத்தில் கவனம் செலுத்த வேண்டியது, தங்கள் நாட்டு உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய முன்னணிப் படையை – மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டியமைக்கும் பணியைப் பற்றித்தான். அதுவொன்றுதான் ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து இலங்கையை விடுவிக்கும் மந்திரக்கோல்!

சந்திரசேகர்

1 மறுமொழி

  1. அந்நிய செலவாணி இல்லாது கடனில் தத்தளிக்கும் இந்த சூழலில், அங்கு தனியார் வணிகத்தில் ஈடுபட்டு மக்களின் உழைப்பால் உருவான மித மிஞ்சிய உபரி மதிப்பினை கையில் வைத்திருக்கும் தேசிய முதலாளிகளிடம் இருந்து பறிமுதல் என்ற பணியை புரட்சிகர கட்சி முதலில் தொடங்குவது சரியா?…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க