லங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் மரபுசாரா முறையில் மின்உற்பத்தி செய்ய இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவை விரட்டிவிட்டு இந்த ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளதாகவும், ராஜதந்திர ரீதியில் இந்தியாவிற்கு இது மிகப்பெரிய வெற்றி என்றும் காவிகளும் அதன் அடிமை ஊடகங்களும் கூறிவருகின்றன.
இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு, உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு என தொடங்கி சீனா உள்ளிட்ட பல நாடுகளில் வரம்பற்ற முறையில் அளவுக்கதிகமாக கடன்களை வாங்கி குவித்ததன் விளைவாக இன்று மிகப்பெரிய சிக்கலில் சிக்கியிருக்கிறது இலங்கை. சீனாவிடமிருந்து சுமார் 150 கோடி டாலருக்கும் மேல் இலங்கை அரசு கடனாக பெற்றுள்ளது.
படிக்க :
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
வாங்கிய கடனுக்கு கைமாறாக அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாடு, தெற்கு விரைவுச்சாலை, அனல்மின் நிலையம் அமைத்தல் போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கான உரிமையை இலங்கையிடம் இருந்து சீனா பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான், நைனா தீவு உள்ளிட்ட மூன்று தீவுகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனா – இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தம்.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று சீனாவுடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து யாழ்பாணத்தில் மின்சாரம் தயாரிக்கும் உரிமையை இந்தியாவிற்கு இலங்கை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காகதான் சமீபத்தில் இலங்கைக்கு ரூ.100 கோடி கடனை இந்தியா வழங்கியது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கடனுதவி அளிப்பது என்பது மனிதாபிமான அடிப்படையில் அல்ல. மாறாக தனது வல்லாதிக்கத்தை அங்கு நிலை நிறுத்துவதற்காகதான்.
சீனா – அமெரிக்கா இடையே உலக மேலாதிக்கத்திற்கான போட்டி நிலவி வருகிறது. இதனால் ஆசிய பிராந்தியத்தை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா, வங்காளதேசம் போன்ற ஆசிய நாடுகளுக்கு சீனா பலதரப்பட்ட உதவிகளை செய்து தனது மூலதனத்தை அங்கு குவித்து தனது செல்வாக்கு மண்டலத்தை உருவாக்கி வருகிறது. அதேபோல் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஆசியாவில் நிலைநிறுத்த பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநாட்டிகொள்ள இந்தியாவும் தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள்
இதன் தொடர்ச்சியாகதான் சீனாவும் இந்தியாவும் தனது முதலீடுகளை இலங்கையில் குவித்து வருகின்றன. ஏற்கெனவே இலங்கையின் கிழக்கு சம்பூர் நகரில் இந்தியாவின் என்.டி.பி.சி நிறுவனம் சூரிய மின் உற்பத்தி திட்டப் பணியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் அதானி குழுமமும் வடக்கு பிராந்தியத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் மின் உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் யாழ்பாணம் பகுதியில் மின் உற்பத்தியை தொடங்க அதானி, அம்பானி போன்ற இந்திய முதலாளிகள்  தயாராக இருக்கிறார்கள்.
“ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை”யாக இலங்கைக்காக ‘கண்ணீர் சிந்தி’ கடனுதவி செய்யும் இந்தியாவின் நோக்கம் இந்த ஒப்பந்தத்தில் அம்பலப்பட்டுள்ளது.
சுயசார்பு பொருளாதாரத்தைக் கைவிட்டு ஐ.எம்.எஃப்., சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் கடன் பெற்று தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை எடுக்கும் இந்த முயற்சி எரிதழலில் இருந்து கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறைக்குள் குதிக்கும் நிலைதான். ஏகாதிபத்திய சகாப்தத்தில் பணக்கார நாடுகளின் கடன் உதவி பெறும் நாடுகளின் கதி கந்துவட்டிக்காரனிடம் சிக்கிய கூலித் தொழிலாளியின் நிலைதான் !
வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க