சீனாவில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்த 1911-ம் ஆண்டுப் புரட்சியின் 110-ஆவது நினைவுக் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ‘‘தைவான் அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படும், தைவான் அரசின் தனிநாட்டுப் பிரிவினைவாதம்தான், தாய்நாடான சீனாவுடன் மீண்டும் தைவானை ஒன்றிணைப்பதற்கு தடையாக இருக்கிறது. சீன அரசாங்கம் தனது தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிச்சயமாக நிறைவேற்றும்’’ என்று பேசியதைத் தொடர்ந்து சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலுள்ள பிரச்சினை சர்வதேச அளவில் பேசுபொருளானது.
ஷி ஜின்பிங்கின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய தைவான் அதிபர் சாய் இங் வென், ‘‘நாம் எந்த அளவுக்கு சாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் நமக்கு அதிகரிக்கும். தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’’ என்றார்.
தைவான் இணைப்பு குறித்து ஷி ஜின்பிங் பேசுவதற்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே, 150−க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அடுத்தடுத்து தைவான் வான் பரப்பில் பறக்கவிட்டிருக்கிறது, சீனா. இதுபற்றி ‘‘கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சீனா, தைவான் மீது போர்த்தொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது’’ எனக் கூறுகிறார் தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சர் சியூ குவோ-செங்.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் இவ்விவகாரங்கள் போய்க் கொண்டிருக்கும்போதே, பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘தைவானுக்கு சீனாவால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால், தைவானுக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம்’’ என்கிறார். அதாவது அமெரிக்காவின் இராணுவத் தலையீடு இருக்குமென்கிறார். அவர் சொன்னதைப் போல, தைவானுக்குள் தனது இராணுவத் துருப்புகளை இறக்கியது அமெரிக்கா. ‘‘தைவான் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க குறைந்த அளவிலான அமெரிக்கத் துருப்புகள் உள்ளன’’ என பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சாய் இங் வென், ‘‘எங்கள் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவுடன் நாங்கள் பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்’’ என்று கூறினார்.
படிக்க :
♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
♦ கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !
தைவானை சீனாவுடன் இணைக்கப்போவதாக ஷி ஜிங்பிங் கூறுவதும் ‘தைவானுக்கு ஆதரவு’ எனும் பெயரில் அமெரிக்கா தனது இராணுவத் துருப்புகளை தைவானில் குவிப்பதையும் புரிந்துகொள்ள நாம் தெற்காசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவப் போக்குகளின் நிலைமைகளிலிருந்து இப்பிரச்சினையைப் பரிசீலிப்பது அவசியம்.
தைவான் மீது சீனாவிற்குள்ள மரபுரிமையும்
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடும்
சீனா-தைவான் பிரச்சினை இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 1949-ம் ஆண்டில் இருந்தே தொடர்கிறது. காலங்காலமாக தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. தைவானைச் சேர்ந்தவர்களும் சீனாவைச் சேர்ந்தவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மொழி, நெருங்கிய பண்பாடு, வரலாற்றைக் கொண்டவர்கள். 1895-ம் ஆண்டு சீனாவை ஆண்ட கிங் வம்ச அரசுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரில், தைவானை ஜப்பான் கைப்பற்றி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுத்தோல்வி அடைந்தவுடன், தைவானை மீண்டும் சீனாவிடமே ஒப்படைத்துவிட்டது. உலகப் போர் முடிவடையும் போது, தோழர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால், சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி வெடித்துக் கிளம்பியது. பெய்ஜிங்கை தலைநகராக கொண்ட சீனாவை ‘‘மக்கள் சீனக் குடியரசு’’ (PRC – People’s Republic of China) என தோழர் மாவோ அறிவித்தார். கோமிண்டாங் படைகள் விரட்டியடிக்கப்பட்டு தற்போதுள்ள சீனா முழுமையையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
