மெரிக்க மேலாதிக்க வல்லரசு உலகலாவிய பயங்கரவாத அடாவடி அரசாக (Global terrorist rogue State) திகழ்கிறது. அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி “அடாவடி அரசுகளின் உலக விவகாரங்களிலான வன்முறையின் ஆளுமை” என்ற தனது நூலில் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் அடாவடித்தனங்களை அடுக்கடுக்காக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் அருகிலேயே அமைந்திருக்கும் சின்னஞ்சிறு கியூபா நாட்டை கபளீகரம் செய்வதற்காக பன்னெடுங்காலமாக சதி வலைகளை பின்னி வருகிறது அமெரிக்கா. கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ. உளவுப் படை நடத்திய கடுமையான முயற்சிகள் தோல்வியடைந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கோரமுகம் உலக மக்கள் முன் அம்பலப்பட்டுப் போய் நின்றது அனைவரும் அறிந்த ஒன்று.

கியூபா அரசை நிலைகுலைய வைப்பதற்கான சதிச் செயல்களை அமெரிக்க மேலாதிக்க வல்லரசு அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாலும் அத்தனை சதிச் செயல்களையும் முறியடித்து பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே கியூபா ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வோடு இருப்பதால், அமெரிக்க மேலாதிக்க வல்லரசு கியூபாவின் மக்கள் நல அரசை சீர்குலைக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

படிக்க :
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !
♦ இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

அமெரிக்க மேலாதிக்க வல்லரசு, 60 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா மீது வர்த்தகத் தடையை விதித்துள்ளது. உலக வரைபடத்தில் வேறு எந்த நாடும் இத்தகைய தடைகளை சந்தித்தது இல்லை. வர்த்தக தடை விதித்ததால் வேறு எந்த நாடும் கியூபாவுடன் வர்த்தகப் பரிவர்த்தனையில் ஈடுபட இயலவில்லை. உயிர் காக்கும் மருந்துகளைக் கூட கியூபாவால் இறக்குமதி செய்ய இயலவில்லை.

29 ஆண்டுகளாக ஐ.நா சபையின் பெரும்பான்மை தேசங்களும் கியூபா மீது உள்ள வர்த்தக தடையை நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தன. 184 நாடுகள் தடையை நீக்க ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த பொருளாதாரத் தடையால் கியூபா 29 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் (ரூ. 11,25,000 கோடி) நஷ்டம் அடைந்து உள்ளது.

இந்த தடைகளையும் தாண்டி, கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த சிறந்த தடுப்பூசிகளை கியூபா உருவாக்கியுள்ளது. இந்த தடையால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் சில நாடுகளிலிருந்து தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு கியூபாவிற்கு இயலவில்லை. அமெரிக்காவில் உள்ள ஜனநாயக சக்திகள், மனித நேயர்கள் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் இரக்கமற்ற அரக்கத்தனத்தை  கண்டித்து  “கியூபாவிற்கு ஊசிகள், மருந்துகளைக் கொடு” என்ற இயக்கத்தை நடத்துகின்றனர்.

VIDEO: Cuban People Pay Tribute to Fidel Castro at Revolution Sq

உலகம் முழுவதும் தொடரும் கொரோனா நெருக்கடி காரணமாக சமீபத்தில் கியூபாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கியூபாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையை ஊதிப் பெருக்கி அங்கு குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்க மேலாதிக்க வல்லரசு தீவிரமாக முயல்கிறது. அங்கிருக்கும் வலதுசாரி அமெரிக்க அடிவருடிகளைக் கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. கியூபாவில் சமூக ஊடகங்கள் வழியாக புதுவித போரை கியூபாவிற்கு எதிராக நடத்துகிறது. அர்ஜெண்டினா தேசத்தின் தீவிர வலதுசாரியும்  அமெரிக்க கைக்கூலியுமான அகஸ்டின் அந்தோணி என்ற செயல்பாட்டாளர் பல்லாயிரக்கணக்கான ட்விட்டர் கணக்குகளைத் தொடங்கி கியூபாவுக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். தொழிலாளர் இயக்க தலைவர்களை, இடதுசாரி சிந்தனையாளர்களை இழிவு செய்வதையே முழு நேரத் தொழிலாக கொண்டிருப்பவன் தான் அகஸ்டின் அந்தோணி என்ற இந்த வலதுசாரி.

கியூபாவிற்கு எதிரான சதித் திட்டங்களுக்கு தலைமையிடமாக புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமிச் நகரம் உள்ளது. “நாங்கள் செய்திகளை உற்பத்தி செய்கிறோம்; முதல் வெளிச்சம் பாய்ச்சப்படுவதே சிறந்த செய்தி” என்று கூறுகின்றன இந்த சமூக வலைத்தளங்கள்.

ஆட்டுக்குட்டிக்கு ஓநாய் காவல்” என்பது தான் ஏகாதிபத்திய சித்தாந்த அடித்தளம். உளவுத் தொழில் நுட்பம், புரட்சி எதிர்ப்பு வகுப்புகள் என பயிற்சி கொடுக்கப்பட்டு தான் பொய்யையும் புனை சுருட்டையும் சமூக ஊடகங்களில் ஏகாதிபத்திய எடுபிடிகள் பரப்புகின்றனர்.

10-07-2021 தேதியன்று கியூபாவில் ஆர்ப்பாட்டங்களும் பெரும் குழப்பங்களும் நடைபெற்றன. கியூபாவின் சான் அன்டோனியோ என்ற இடத்தில் கியூப அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த செய்தியை டிவிட்டர் கணக்கின் மூலம் உலகம் முழுவதும் பரப்பினர். அமெரிக்க கடற்படையின் yusneby என்ற கணக்கின் மூலமாகவே இச்செய்தி பரப்பப்பட்டுள்ளது. கியூபாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுக்கு எதிராக பெரும் பேரணிகள் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பித்தலாட்ட செய்தியை இந்திய ஊடகங்களும் அப்படியே வாந்தி எடுத்தனர்.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் பிரதிநிதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல ஆண்டுகளாக அடக்குமுறைக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் ஆட்பட்ட போது விடுதலைக்காக போராடும் கியூபா மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் நிற்கிறோம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

ஏகாதிபத்திய எடுபிடி கும்பலின் எதிர்ப்பு ஆகப் பெரும்பான்மையான கியூபா மக்களால் நிராகரிக்கப்பட்டது. பொருளாதார துன்பங்களின் மூலம் இன்னலுக்கு உள்ளாகும் கியூபா மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு கியூபாவின் மக்கள் நல அரசை கவிழ்த்து விடலாம் என்று எண்ணிய அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கனவு தகர்ந்தது.

அமெரிக்க நாட்டில் குடியேறிய கியூபா நாட்டினரை தெற்கு புளோரிடா மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத கும்பலை வைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். கியூபா தூதரகத்தின் முன் குண்டுகளை வீசினர். கியூபா நாட்டினர் மீது தொடுக்கும் தாக்குதலை நிறுத்த வேண்டும். கியூபா மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு கூறியுள்ளது. வெனிசுலா, மெக்சிகோ ஆகிய நாடுகள் தங்களது முழு ஆதரவையும் கியூபா நாட்டிற்கு வழங்கியுள்ளன.

படிக்க :
♦ எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
♦ கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !

அமெரிக்கா நடத்துகின்ற அத்தனை அடாவடித்தனங்களை, உலக நாடுகளும், உலக பாட்டாளி வர்க்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அமெரிக்காவின் அட்டூழியங்களை சகித்துக் கொள்ள கியூபா தனித்து விடப்படவில்லை. உலக சமாதானத்துக்கான அமைப்புகள் தங்களது பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சமூக மாற்றத்துக்கான புரட்சிகர அமைப்புகள், சமூக இயக்கங்கள், அறிவுத்துறையினர், மனிதநேய சிந்தனை உள்ள தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கியூபா மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தத்துவார்த்த ரீதியில் சில சிதைவுகளும் மாற்றங்களும் நிகழ்ந்துள்ள போதும், கியூபா நாட்டினுடைய அரசு மக்கள் நல அரசாக இருக்கிறது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் அத்துமீறிய தலையீட்டை, அடாவடித்தனத்தை முறியடித்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியது சர்வதேச ஜனநாயக சக்திகள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. இந்தியத் துணை கண்டத்தில் சமூக மாற்றத்திற்காக போராடும் புரட்சிகர இயக்கத்தின் போராளிகளுக்கும், மக்களுக்கும் இந்த மகத்தான கடமை உள்ளது.


இரணியன்

செய்தி ஆதாரம் : டெலிசர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க