சிரியாவில் நடைபெறும் துன்பியல் நிகழ்வுகள்

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமான பத்தாவது ஆண்டை நினைவு கூருமுகமாக இவ்வாண்டு மார்ச் நடுப்பகுதியில் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள், சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி பஸீர் அல் – ஆஸாத்தும் அவரை பின்னால் இருந்து ஆதரிப்பவர்களும்தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்கள்.

ஆனால், உண்மை வேறு விதமானது. ஆஸாத் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்பே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., 1947-ம் ஆண்டே சிரியாவில் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆட்சி மாற்றம், சதி முயற்சிகள், கொலை முயற்சிகள், கூலிப்படைத் தாக்குதல்கள் என சி.ஐ.ஏ-வால் சிரியாவில் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாறு உண்டு.

படிக்க :
♦ சிரியா : அடுத்த இராக் ?
♦ சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

1949-ல் அப்போதைய சிரிய ஜனாதிபதி சுக்ரி அல் – ஹ-வாட்லிக்கு எதிராக இரத்தம் சிந்தாத இராணுவச் சதியொன்றை சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதுபற்றி பின்னர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட அந்தக் காலகட்டத்தில் சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்த சி.ஐ.ஏ. நிலையத்தின் தலைமையதிகாரியான மைல்ஸ் கோப்லான்ட் (ஜூனியர்), இந்தச் சதியின் நோக்கம் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தும், மற்றைய தீவிரவாதிகளிடம் இருந்தும் சிரியாவைப் பாதுகாப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவச் சதியின் பின்னர் சி.ஐ.ஏ-வால் பதவியில் அமர்த்தப்பட்ட கேர்ணல் அடிப் ஸேய்ஸாக்லி பதவியில் இருந்த 4 வருட காலத்தில் அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்காக கொலை, விபச்சாரம், கொள்ளை போன்ற பல வகையான பாவச்செயல்களில் ஈடுபட்டார். பின்னர் அவரை பாத் கட்சியும், இராணுவ அதிகாரிகளும் இணைந்து பதவியில் இருந்து தூக்கியெறிந்தனர்.

1955-ல் சிரியாவில் இன்னொரு இராணுவச் சதிக்கான நிலைமைகள் உருவாகியிருப்பதாக சி.ஐ.ஏ. மதிப்பிட்டது. 1956 ஏப்ரலில் சி.ஐ.ஏ-வும், எஸ்.ஐ.எஸ்-ம் (பிரித்தானிய இரகசிய உளவுச் சேவை) இணைந்து வலதுசாரி சிரிய இராணுவ அதிகாரிகள் மூலம் ஒரு சதியை நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினை உருவானதால் அந்தத் திட்டம் தடைப்பட்டுவிட்டது.

சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்

சிரியாவை ‘கம்யூனிஸத்திலிருந்து காப்பாற்றுவது’ என்ற நோக்கத்துடன் இன்னொரு சதியை 1957-ல் சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதற்காக சிரிய இராணுவ அதிகாரிகளுக்கு 3 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டது. இதுபற்றி 2008-ல் ‘பரம்பரைச் சொத்தின் சாம்பல்: சி.ஐ.ஏ-ன் சரித்திரம்’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட ரிம் வெய்னர் பின்வருமாறு கூறுகிறார்:

கடவுளுக்கு எதிரான கம்யூனிஸத்துக்கு எதிராக இஸ்லாமிய ஜிகாத் கருத்தை நாம் உருவாக்க வேண்டும் என (ஜனாதிபதி) ஐஸனோவர் கூறினார். 1957இல் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘புனித யுத்தம்’ என்ற கருத்தை முடியுமான எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்”.

ஆனால் சில “வலதுசாரி – இராணுவ” அதிகாரிகள் இந்தத் திட்டம் பற்றி சிரியாவின் உளவுச் சேவைக்கு தகவல் கொடுத்துவிட்டனர். அதன் காரணமாக சிரியா டமஸ்கஸ்ஸில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த 3 சி.ஐ.ஏ. அதிகாரிகளை வெளியேற்றியதுடன், அங்கிருந்த அமெரிக்கத் தூதுவரையும் திருப்பியழைக்கும்படி அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது. அதைத் தொடர்ந்து சிரியாவை அமெரிக்கா “சோவியத் துணைக்கோள்” என வர்ணித்ததுடன், மத்தியதரைக் கடலில் தனது கடற்படையையும் நிறுத்தியது.

அத்துடன் சிரியாவின் “அத்துமீறல்களுக்கு எதிராக” என்ற போர்வையில் அமெரிக்கா சிரியா மீது இராணுவத் தாக்குதல் ஒன்றையும் நடத்தியது. இந்தத் தோல்வியடைந்த சதி நடவடிக்கையில் பிரித்தானியாவின் எம்16-ம் பங்குபற்றியது. இந்த விபரம், பின்னர் அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த காலம் சென்ற டன்கான் சான்டேஸ் அவர்களின் ஆவணங்கள் சில 2003-ல் தற்செயலாக வெளியானபோது அம்பலத்துக்கு வந்தது.

2006-ல் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ஒரு தகவலின்படி, லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிரியர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதுடன், சி.ஐ.ஏ. குழு கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி சிரியாவுக்குள் இறக்கியுள்ளதுடன், குறிப்பிட்ட விநியோக வழிகளையும் உருவாக்கியுள்ளது. 2012-ற்குப் பிறகு வருடாந்தம் 1 பில்லியன் செலவிட்டு சிரிய அரசுக்கு எதிராகப் போரிடும் 10,000 கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

நன்கறிந்த அமெரிக்க புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் எழுத்தாளருமான சேமௌர் ஹேர்ஸ் எழுதியதின்படி, அந்த நேரத்தில் லிபியாவின் பெங்காசியிலிருந்து தனது புலனாய்வு அதிகாரிகளை அமெரிக்கா சிரியாவுக்கு நகர்த்தியுள்ளது. உலகத்திலேயே ஆஸாத்தை சிரியாவிலிருந்து அகற்ற வேண்டும் என 2011-ல் பகிரங்கமாக அறிவித்த ஒரே உலகத் தலைவர் பராக் ஒபாமாதான்.

பாரசீக வளைகுடாவிலுள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபுக் குடியரசு என்பன சிரியாவில் அரச படைகளை எதிர்த்துப் போராடும் ஆயிரக்கணக்கான ஜிகாதிகளுக்கு தமது செலவில் நிதியுதவியும் தளபாட வசதிகளும் அளித்து வருகின்றன. இந்த நிலைமையில் 2015-ல் ரஸ்யா சிரிய அரசாங்கத்துக்குச் சார்பாகக் களமிறங்கியதை அடுத்து, 2017-ல் சவூதி அரேபியா அங்கிருந்து வெளியேறியது.

சிரியாவின் உள்நாட்டுப் போர்தான் எமது காலத்தில் நடைபெறும் மிகவும் அழிவுகரமான யுத்தமாகும். இந்த யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான சிரிய மக்கள் இறந்து போயுள்ளனர், சனத்தொகையில் அரைவாசிப்பேர் இடம் பெயர்ந்துள்ளனர், மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடுகின்றனர். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கணிப்பீட்டின்படி, சிரியாவின் சனத்தொகையில் 70 சதவீதமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர், 6.7 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர், 13 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மனிதாபிமான உதவிகளையும் பாதுகாப்பையும் வேண்டி நிற்கின்றனர், சனத்தொகையில் 60 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

மத்திய கிழக்கில் சிரியா உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கியது. அந்த நாட்டை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சேர்ந்து சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன. ‘அரபிஸம்’ என்ற கருத்துருவத்தை அமெரிக்கா திட்டமிட்டு அழித்து வருவதையே சிரியாவில் நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கி போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தடவைகள் முயன்றாராயினும், அமெரிக்க பெண்டகன் இராணுவ அதிகாரிகள் அதற்கு விடவில்லை. புதிய ஜனாதிபதி பைடன் சிரிய விடயத்தில் என்ன செய்யப் போகின்றார் என்பது இன்னமும் தெரிய வரவில்லையாயினும், அங்கிருந்து அமெரிக்கத் துரப்புகளை விலக்கிக் கொள்ளும் நோக்கம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

முகநூலில் : Maniam Shanmugam

disclaimer

1 மறுமொழி

  1. இந்தக் கட்டுரையில் இருப்பது சிரியா குறித்த முழுமையான மதிப்பீடன்று. பின்வரும் கட்டுரையையும் ஊன்றிப் படித்தால் முழுப் பார்வை கிடைக்கும்.

    https://www.counterpunch.org/2021/03/21/a-short-history-of-the-syrian-conflict/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க