சுமார் 29 ஆண்டுகள் சிரியாவை ஆண்டு வந்த ஹஃபீஸ் அல் அசாத்திற்குப் பிறகு, தனது 34-ஆவது வயதில் சிரியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த அல் அசாத், சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களுள் ஒன்றான ஹயாத் தஹ்ரிக் அல்-ஷாமினால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்.
சிரியாவின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள், அகதிகளாக சொந்த மண்ணை விட்டு வெளியேறிய சிரிய மக்கள் தங்களது தாயகத்திற்கு திரும்பலாம் என்றும், இருண்ட காலத்தின் முடிவையும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை தாங்கள் அறிவிப்பதாகவும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிரியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் அசாத்தின் ஆட்சி தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளர்ச்சிக் குழுவானது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, சிரியாவை விட்டு வெளியேறிய அல் அசாத் குடும்பத்துடன் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருப்பதை ரஷ்யாவின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிலவிவந்த அசாத்தின் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டிருப்பதாலேயே, உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கருத இயலாது என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. மேலும், தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஹயாத் தஹ்ரிக் அல்-ஷாம் (HTS) அமைப்பின் செயல்பாடுகளைப் பார்க்கையில், சிரிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான ஒரு மாற்று அரசியல் சக்தியாக கருதுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதையே சூழல்கள் உணர்த்துகின்றன.
ஹயாத் தஹ்ரிக் அல்–ஷாம்
சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப் போரானது பல்வேறு போராளிக் குழுக்கள் உருவாகி வளர்வதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு குழுவும் அதிகாரத்திற்கு போட்டியிட்டு வருகின்றன. இதில் வடமேற்கு சிரியாவில் உள்ள இத்லிப் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த இஸ்லாமிய அடிப்படைவாத கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிக் அல்-ஷாம் (ஹெச்.டி.எஸ்.) தற்போது ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக வளர்ந்துள்ளது.
இந்த கிளர்ச்சிக் குழுவின் நிறுவனர் தற்போது சிரியாவின் ஆட்சியாளராக தன்னை அறிவித்துக் கொண்ட அபு முகமது அல் ஜூலானி ஆவார். 2003-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படைகளின் கூட்டுப் படையெடுப்பிற்குப் பிறகு, அல்-கொய்தா ஜிஹாதி குழுவில் அல்-ஜூலானி இணைந்ததாக கூறப்படுகிறது. 2010-ஆம் ஆண்டு ஜூலானி ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு குவைத் எல்லைக்கு அருகிலுள்ள புக்கா கேம்ப்பில் வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டது.
படிக்க: இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவில் அகதிகளாக தஞ்சமடையும் லெபனான் மக்கள் | படக்கட்டுரை
சிரியப் போரின் தொடக்கத்தில், 2012-ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆல் ஜபத் அல் நுஸ்ரா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஐ.எஸ். உடனான தனது உறவை முறித்துக் கொண்டு அல்-கொய்தாவிற்கு ஆதரவளிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது. அதன் பிறகு, 2016 -இல் அல்-கொய்தாவுடனும் உறவை முறித்துக் கொண்டதாக ஜூலானி அறிவித்தார்.
2017-ஆம் ஆண்டில் சிரியாவில் இருந்த சில கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைத்து ஹயாத் தஹ்ரிக் அல்-ஷாம் (ஹெச்.டி.எஸ்.) என்று இதற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு இத்லிப் நகரத்தை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை நிறுவியதுடன், அங்கு அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். அமைப்புகளின் செயல்பாடுகளையும் முறியடித்தது.
அசாத்தின் வீழ்ச்சிக்கான காரணம்
ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பானது உள்நாட்டு கிளர்ச்சிக் குழுக்களை அடக்குவதில் அசாத்திற்கு முக்கிய கூட்டாளியாக விளங்கியது. தற்போது, இஸ்ரேலின் தாக்குதலால் ஹிஸ்புல்லா நிலைகுலைந்துள்ளது.
மேலும், அசாத்திற்கு முக்கியக் கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தங்களது சொந்த நாடுகளுடனான மோதல்களில் முதன்மை கவனம் செலுத்தி வருகின்றன. அத்துடன், பல ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் அசாத்தின் இராணுவம் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளதும் அவரது வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகும்.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு சில தினங்களில் அதிரடியாக தாக்குதலை அடுத்தடுத்து நடத்தியதன் மூலம் தற்போது சிரியாவின் தலைநகரை கிளர்ச்சிக் குழு கைப்பற்றியிருக்கிறது.
ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முந்தைய சிரியா
பஷர் அல் அசாத்தின் ஆட்சியிலும் அதற்கு முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த அவரது தந்தை ஹஃபீஸின் ஆட்சியிலும் மக்களுக்கு சொல்லொணா அநீதிகள் இழைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் மிகத் தீவிரமாக அரங்கேறியது.
உள்நாட்டுப் போரானது தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிரியாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருந்து இலட்சங்களாக உயர்ந்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் மட்டும் கொல்லப்பட்ட சிரிய மக்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து இலட்சம் வரை இருக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2017-ஆம் ஆண்டு, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தனது அறிக்கையில், செட்னயா சிறை ஒரு மனித படுகொலைக் கூடம் என்று தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு முதல், 2018-ஆம் ஆண்டு வரை போதிய வசதிகள் இன்றியும் மரண தண்டனை வழங்கப்பட்டும் சுமார் 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, கைதிகள் மற்றும் காணாமல் போனோருக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிரியாவில் தற்போது அசாத் ஆட்சி தூக்கியெறியப்பட்ட நிலையில் செட்னயா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் மற்றும் சிரிய மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது கொல்லப்பட்டு விட்டனரா என்று அவர்களின் உறவினர்கள் தற்போது தேடிக்கொண்டிருக்கின்றனர்.
2.5 கோடி மக்கள்தொகை கொண்ட சிரியாவில் சரி பாதி பேர், 50 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி, 10 ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போர் மற்றும் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மறுபுறம், அசாத்தின் இரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்தப் பொருளாதாரத் தடைகள் சிரிய மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் உயிருக்கே ஆபத்தான சூழலில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில்தான் ஆட்சிக் கவிழ்ப்பானது அரங்கேறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சியில் நாம் பங்கெடுக்க முடியாது என்பதையே சிரியாவில் உள்ள நிலைமைகள் உணர்த்துகின்றன.
தற்போதைய குழப்பமான அரசியல் சூழல்
அரை நூற்றாண்டுகாலமாக அடிமையாக்கப்பட்டிருந்த சிரிய மக்களை மீட்கவந்த மீட்பராக தற்போது ஜூலானி கொண்டாடப்படுகிறார். ஆனால், தற்போதுள்ள சூழலில் சிரியாவில் ஒரு மக்கள் நல அரசை நிறுவுவதாக கூறினாலும் அதற்கு பல சவால்கள் இருக்கின்றன.
சிரியாவில் ஹெச்.டி.எஸ்-ஐப் போன்றே பல்வேறு ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்கள் இருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏகாதிபத்திய நாடுகளும், இஸ்ரேல், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளும் தங்களது நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சிரியாவில் பல்வேறு குழுக்களை ஆதரித்து, ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி முதலானவற்றை வழங்கி வருகின்றன.
சான்றாக, ஜூலானியின் ஹயாத் தஹ்ரிக் அல்-ஷாம் அமைப்பானது இத்லிப் நகரில் நீதி வழங்கல், கல்வியளித்தல், சுகாதாரம், பாதுகாப்பை வழங்குதல் என்று ஒரு மாற்று அரசுக் கட்டமைப்பாகவே ஆட்சிசெலுத்தி வந்தது. அதைப் போலவே, தெற்கு சிரியாவில் பழங்குடி போராளிகள் அசாத்தின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை. தற்போது ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ஜூலானியிடமும் அவர்கள் அதே போக்கையே கடைபிடிப்பார்கள்.
சிரியாவில் உள்ள பல ஆயுதக் குழுக்கள் ஜூலானியுடன் முழுவதுமாக உடன்படவில்லை. ஹெச்.டி.எஸ்-யிடம் இருந்து தங்கள் பகுதியை கைப்பற்றவே அவர்கள் விரும்புகின்றனர்.
ஏற்கெனவே, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சிரியாவின் வழியாகவே ஆயுதங்களை ஈரான் வழங்கி வருகிறது. இதனால், சிரியாவின் கட்டமைப்புகளின் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
படிக்க: லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை
மேலும், சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ். குழுக்கள் இன்னும் எஞ்சியுள்ளன. சிரியாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இஸ்ரேலானது, இதனை ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை. அத்துடன், சிரியாவில் நிகழ்ந்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பினால் நிலவும் அசாதாரண சூழலை தனக்கான நல்வாய்ப்பாக கருதி இஸ்ரேலானது, சிரியாவின் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம். தற்போது சிரியாவிற்குள் புகுந்து அந்நாட்டு ராணுவ அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறிவருவது இதனை நிரூபிக்கின்றது.
அதோடு மட்டுமன்றி, சிரியாவில் இன்னும் அமெரிக்கா, துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பினாமி படைகள் வெளியேறாமல் இருக்கின்றன.
ஜூலானியின் ஆட்சி எத்தகையது?
சிரிய மக்களின் மீது அசாத்தின் கொடுங்கோன்மையை எதிர்க்கும் அதே வேளையில், அமையவிருக்கும் ஜூலானியின் ஆட்சியும் கவனிக்கத்தக்கதாகும். ஒரு மக்கள் விரோத அட்சி தூக்கியெறியப்பட்டது என்ற காரணத்தினால் மட்டுமே, ஜூலானியின் ஆட்சியை ஜனநாயகப்பூர்வமான ஆட்சி என்று அங்கீகரித்து விட முடியாது.
அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு முன்பு இத்லிப் உள்ளிட்ட ஹெச்.டி.எஸ்-இன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஹெச்.டி.எஸ்-ஐ எதிர்ப்பவர்களுக்கு சட்டவிரோத தடுப்புக் காவல், மரண தண்டனைகள் வழங்கப்படுவதையும் மேலும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபையானது, ஆவணப்படுத்தியுள்ளது.
ஹெச்.டி.எஸ். அமைப்பானது, அடிப்படையில் குட்டி முதலாளித்துவ, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாகும். அதன் தலைவரான ஜூலானி சி.என்.என். உடனான நேர்காணலில், “சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை நிர்வகிப்பதில், பொதுமக்கள் சிறிதும் பயப்பட வேண்டியதில்லை. இஸ்லாமிய நிர்வாகத்தை கண்டு மக்கள் அஞ்சுவதற்கு காரணம் அது தவறான முறையில் செயல்படுத்தப்படுவதையே இதுவரை கண்டிருக்கிறார்கள் அல்லது அதனை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.
எனவே, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பான ஹெச்.டி.எஸ். ஆனது, மத சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு ஜனநாயகப் பூர்வமான ஆட்சியை வழங்கும் என்று நம்புவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
மேலும், மிகக்குறுகிய காலகட்டத்தில் அசாத்தின் ராணுவத்தை முறியடித்து சிரியாவை கைப்பற்றும் அளவிற்கு, ஹெச்.டி.எஸ். அமைப்பிற்கு ஆயுதங்களும் நிதியும் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பதும் சந்தேகத்திற்குரியதுதான் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
ஏனெனில், சிரியாவின் உள்நாட்டு போருக்காக ரஷ்யாவிடமிருந்து ஆயுத உதவிகளை பெறும் அளவிற்கு அசாத் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை பாராட்டி வந்தார். எனவேதான், இது அமெரிக்க பின்னணியுடன் துருக்கி மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை என்றும் இது துருக்கியின் வெற்றி என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் நேரடியாகவே எழுதி வருகின்றன.
பாட்டாளி வர்க்க இயக்கமே தேவை!
குட்டி முதலாளித்துவ இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஹெச்.டி.எஸ். ஆனது, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை இருட்டடிப்பு செய்வதுடன், ஆணாதிக்க, அடக்குமுறை, பிற்போக்கு சித்தாந்தத்தையே முன்னிறுத்துகிறது. மேலும், இது சிரிய மக்களிடையே பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கான கூறுகளையே உள்ளடக்கியுள்ளது.
1960-களின் பிற்பகுதியில், சிரியாவில் பல மார்க்சிய விவாத வட்டங்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் இருந்தன. 1981-இல் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று நிறுவப்பட்டது. இவையாவும், 1990-களில் தீவிரமாக ஒடுக்கப்பட்டன. 2000-ஆம் ஆண்டுகளில் சில தனிநபர்கள், சிறு குழுக்கள் மீண்டும் வெளிப்பட்டன. 2011-இல் சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, முற்றிலுமாக இடதுசாரி குழுக்கள் செயலிழந்துவிட்டன. அதைத் தொடர்ந்து, முற்போக்காளர்கள் எனப்படுவோரும், அசாத்தை எதிர்ப்பதற்காக இஸ்லாமிய பழமைவாத வலதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர். இன்றுவரை, ஒரு சுதந்திரமான, முற்போக்கான இடது ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க முடியாததுதான், சிரிய விடுதலையை சாதிப்பதற்கு முதன்மையான தடையாகும்.
ஆகவே, சிரியாவில் பாட்டாளி வர்க்க இயக்கத்தை கட்டமைப்பதில் தனது சொந்த அனுபவங்களை வரித்துக்கொண்டு, அமெரிக்கா, இரஷ்யா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கும் இஸ்ரேல், துருக்கி போன்ற பிராந்திய வல்லரசுகளுக்கும் எதிராக சிரிய விடுதலையை சாதிக்கும் பொருட்டு, இனம், மதம், தேசியம் கடந்து, மக்களை ஒன்றிணைப்பதற்கான இயக்கத்தை பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் கட்டியமைப்பதே ஒரே தீர்வாகும்.
மேலும், அமெரிக்க-இரஷ்ய ஏகாதிபத்தியங்களாலும், அவர்களின் அடியாட்களான இஸ்ரேல்-துருக்கி போன்ற பிராந்திய வல்லரசுகளாலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் பாட்டாளி வர்க்க இயக்கங்களுடனான கூட்டமைப்பை உருவாக்குவதும், சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கங்களுடன் தனது உறவுகளை பலப்படுத்திக் கொள்வதும் உடனடியான தேவையாகும்.
இவ்வாறு சொல்லும்போது, இத்துணை நெருக்கடியான சூழலில், அந்நாட்டில் புரட்சிகர இயக்கங்கள் வலுவிழந்து போயுள்ள சூழலில் இவையெல்லாம் சாத்தியமா என கேள்வி எழலாம். ஆனால், அங்குள்ள மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்கு இதனை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதே எதார்த்தமாகும். எனவே, சிரிய உழைக்கும் மக்களை புரட்சிகர அரசியலை நோக்கி நெட்டித் தள்ளுவதே ஒரே தீர்வாகும்.
000
பின்குறிப்பு :
இஸ்ரேல்–பாலஸ்தீனப் போர்:
தற்போது, மத்தியக் கிழக்கில் மையமான பிரச்சினை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போராகும். தற்போது மத்திய கிழக்கு நாடான சிரியாவில் ஏற்பட்டிருக்கும் அதிகார மாற்றமானது, இப்போரில் பாலஸ்தீனத்திற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம் என்று இந்திய எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான பாரத் டோக்ரா குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடனான ஹெச்.டி.எஸ்-இன் சுமூகமான உறவு பாலஸ்தீன விடுதலைக்கு பாதகமான அம்சமாகும். இஸ்ரேல் ஊடகங்களுக்கு கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்கள் அளித்த பேட்டியில், “நாங்கள் இஸ்ரேலை நேசிக்கிறோம், நாங்கள் ஒருபோதும் அதன் எதிரிகள் அல்ல” என்று கூறியுள்ளனர். மேலும், கிளர்ச்சிக் குழுக்கள் சிரியாவைக் கைப்பற்றியதுடன் மட்டுமன்றி, அடுத்த கட்டமாக லெபனானையும் கைப்பற்றும் நோக்கில் முன்னேறுவதில் ஜூலானி ஆர்வமாக இருப்பதாக, antiwar.com-இன் ஆசிரியர் ஜேசன் டிட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது, இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்ட முன்னணிக்கும் ஆபத்து விளைவிப்பதாகும்.
பாரி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram