சிரியாவில் எந்தெந்த படைகள் எந்தெந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதை விளக்கும் வரைபடம். (நன்றி : அல்ஜசீரா)

ட்டு ஆண்டுகளாக நடந்து வரும் சிரிய போர் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

இதுவரை மேற்கு உலக லிபரல் பத்திரிகைகளால் போராளிகள் என அழைக்கப்பட்டு வந்த சிரிய அரசு எதிர்ப்பு ஆயுத குழுக்களை (free Syrian army) இன்று அதே பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என எழுதுகின்றன.

அதே நேரம் துருக்கி அரசு குர்துகள் மீது படையெடுக்க வசதியாக அமெரிக்க துருப்புகளை விலக்கி கொண்ட டிரம்ப்; துருக்கி மீது பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரட்டுகிறார்.

மற்றொரு பக்கம் சிரிய அரசை இதுவரை எதிர்த்து போராடிய குர்துகள் தற்போது சிரிய அரசுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள். இவ்வாறு சிரிய அரசு – ஜிகாதி பயங்கரவாதிகள் – குர்து தேசிய இன மக்கள் – துருக்கி – அமெரிக்க – ரஷ்யா என பல நலன்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சிரிய போரில் சமீபத்தில் அணிசேர்க்கை மாறியுள்ளது.

***

ன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் சிரியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது. இரானைப்போல மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு சவாலாக இருந்து வந்தது சிரியா. அதன் சர்வாதிகார அதிபர் பஷாரை கவிழ்க்க விரும்பியது அமெரிக்கா. இந்நிலையில் அரபு வசந்தம் என்கிற பெயரில் துனிசியாவில் ஆரம்பித்த வண்ணப் புரட்சிகளின் பின்னணியில்; அதே போல சிரியாவிலும் போராட்டங்கள் ஆரம்பித்தன. இந்த போராட்டத்தினை முகாந்திரமாக கொண்டு முன்னர் ஆப்கானில் செய்ததுபோல இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து பஷாருக்கு ஆதரவாக களம் இறங்கின அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்.

சுதந்திர சிரிய படைகள் என்கிற பெயரில் பல ஜிகாதி குழுக்களை ஒருங்கிணைத்து ஆயுதமளித்தன மேற்குலக நாடுகள். அதன் பத்திரிகைகளோ மேற்கண்ட அல்-கயிதா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை சிரிய போராளிகளாக சித்தரித்தன. சிரிய அதிபர் பஷார் ‘இப்போராளிகளுக்கு’ எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் அதை தடுக்க அமெரிக்கா, சிரியாவின் மீது நேரடியாக படையெடுக்க வேண்டும் எனவும் மேற்குலகில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.

Bashar_al-Assad
சிரியா நாட்டு அதிபர் பஷார் அல் – ஆசாத்

இந்த சந்தர்பத்தில் ரக்கா நகரை தலைநகராகக் கொண்டு தங்களது கிலாபத்தை அமைத்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ எதிர்ப்பதையே முகாந்திரமாக கூறி அமெரிக்கா சிரியாவிற்குள் நுழைந்தது. சிரிய அரசுக்கு எதிராக தனிநாடு கோரி போராடிவந்த குர்து தேசிய போராளிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போரில் ஈடுபடுத்தி வந்தது அமெரிக்கா.

சிரிய அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சி கிட்டத்தட்ட உறுதியானது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாக்குபிடிப்பார் என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. 2011-ல் ஆரம்பித்து 2015 வரை முக்கிய நகரங்கள் அலப்போ, ரக்கா, ஐடில்ப் உள்ளிட்ட நகரங்கள் கைப்பற்றப்பட்டு தலைநகர் டமாஸ்கஸ், அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்குள் முடக்கப்பட்டது ஆசாத் அரசு.

மிக தாமதமாக 2015-ல் தனது ஆதரவு சிரிய அதிபரைக் காப்பாற்ற நேரடியாக களத்தில் குதித்தது ரஷ்யா-ஈரான் கூட்டணி. அதிபர் பஷாரை எதிர்த்து போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அறிவித்து சிரிய படைகளுக்கு உதவின ரஷ்யா-ஈரான் நாடுகள். சிரிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இரஷ்ய படைகள் சிரிய படைகளுக்கு உதவி செய்தன. இரஷ்ய விமானங்கள் சிரிய படைகளுக்கு வான் பாதுகாப்பு வழங்கியது.

சிரியாவின் மொத்த நிலப்பரப்பு, 1. சிரிய அரசு மற்றும் அதன் ரஷ்ய – ஈரான் படைகள்; 2. குர்து படைகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி, 3. அமெரிக்கா – சிரிய அரச எதிர்ப்புப் படைகள்; 4. ஐ.எஸ்.ஐ.எஸ் என நான்காக பிரிந்திருந்தது.

படிக்க:
♦ துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘
♦ ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்

ரஷ்யா- அமெரிக்கா நேரடி மோதல் வராத வண்ணம் சிரிய அரச படை – சுதந்திர சிரிய எதிர்ப்பு படையை எதிர்த்தும், குர்துகள் படை –  ஐ.எஸ்.ஐ.எஸ் படைகளை எதிர்த்தும் தாக்குதல் நடத்திவந்தன. ரஷ்ய படைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் படையை எதிர்த்து தாக்குதல் நடத்திவந்தன. இப்படி சொல்லப்பட்டாலும் எண்ணெய் வயல்கள் நிரம்பிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர எல்லா தரப்பும் மோதிக்கொண்டன. 2016-ல் ரஷ்ய ஆதரவுடன் முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்ற ஆரம்பித்தது சிரிய அரசு.

இதே சமயத்தில் அமெரிக்காவின் கூட்டாளியாகவும் நேட்டோ நாடுகளில் ஒன்றாகவும் இருந்த துருக்கியின் அதிபர் எர்டோகன் அந்நாட்டில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பிறகு இரஷ்யாவுடன் இணக்கமானார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பின் மேற்குலக நாடுகள் இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் அமெரிக்கவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவின் S-400 ராணுவ தளவாடங்களை வாங்கி ரஷ்யாவுடன் மேலும் நெருக்கமானார் எர்டோகன்.

டொனால்ட் ட்ரம்புடன் துருக்கி அதிபர் எர்டோகன்

ஆரம்பத்தில் மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து சிரியாவின் அதிபர் பஷார் பதவி விலகுவதுதான் சிரிய பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று முன்வைத்தது துருக்கி.  பின்னர் அதை கைவிட்டதுடன் ரஷ்யா – ஈரான் ஆகிய நாடுகளுடன் சிரிய விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

அமெரிக்கா, சிரிய குர்துகளுடன் இணைந்து ஆசாத்துக்கு எதிராக உருவாக்கிய சிரிய ஜனநாயக படையை (Syrian democratic forces – SDF) தனது நலன்களுக்கு எதிரானது என்பதாகவே கருதியது துருக்கி.

துருக்கியில் தனிநாடு கேட்டு ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு வரும்  குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் ஒரு பகுதிதான் சிரிய ஜனநாயக படை (Syrian democratic forces – SDF) என்று துருக்கி குற்றம் சாட்டியது. இதன் மூலம் தனது நாட்டில் போராடும் குர்துகள் மேலும் வலிமையடைவார்கள் என அஞ்சியது.

ஆனால் சிரிய ஜனநாயக படை தான் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆசாத் படைகளுக்கு எதிராக அமெரிக்காவின் துருப்பு சீட்டாக இருந்து வந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்.-ஐ வீழ்த்தி சிரியாவின் ஒரு கணிசமான பகுதியை தனது கட்டுப்பட்டில் கொண்டு வந்தது SDF.

***

ந்த பின்னணியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வருமானம் வராத போர்களை தவிர்க்க விரும்பினார். “நேட்டோ படைகளுக்கு அமெரிக்காதான் அதிகம் செலவழிக்கிறது. மேற்குலக நாடுகள் அதிகம் செலவழிக்க முன்வரவேண்டும்,” “ சவுதி உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்க அதிகம் செலவழிக்கிறது. ஆனால் அதற்கான நலன்கள் கிடைக்கவில்லை” என ஒரு பக்காவான முதலாளியாக கணக்கிட்டார்.

அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்கு பிறகு முடிவில்லாத போர்களை முடிக்க போவதாகவும் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாகவும் அறிவித்தார். ஆனால் அது நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை.

இரண்டாம் உலகப்போரில் அதிகம் ஈடுபடாமல் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திய நாடு அமெரிக்கா. அது போல அமெரிக்கா தற்போது ஆப்கான், ஈராக், சிரியா என ஆக்கிரமிப்பு போர்களை ஆரம்பித்து செலவழித்து விழிபிதுங்கி கொண்டிருக்கும் போது சீனா அது போன்ற எந்த போர்களும் இல்லாமல் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருகிறது.

வருமானம் வராத போர்களை கைவிட்டு, வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பது அமெரிக்காவின் தேவையாக இருக்கிறது. மத்திய கிழக்கிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு சீன செல்வாக்கு மண்டலங்களாக உருவாக வாய்ப்பிருக்கும் பகுதிகளை குறிவைப்பது தான் அமெரிக்காவின் நோக்கம். ஆனால் ஆரம்பித்த போரை முடிக்க முடியாமல் திணறுகிறது.

சிரியாவிலிருந்து அமெரிக்க வெளியேற்றத்திற்கு இதுதான் காரணம். இம்முறை பலிகடாவாக்கப்பட்டவர்கள் குர்துகள். அமெரிக்க உத்திரவாதத்தின்படி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொடுத்து பஷார் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என இரு முனைகளில் போராடிய குர்துகளை துருக்கியின் கொடும்கரங்களில் காட்டிகொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறது அமெரிக்க படைகள்.

படிக்க:
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?
♦ TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார் | காணொளி

இதை புரிந்துகொள்ள சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பேசியது உதவும். “ஆப்கானை சோவியத் ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற அமெரிக்க உளவுத்துறைக்கு உதவியாக ஆப்கானில் தாங்கள் தான் ஜிகாதிகளை உருவாக்கியதாகவும், பின்னர் அமெரிக்கா வெளியேறிய பிறகு தாங்கள் உருவாக்கிய முஜாகிதீன்களால் தாங்களே பாதிக்கப்படுவதாகவும்” பேசியிருந்தார்.

இதே கருத்தை சவுதி இளவரசர் சல்மானும் கூறியிருந்தார். வஹாபியிசத்தை வளர்ப்பதாக மேற்குலக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அந்த வேலையை எங்களுக்கு கொடுத்ததே அமெரிக்காதான் என பதிலளித்திருந்தார்.

அக்டோபர் 2019, 7-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் – துருக்கி அதிபர் எர்டோகனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘அமெரிக்க கூட்டாளியான குர்துகளை’ துருக்கி தாக்குவதற்கு வசதியாக சிரியா – துருக்கி எல்லையிலிருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறின.

சவுதி இளவரசர்

மீண்டும் தனது துரோக வரலாறை நிரூபித்தது அமெரிக்கா. அக்டோபர் 9 முதல் துருக்கி நாட்டு துருப்புகள் குர்து பகுதிகள் மீது தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குர்துகள் தங்கள் ஊரை விட்டு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் சாரை சாரையாக நகரங்களை காலிசெய்து அச்சத்தில் வெளியேறி வருகிறார்கள்.

தங்களை துருக்கியிடம் அடமானம் வைத்த அமெரிக்க துருப்புகளின் மீதும், அவர்களின் கவச வாகனங்கள் மீதும் அழுகிய பழங்களையும், கற்களையும் வீசி குர்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

உலகின் யாருக்கும் ஈடு இணையில்லாத மகாகணம் பொருந்திய அமெரிக்க இராணுவம் அழுகிய பழங்களால் தாக்கப்படும் காட்சிகள் உலகம் முழுவதும் வெளியாகி அமெரிக்க மானத்தை கப்பலேற்றின.

இதையடுத்து தனது ஒளிவட்டத்தை காப்பாற்றிக் கொள்ள துருக்கி குர்துகள் மீது படையெடுக்கலாம், ஆனால் எல்லை மீறிப் போனால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அது தொடர்பாக ஒரு கடிதம் எர்டோகனுக்கு எழுதியதாக செய்தி வெளியாகியது. அதில் “துருக்கிய பொருளாதாரத்தை அழிக்கவும் தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார்…”

***

ப்போரை தொடர்ந்து நடத்த வேண்டிய தேவை எர்டோகனுக்கு இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எர்டோகன் கட்சி படுதோல்வியடைந்தது.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தேசிய வெறியை மக்களிடையே ஊட்டி இழந்த தன் செல்வாக்கை நிலைநாட்ட இந்தபோர் எர்டோகனுக்கு பயன்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றுபட்டு எர்டோகன் கட்சியை வீழ்த்திய எதிர்கட்சிகள் குர்துகள் விசயத்தில் எர்டோகன் எதிர்பார்த்தபடியே பிளவுபட்டுள்ளனர். இதனால் இப்போரை எர்டோகன் உடனடியாக நிறுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை.

டிரம்பின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அக்கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றடைந்ததாக அடுத்த நாளே மேற்குலக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது எதிர்பார்த்த ஒன்றுதான்.

சிதைந்து போயுள்ள சிரியா…

வேறுவழியில்லாமல் குர்துகள் முன்னர் தாங்கள் எதிர்த்த அதிபர் பஷாருடன், ரஷ்யா வழிகாட்டுதல்படி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி குர்துகள் தங்கள் கட்டுப்பட்டிற்குள் உள்ள பகுதிகளை சிரிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சிரிய ராணுவம் எல்லைக்கு விரைந்து துருக்கி படைகளை எதிர்கொள்ளும். சிரியாவிற்குள் குர்துகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

இதே போல அமெரிக்க படைகள் வெளியேறி செல்லும் இராணுவ முகாமிற்குள் இரஷ்ய படைகள் செல்வதும், அதை இரஷ்ய ஊடகங்கள் ஒளிபரப்பியதும் அமெரிக்க செல்வாக்கு சரிகிறதா? என்கிற விவாதத்தை சி.என்.என் முதல் நம்மூர் நியூஸ்7 வரை ஆரம்பித்து வைத்தன.

படிக்க:
♦ சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!
♦ சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

அழுகிய பழங்களாலும், உலக பத்திரிகைகளாலும் அடிவாங்கி அவமானப்பட்ட அமெரிக்கா, அதன் துணை அதிபரை துருக்கிக்கு அனுப்பி இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இதன்படி குர்துப் படைகள் பின்வாங்கி செல்ல வேண்டும். சிரிய துருக்கி எல்லையில் பாதுகாப்பட்ட பகுதிகளை துருக்கி உருவாக்கும். அது துருக்கியின் கண்காணிப்பில் இருக்கும். அதில் சிரிய போரின் அகதிகளை துருக்கி மீள்குடியேற்றம் செய்யும் என்பதாக ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பாக இரஷ்யா இதுவரை அதிகாரபூர்வமாக பெரிதும் எதுவும் தெரிவிக்காத நிலையில் இந்த ஒப்பந்தம் என்ன ஆகும். துருக்கி எல்லைக்குள் நிற்குமா? குர்துகளின் எதிர்காலம் என்னவாகும்? போன்ற கேள்விகள் விடை தெரியாமலே இருக்கின்றன.

இராமச்சந்திரன்

என்ன நடக்கிறது சிரியாவில் ? | Syria War

செய்தி ஆதாரம் :

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க