Saturday, March 15, 2025
முகப்புஉலகம்அமெரிக்காசிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!

சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!

-

சிரியாப்கானிஸ்தான், இராக், லிபியா  அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறுகாலனியாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சிரியா குறிவைக்கப்பட்டுள்ளது.  வடக்கே துருக்கியையும், கிழக்கே இராக்கையும், மேற்கே இசுரேல் மற்றும் லெபனானையும் எல்லைகளாகக் கொண்ட சிரியா, மேற்காசியாவின் தொன்மையான நாகரிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.  1960களில் சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு, ஹஃபேஸ் அல் அஸாத் சிரியாவின் அதிபரானார்.  அவர் இறந்த பின் அவரது மகனான பஷார் அல் அஸாத் சிரியாவின் அதிபராக முடிசூட்டப்பட்டார்.  சன்னி பிரிவைச் சேர்ந்த முசுலீம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா முசுலீம்களில் ஒரு பிரிவான அலாவி முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்கள், குர்து இனத்தவர்கள் சிறுபான்மையினராகவும் வசிக்கும் சிரியாவில் விவசாயமும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் முக்கியத் தொழில்களாக உள்ளன.

பாத் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவசரநிலை பாசிச காட்டாட்சிதான் நடந்து வருகிறது.  பெயரளவிலான முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உரிமைகள்கூட அந்நாட்டு மக்களுக்கு பாத் கட்சி ஆட்சியின் கீழ் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான்.  அதேசமயம், பாத் கட்சியின் ஆட்சியை எதிர்க்கும் எதிர்த்தரப்பு ஒன்றும் சொக்கத் தங்கம் கிடையாது.  மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியா, இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெறும் துருக்கி, மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சி, ஜிஹாதிகள் உள்ளிட்ட ஒரு கும்பல்தான்  பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் நிறைந்த கும்பல்தான் சிரியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அங்கு அமெரிக்கா மற்றும் இசுரேலின் நலன்களைப் பாதுகாக்கும் பொம்மையாட்சியொன்றை நிறுவ வேண்டும் என்பதைத் தாண்டி, இக்கும்பலுக்கு வேறு நோக்கமும் கிடையாது.

சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் உள்ள அரசு, இரானில் இசுலாமியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்தே அந்நாட்டினை ஆதரித்து வருவதோடு, இரானுடன் நெருக்கமான அரசியல், இராணுவ உறவுகளைப் பேணி வருகிறது.  இன்னொருபுறம், இசுரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிக் குழுவையும் பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வரும் ஹமாஸ் குழுவையும் ஆதரித்து வருகிறது.  சிரியாவின் பாரம்பரியப் பகுதியான கோலான் மலைக் குன்றின் ஒரு பகுதியை இசுரேல் ஆக்கிரமித்து வைத்திருப்பதால், இசுரேலுடன் சமாதானமாகச் செல்லுவதற்கும் அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.

இந்தக் காரணங்களால்தான் அமெரிக்காவும் இசுரேலும் சிரியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றன.  மேலும், மேற்காசியாவில் இரானின் செல்வாக்கை மட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதை முதல்படியாகக் கருதுகின்றன.  சிரியாவும் இரானும் வீழ்ந்தால், கச்சா எண்ணெய் வளம் நிறைந்த மேற்காசியா தொடங்கி மத்திய ஆசியா வரை தனது மேலாதிக்கத்தை எஃகு போல உறுதிப்படுத்திக் கொண்டு, அப்பகுதியிலிருந்து ரசியா  சீனாவின் செல்வாக்கையும் அப்புறப்படுத்திவிடலாம் என்பதுதான் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.

அமெரிக்கா, சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பை நடத்த இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பல திரைமறைவு வேலைகளைச் செய்துவருகிறது.  பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்தத் தொடங்கிய சமயத்திலேயே, அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் சிரியாவைத் தீய நாடுகளுள் ஒன்றாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் இலக்குகளுள் ஒன்றாக வைத்தார். இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நடத்தி வந்த சமயத்தில் நேடோ படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் வெஸ்லி கிளார்க், “இராக் போர் முடிந்த பிறகு அமெரிக்கா ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் ஏழு நாடுகளுள் சிரியாவும் ஒன்று” எனக் குறிப்பிட்டார்.  “2009ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சிரியாவின் எதிர்தரப்பிற்கு உளவு பார்க்கும் தொலைதொடர்புச் சாதனங்களைக் கொடுத்ததை” விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வீசுவதாகச் சொல்லப்படும் “அரபு வசந்தம்” அமெரிக்காவிற்கு சிரியாவில் நேரடியாகத் தலையீடு செய்யும் வாய்ப்பை வழங்கியது.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிரியாவின் டேரா பகுதியில் அதிபர் பஷாருக்கு எதிராக ஒரு திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தவுடனேயே, சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற சன்னி பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகள், ஜோர்டானிலிருந்து சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கினர்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஆயுதந்தாங்கிய எதிர்த்தரப்பு நடத்தும் தாக்குதல்கள் சிரியாவில் வசிக்கும் சிறுபான்மை மத, இன பிரிவினருக்கு எதிரான வன்முறையாகயும், அரசின் நிலைகளைத் தாக்கி விட்டு ஓடும் பயங்கரவாத நடவடிக்கையாகவும்தான் இருந்து வருகின்றன.

சிரியா
சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்

சிரிய அதிபரை எதிர்த்து இன்று ஆயுதத் தாக்குதல்களை நடத்தி வரும் கூட்டணியில் உள்ள குழுக்களிலேயே முசுலீம் சகோதரத்துவக் கட்சிதான் ஓரளவு பெரியதும் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகும்.  இது, சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தின் ஆதரவைப் பெற்றுள்ள, சன்னி முசுலீம் பிரிவைச் சேர்ந்த மத அடிப்படைவாத அமைப்பாகும்.  இந்தக் கட்சியையும், அஸாத்துடன் நடந்த பதவி  அதிகாரத்திற்கான போட்டியில் தோற்று நாட்டைவிட்டு ஓடிப்போய் துருக்கியிலும், மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் ஒன்றிணைத்துதான் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் “சிரியா தேசிய கவுன்சில்” என்ற பெயரில் ஒரு கதம்பக் கூட்டணியையும், “சுதந்திர சிரிய இராணுவ”த்தையும் அமைத்துள்ளன.

அரபு வசந்தம் பற்றிய நூலொன்றை எழுதிவரும் மும்பையைச் சேர்ந்த அலியா அல்லானா என்ற பத்திரிகையாளர், “சிரியா தேசிய கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கும் சிரிய மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.  அவர்கள் அனைவரும் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் உட்கார்ந்துகொண்டு, தமது எஜமானர்கள் வீசியெறியும் காசைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வதாக” அம்பலப்படுத்துகிறார் (தி ஹிந்து, 24.07.2012, பக்.9).  மேலும், சுதந்திர சிரிய இராணுவம் அமெரிக்காவுக்கு நெருக்கமான அல் காய்தா பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகளையும் லிபியாவிலிருந்து கொண்டுவரப்படும் கூலிப்படையினரையும் கொண்டு கட்டப்பட்டிருப்பதை இங்கிலாந்தைச் சேர்ந்த டைம்ஸ் இதழின் நிருபர் ஜாஃப்ரி கேட்டல்மேனும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகளும் அம்பலப்படுத்தியுள்ளன.

சிரியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அலெப்போவில் மட்டும் ஏறத்தாழ 12,000 சுதந்திர சிரிய இராணுவத்தினர் ஊடுருவியிருப்பதாகவும், இவர்களுள் சரிபாதிப்பேர் ஆப்கான், செசன்யா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஜிஹாதிகள் எனக் குறிப்பிடுகிறார், பிரேம் சங்கர் ஜா என்ற இந்தியப் பத்திரிகையாளர். (தி ஹிந்து, ஆக்.7, பக்.8)

அமெரிக்கா இசுரேலின் கூலிப்படையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சுதந்திர சிரிய இராணுவம், “ஷியா பிரிவு அலாவி முசுலீம்களைக் கல்லறைக்கும் கிறித்தவர்களை பெய்ரூட்டுக்கும் அனுப்புவோம்” என வெளிப்படையாகவே  மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  இக்கூலிப்பட்டாளத்திற்கான பயிற்சியினை துருக்கி வழங்குகிறது.  இதற்குத் தேவைப்படும் நிதியை சவூதி அரேபியாவும் கத்தாரும் வழங்குகின்றன.  இவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களை அமெரிக்கா கொடுக்கிறது.  இக்கூலிப்பட்டாளம் சிரியாவினுள் நடத்திவரும் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதமாகத்தான் கருதமுடியுமே தவிர, அதனை ஜனநாயக உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டமாகவோ, மக்கள் இயக்கமாகவோ கருதமுடியாது.

···

மார்ச் 2011க்குப் பின் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அஸாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப் பல்வேறு சதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதையடுத்து, அதிபர் அஸாத், “அவரச நிலைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; எதிர்க்கட்சிகளின் மீதான தடைகளை விலக்கிக் கொள்வது; புதிய அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கி, அதனைப் பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடுவது; புதிய அதிபர் தேர்தலை 2014  இல் நடத்துவது” உள்ளிட்டுப் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்ததோடு, அவற்றைச் செயல்படுத்தவும் முனைந்தார்.  மேலும், ஐ.நா.வின் முன்னாள் தலைவர் கோஃபி அன்னான் அளித்த அமைதி திட்டத்தின்படி 300 ஐ.நா. பார்வையாளர்கள் நாட்டு நடப்புகளைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டனர்.  அரபு லீக் கூட்டமைப்பு கோரியபடி, சிறிய நகரங்களிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டது.

இந்த அரசியல் சீர்திருத்தங்களும் சலுகைகளும், “தான் ஆட்சியில் தொடருவதற்கு அமெரிக்காவின் சம்மதத்தைப் பெற்றுத் தரும்” என எதிர்பார்த்தார், பஷார் அல் அஸாத்.  ஆனால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆட்சி மாற்றத்திற்குக் குறைவாக எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன.  அது மட்டுமின்றி, கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் சதிகளிலும், சிரிய அதிபருக்குப் பல்வேறு முனைகளில் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கின.

சிரியா
சிரியாவிலிருந்து இராக்கிற்குத் தப்பியோடும் சிறுபான்மை குர்து இனத்தவருக்காக, இராக்கின் தோஷூக் நகருக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்

அரபு நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும், முசுலீம் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும் சிரியா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது.  அரபு நாடுகளின் கூட்டமைப்பும் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டு சிரியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மூன்று முறை தீர்மானங்களைக் கொண்டு வந்தன. அதிபர் பஷார் அல் அஸாத்தை ஆதரிக்கும் சீனாவும், ரசியாவும் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானங்களைத் தோற்கடித்தன.  மூன்றாவது முறையாகவும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டவுடனேயே, “நாங்கள் ஐ.நா.விற்கு அப்பாற்பட்டுச் செயல்படுவோம்” என அமெரிக்கா அறிவித்தது.  அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய யூனியனும், துருக்கியும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை சிரியா மீது விதித்தன.

இந்த அரசியல் நெருக்கடிகள் ஒருபுறமிருக்க, “சுதந்திர சிரிய இராணுவத்தினருக்கு அமெரிக்காவின் உளவு அமைப்புகள் பயிற்சி அளிக்கும்” என அமெரிக்க அரசு வெளிப்படையான உத்தரவை வெளியிட்டது.  சிரியாவின் பிரதமர் உள்ளிட்டு, பல இராணுவ உயர் அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டு, சிரிய அரசிலும் இராணுவத்திலும் பிளவை உண்டாக்கும் சதிகள் அரங்கேற்றப்பட்டன.  ஹோம்ஸ் மற்றம் ஹௌலா நகரங்களில் பொதுமக்களைக் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்தது எந்தத்தரப்பு என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே, மேற்குலக ஊடகங்கள் அஸாத் அரசின் மீது பழியைப் போட்டு, இந்த மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன.  எனினும் அந்நகரங்களில் இப்படுகொலையை நடத்தியது சுதந்திர சிரிய இராணுவத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் என்பதும், கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் ஹௌலா படுகொலை நடத்தப்பட்டது என்பதும் பின்னர் அம்பலமானது.

சுதந்திர சிரிய இராணுவத்துக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்கள் மற்றும்  சன்னி பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகள் நடத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, இதுவரை ஏறத்தாழ 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இறந்தவர்களுள் கணிசமான பேர் சிறுபான்மையினரான அலாவி முசுலீம்களும் கிறிஸ்தவர்களும் தானென்றும் கூறப்படுகிறது.  சுதந்திர சிரிய இராணுவக் கும்பல் நடத்திய தாக்குதல் காரணமாக ஹோம்ஸ் நகரிலிருந்து மட்டும் 50,000 கிறித்தவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.  கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது இப்பொழுது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ, மிடன் நகரங்களுக்கும் பரவியிருக்கிறது.  டமாஸ்கஸிலும், அலெப்போவிலும் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் அல் காய்தா அமைப்பின் ஒரு பிரிவான அல் நுஸ்ரா வெளிப்படையாகவே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

பஷார் அல் அஸாத் அரசு அமெரிக்கா இசுரேல் கூட்டணியை எதிர்த்து இன்று போரிட்டு வந்தாலும், பாத் கட்சியின் அமெரிக்க எதிர்ப்பை முரணற்றதாகப் பார்க்க முடியாது.  சதாம் உசேன், கடாஃபி போலவே அஸாத் அரசின் அமெரிக்க எதிர்ப்பிலும் இரட்டைத் தன்மை இருப்பதைக் காணமுடியும்.  அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்த பிறகும் இசுரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்துவிட்ட அஸாத் அரசுதான், 2000க்குப் பின் மேற்குலகைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குச் சாதகமாகத் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை சிரியாவில் அமல்படுத்தியது.  சவூதியின் மன்னர் குடும்பம் போல அஸாத் அமெரிக்க அடிவருடியாக, கைக்கூலியாக இல்லாவிட்டாலும், தனது குடும்ப ஆட்சியின் நலன், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பம் திரட்டிக் கொண்ட சொத்தின் நலன் ஆகியவற்றைப் பொருத்தே, அஸாத் அரசு அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொண்டாடி வந்திருக்கிறது.

ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியங்களுடான உறவில் இரட்டைத் தன்மை என்ற பலவீனங்கள் ஒருபுறம் இருந்தபோதும், பஷார் அல் அஸாத்தின் அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்துவருகிறது.  பல்வேறு மதம், இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் சிரியாவில் பாத் கட்சியின் ஆட்சியின் கீழ் மத  இன மோதல்கள் நடந்ததில்லை என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிரியா
அமெரிக்காவால் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட எதிர்தரப்பு, சிரியாவின் ஹெளலா நகரில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்கள்

சிரியாவின் மீது ஒரு நேரடியான தாக்குதலை நடத்துவதற்கு ஏற்ப இராணுவத்தை ஒதுக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடேயே ஒத்த கருத்து ஏற்படாததால், ரசியாவும் சீனாவும் நேரடித் தாக்குதலை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால், பிரித்தாளும் சூழ்ச்சியினையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்துவதன் மூலம் பஷார் அல் அஸாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட முயன்று வருகின்றன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.

சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சி வீழ்த்தப்பட்டால், அங்கு ஜனநாயகம் மலரப் போவதில்லை.  சன்னி பிரிவைச் சேர்ந்த மதவாத அமைப்புகளின் சர்வாதிகார ஆட்சிதான் நிறுவப்படும்; மத  இனரீதியாக நாடு துண்டாடப்படும்.  தனது மேலாதிக்க நலன்களுக்காக ஜிஹாதிகளை, முசுலீம் பயங்கரவாதிகளை  அமெரிக்கா ஊட்டி வளர்க்கத் தயங்காது என்பதற்கு சிரியா இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளது.  விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தித் தடை செய்த அமெரிக்கா, சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது, பயங்கரவாதம் குறித்த அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

‘‘முசுலீம் பயங்கரவாதத்தால்,  எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தேசத்திற்கு ஆபத்து“ என மூச்சுக்கு முன்னூறு தடவை கூச்சல் போட்டு வரும் இந்தியா, துருக்கியிலிருந்து சிரியா மீது ஏவிவிடப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கண்டிக்க மறுக்கிறது.  மாறாக, முசுலீம் அடிப்படைவாதிகளையும் ஜிஹாதிகளையும் தூண்டிவிட்டுப் பயங்கரவாதத்தின் மூலம் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்காவின் தீய நோக்கத்திற்கு வாலாட்டி வருகிறது.

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

  1. முஸ்லிம் பயங்கரவாதத்தை என்ர வார்த்தைக வன்மை யாக கன்டீக்கிரென்

    “தனது நலனுக்காக அமெரிக்கா முஸ்லிம் பயங்கரவாதத்தை ஊற்றி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ள”

  2. ITS SHOWING THAT U R STANDING ON ONE SIDE……U R SAYING THAT FREE SYRIAN ARMY HAS KILLED 20,000 PEOPLE…THIS IS BID LIE AND I DIDNT EXPECT THIS FROM U ADMIN….U R JUST TRANSLATING THE THE NEWS WHICH PUBLISHED IN THE ABOVE MENTIONED NEWS PAPER BUT WHAT REA;;Y HAPPENED IS VISE VERSA OF UR STATEMENT….PLS DOT TRY TO SAY LIE PLS GET THE REPORT FROM///HUMAN RIGHTS WATCH DOG,,,AND THE AL JAZEERAH NEWS.PLS GO AND GET THIS….U BETRAYED THE HOPE WHICH I HAVE ON U

  3. புதிய ஜனநாயகம் இதழின் முட்டாள்தனமான ஆய்வு அல்லது மொழிப்பெயர்ப்பு.ரஷ்யாவும், சீனாவும் சிரியாவை தங்களது சொந்த நலனுக்காக ஆதரிப்பதால் அப்பாவி மக்களை படுகொலைச்செய்யும் சிரியா சர்வாதிகார அரசுக்கு ஆதரவான கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள்.நீங்கள் போட்டிருக்கும் கொலைச் செய்யப்பட்ட குழந்தைகளின் ஃபோட்டோ கூட சர்வாதிகார பஸ்ஸாருல் ஆஸாதின் கூலிப்பட்டாளம் நடத்திய தாக்குதலில் பலியான அப்பாவி பிஞ்சுகள் ஆவர்.1980 ஆம் ஆண்டு பஸ்ஸாருல் ஆஸாதின் தந்தை 20 ஆயிரம் முஸ்லிம்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள் என்று கூறி கொலைச்செய்தார்.ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் சிரியா அரசை ஆதரிக்க காரணம் மதரீதியான கொள்கையாகும்(சிரியா).மத ரீதியான போர் என கூறி கொலைச்செய்யப்பட்ட மக்களை கேவலப்படுத்திய வினவே!புதிய ஜனநாயகமே! நீ தான் உழைக்கும், பாட்டாளிமக்களுக்காக போராடுகிறேன் என்று கூறுகிறாயா?முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் குறித்து உனக்கு என்ன தெரியும்? வெளிநாட்டு தலையீடு தேவையில்லை என்று தொடர்ந்து எகிப்தின் அதிபர் முர்ஸி கூறிவருவது உனக்கு தெரியாதா?அநியாயக்கார ஆசாதையும், ரஷ்ய, சீன கொடுங்கோலர்களை ஆதரிக்கும் உனது நடுநிலை கேலிக்கூத்தாக சந்தி சிரிக்கின்றது.அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக கூறும் நீ ரஷ்ய மற்றும் சீன கம்யூனிச கேடுகெட்ட ஏகாதிபத்தியம் செய்யும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

  4. Oh My God… The major thrust for Syrian transition is spear headed by two nations in west Asia (Turkey and Saudi Arabia). Turkey is the 2nd largest contributor of personnel to NATO and Saudi is the prime henchman of USA. The whole world knows that.
    US and EU is the largest export destination of Egyptian Oil, 23% of inflow remittances to Egypt is from USA. Major imports of agri products to egypt flow from USA. I couldn’t exactly understand how the president of Egypt is going to act against west(may be he’ll do it in public speeches to dismantle US hegemony).If Morsi is going to take a tough stand the invasion of Egypt is guaranteed. Even Morsi knows that. He will not risk any relation strain with USA or Israel. An additional info: 2 sons of Morsi are US citizen by birth. Egypt survived the attacks of Israel all these years with the help of Russian weapons.
    Nowhere in this article Vinavu has stated Assad is innocent. The bottom line of this entire article can be summarized in a line. “How Revolutions occur in countries where American interests are not threatened?” The Arab spring never even flapped the shores of autocratic states of Saudi,Qatar,Kuwait etc…, Can you guys answer these please????

  5. Why the West want to topple Syria?
    A small strategic equation will explain the entire picture: Iran is the only country out of US – Israel influence sphere in the middle east. Syria is an trustworthy ally of Iran.Dismantling Syrian Shia government is the final step to entirely isolate Iran. This will establish an unrivalling hegemony of West over oil production. Most of the world’s Oil will be controlled by US and EU by which they could dictate terms to any country(especially to china – see the oil consumption pattern of US and China for past 5 years).

  6. உரிமைகளுக்காகப் போராடும் மக்களை பயங்கரவாதிகள் என்று நீங்கள் கூறுவது வியப்பாக உள்ளது. உங்களுக்கே இந்தியாவில் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பெயர் இருப்பதை நீங்கள் ஏற்பீர்களா என்ன? உழைக்கும் மக்களுக்கு – போராடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பிற நாட்டு முஸ்லிம்களும் இணைந்து அந்தப் போராட்டத்தை வலுப்படுத்திவருகிறார்கள். அது அவர்களின் சமயக் கடமையும்கூட. முஸ்லிம்கள் தமது சர்வதேச சொந்தங்களுக்கு உதவி ஒத்தாசை செய்வதை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறுவது விமர்சன நேர்மைக்கு அழகல்ல.

    ஒரு நியாயமான போராட்டத்தை ஆதரிப்பதுதான் மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்களின் பண்பாடு. அந்தப் பண்பாட்டிலிருந்து நீங்கள் வழுவிச் செல்வதற்கு சீனா மற்றும் ரஷ்யாவின் மீதான தங்களின் கம்யூனிசச் சிந்தனை காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அதே நேரத்தில் சிரியாவின் மக்கள் போராட்டத்தை அமெரிக்கா ஆதரிப்பதில் நல்ல நோக்கமில்லை என்பது சர்வதேச முஸ்லிம் சமூகத்திற்குத் தெரியாததல்ல. அதனால்தான், சிரியப் பிரச்சினையில் அந்நிய நாடுகளின் தலையீடு தேவையில்லை என்று எகிப்தின் அதிபர் முஹம்மத் முர்சீ கூறியுள்ளார் என்பதை நீங்கள் கவனித்தில் கொள்ள வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க