மினாஸ் கரெய்ஸ் மாநிலத் தலைநகரான பெலோ ஒரிசோன் நகரின் உணவு விடுதியொன்றில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உணவு பரிமாறுபவராகபா பணியாற்றி வருகிறார் ஏய்மே அகியுனா. முப்பது வயது கியூப தொழிலாளியான இவர் ஓட்டல் தொழிலாளியாக மாறுவதற்கு முன் பிரேசில் மாநிலமொன்றின் தொலைதூரத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் நாளொன்றுக்கு இருபது நோயாளிகளுக்குக் குறையாமல் சிகிச்சையளித்த மருத்துவர். பிரேசிலின் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், 2018 நவம்பரில் கியூபாவுக்கும் பிரேசிலுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் வேலை இழந்தவர் அகியூனா. ஏதாவதொரு படிப்பைத் தொடரும் நோக்கில் பிரேசிலில் தங்க முடிவு செய்து, வயிற்றுப் பாட்டுக்காக ஓட்டல் பணியாளராக வேலை செய்தார்.

Jair-Bolsonaro
போல்சனாரோ

ரத்து செய்யப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் வழியாக பிரேசிலுக்கு வந்து, இப்போது பிரேசிலில் தங்கிவிட்ட 1800 மருத்துவர்களில் திருமதி அகியூனாவும் ஒருவர். 21 கோடி மக்கள் கொண்ட இந்த நாட்டில், கொரோனா கிருமி எங்கும் பரவி வருவதன் காரணமாக அதன் மருத்துவக் கட்டமைப்பு இதுவரை கண்டிராத மருத்துவ நெருக்கடியை சந்திக்கும் நிலையில், இப்போது கியூபா அரசின் உதவியை நாடி வருகிறது பிரேசில்.

பிரேசில் மத்திய அரசு மருத்துவ கட்டமைப்பில் கியூபா மருத்துவர்களை ஒன்றிணைக்கப் போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கேட்ட திருமதி அகியூனா ‘ஒரு மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பை கண்டு நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டுள்ளேன். இங்கு நோய் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். அபாயம் நிறைந்த, தொலை தூரங்களில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கில் 2013 இல் அன்றைய பிரேசில் ஜனாதிபதி தில்மா ரௌசெப் தொடங்கிய “அதிக மருத்துவர்கள்” என்ற திட்டத்தின் கீழ் கியூபா மருத்துவர்கள் பிரேசில் வந்தனர். ஐந்தே ஆண்டுகளில் 3,000 நகராட்சிகளில் உள்ள அடிப்படை நலவாழ்வு மையங்களில் 8000 கியூபா மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். 2018 தேர்தலில் “கம்யூனிஸ்ட் கியூபா மருத்துவர்களை விற்பனை செய்கிறது” எனப்பிரச்சாரம் செய்த போல்சொனாரோ ஜனாதிபதியானதைத் தொடர்ந்து கியூபா பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து பெரும்பாலான மருத்துவர்கள் கியூபா திரும்பினர். ஆனால் திருமதி அகியூனா போன்ற சிலர் சில்லரை வேலைகளைச் செய்வது அல்லது மேலும் படிப்பது என பிரேசிலிலேயே தங்கிவிட்டனர். தற்போது 9200 பேருக்கு மேல் கொரோனா தொற்றி, 365 பேர் இறந்துள்ள நிலையில் நம்பிக்கையிழந்த பிரேசில் கியூபாவிடம் கையேந்தி நிற்கிறது. அவர்களும் உதவி செய்ய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

படிக்க:
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

‘மருத்துவ பணியாற்றவும், உதவி செய்யவுமான பேரார்வம் மிக அதிகமாக இருக்கிறது’ என்கிறார் பிரேசிலில் தங்கியுள்ள கியூப மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் நூர்காபெரெஸ். ‘நாடு நெருக்கடியில் இருக்கிறது. எங்களை எப்போது அழைக்கப் போகிறார்கள் என்று இன்னமும் தகவல் இல்லை’ என்கிறார் பெரஸ்.

உள்ளூர் மருத்துவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை வலுப்படுத்த 5811 மருத்துவர்களை நியமிக்கப் போவதாக பிரேசில் நலவாழ்வு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. அடுத்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் கியூப மருத்துவர்கள் வேலைக்கு அழைக்கப்படக் கூடும். கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது. இதுவரை உதவி கிட்டாத மக்களுக்கு உதவி கிடைக்கவும், நலவாழ்வு உத்திரவாதப்படவும் இத்திட்டம் அவசியமானது. திடீரென திட்டம் தடைபட்டதால் பல சமூகக் குழுக்கள் குறிப்பாக உள்நாட்டு மக்கள் மருத்துவ உதவி இல்லாமல் கைவிடப்பட்டனர். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.” என்கிறார் சாவோ பவ்லோ பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் டெனிஸ் பிமென்டா.

‘1.15 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவிடமிருந்து மருத்துவர்களை அழைப்பது பிரேசிலுக்கு தேவையாகி விட்டது. பிரேசிலில் மருத்துவக்கல்வி மேட்டுக்குடி தன்மை கொண்டது’ என்கிறார் விளிம்புநிலை மக்களிடம் விரிவாகப் பணியாற்றிய திருமதி பிமென்டா. ‘பெரும்பாலான மருத்துவர்கள் சலுகை பெற்ற பின்னணி கொண்டவர்களாகையால், தொலைதூரப் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன’ என்கிறார் பிமென்டா. மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிக ஊதியம் பெறும் மருத்துவர்கள் பிரேசிலில் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பெருநகர மையங்களையும், அங்குள்ள வசதிகளையும் விட்டுவிட்டு மோசமான நிலையிலுள்ள, புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. ஆனால் உலகின் கழிசடைப் பகுதிகள் எனக் கருதப்படும் பகுதிகளுக்கும் சென்று கியூப மருத்துவர்கள் பணியாற்றினர்.

படிக்க:
கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்
♦ எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

கொரோனா பெருமளவில் பரவி வரும் இன்று, தனியார் மருத்துவ மையங்கள் முன்னரே நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில், நாட்டின் ஒருங்கிணைந்த நல வாழ்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மருத்துவமனைகளையே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். 2016இல் ஜனாதிபதி ரௌசெப் பதவி நீக்கம் செய்யப் பட்டதிலிருந்து இத்திட்டம் பெருமளவான நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. நடைமுறையிலிருக்கும் இந்த ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்டம்தான் இப்போதுவரை மிகச் சிறந்த திட்டம். கியூப மருத்துவர்கள் இத்திட்டத்தின் வழிகாட்டுதலுடன் முழுதும் ஒன்றிணைந்தவர்கள். அவர்கள் திரும்ப வந்தால் தொலைதூரப் பகுதிகளுக்கும், குடிசைப் பகுதி போன்ற புறநகர் பகுதிகளுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவார்கள் என்கிறார் திருமதி பிமென்டா.

ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்ட மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கும் நிலையில், மருத்துவப் பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அபாயம் உள்ளது. சாவோ போலோ மாநிலம் போலவே சுமார் 600 மருத்துவப் பணியாளர்கள் தொற்றுக்கு உள்ளானதாக அஞ்சப்படுகிறது. இந்தக் கொள்ளை நோயிலிருந்து உயிர் பிழைக்க குடிசைப் பகுதி மக்கள் தாங்களே முகமூடிகளைத் தயாரித்துக் கொள்வதோடு, தனியார் சேவையையும் பயன்படுத்துகின்றனர். உலகு தழுவி இந்நோய் பிரேசிலில் உச்சத்தையடைய இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் சிதைந்து கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பைத் தாங்கிப்பிடிப்பதற்கு கியூப மருத்துவர்கள் திரும்பி வர பிரேசில் மக்கள் நீண்ட நாள் காத்திருக்க முடியாது.


கட்டுரையாளர் : ஷோபன் சக்சேனா

தமிழாக்கம் : காளியப்பன்
நன்றி : THE HINDU. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க