27.03.2023
வேங்கை வயலில் 144 தடை உத்தரவு !
வேங்கை வயல் – பரந்தூர் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ,
பேசவிடாமலும் போராடவிடாமலும் தடுப்பதற்கு பெயர் தான் ஜனநாயகமா?
பத்திரிகை செய்தி
தமிழ்நாட்டிலே காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தான் வேங்கை வயலும் பரந்தூரும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதி வெறியர்கள் திட்டமிட்டு மலத்தைக் கலந்தனர். இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோதும் சிபிசிஐடி விசாரணை நடத்திய போதும் உயர் நீதிமன்றமே கடும் கண்டனம் தெரிவித்த போதும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையே தொடர்ச்சியாக விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதும் ஆதிக்க சாதியினர் பக்கம் கொஞ்சமும் திரும்பாத வகையில் தான் போலீசின் புலன் விசாரணை இருக்கிறது. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐக்கு வழக்கை பரிந்துரைக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம்” எந்த அமைப்புகளுக்கு விசாரணையை மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை ” என்று கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் திமுக அரசு யார் பக்கம் நிற்கிறது என்பது வெளிப்படையாகிவிட்டது.
படிக்க : வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்
தாழ்த்தப்பட்ட மக்களை சந்திக்க வந்த மதுரையைச் சேர்ந்தவர்களின் பேருந்தை சுற்றி வளைத்த ஆதிக்க சாதி வெறியர்கள் தகராறு செய்திருக்கின்றனர். வெளியூரைச் சேர்ந்தவர்களை அழைத்துக் கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட மக்கள் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராடி இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேங்கை வயலுக்கு வரக்கூடாது என்று போலீஸ் தடை உத்தரவு போட்டிருக்கிறது. வேங்கைவயல் பிரச்சனையில் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி நடத்தவிருந்த போராட்டத்திற்கும் போலீசு அனுமதி மறுத்து இருக்கிறது.
இதைப்போலவே விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் பரந்தூர் மக்களை சந்திக்க வருவோரை மிரட்டுவதும் கைது செய்வதும் என போலீசு தனது அராஜக நடவடிக்கையை மேற்கொள்கிறது. சமூக நீதி, திராவிட மாடல் என்று பேசுவதும் காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவோர் மீது அடக்குமுறை செய்வதுமான நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த பழனிச்சாமி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை சமூக நீதி இல்லை இன்று பேசியும் போராடியும் வந்த மு.க.ஸ்டாலின் , தன்னுடைய ஆட்சியில் வேங்கை வயலைப் பற்றி பேசக்கூடாது, பரந்தூர் விமான நிலை விரிவாக்கத்தை பற்றி பேசக்கூடாது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை பற்றி பேசக்கூடாது என்று ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆகவே வேங்கை வயலில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வேங்கை வயலில் போடப்பட்ட 144 தடை உத்தரவு, பரந்தூரில் அடக்குமுறை செய்வதற்காக போடப்பட்டுள்ள போலீஸ் படை ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் காவி – கார்ப்பரேட் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன் ,
மாநிலச் செயலாளர் ,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை