PP Letter head

பத்திரிக்கை செய்தி

நாள்: 02-04-2020

கொரோனா தொற்று மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைகள் இந்தியாவிலேயே மிக சிறப்பாக உள்ளதைபோன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறதேயன்றி உண்மை நிலை ஆபத்தானதாகவே உள்ளது. இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி, இன்னும் விரிவான அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் மூன்றாம் நிலை பரவல் (சமூகப்பரவல்) முன்பே தொடங்கிவிட்டதாக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மிக ஆபத்தான நிலையில் பணிப்புரிவதாக பல மருத்துவர்கள் புகார் தெரிவிகின்றனர். அவர்களுக்கு என்-95 முகக்கவசம், மூன்றடுக்கு பாதுகாப்பு உடை போன்றவை மிக முக்கியம். ஆனால் இவை முறையாக வழங்கப்படுவதில்லை. நோய்த்தொற்று அச்சம் காரணமாக மருத்துவர்கள் நோயாளிகளை பார்ப்பதை தவிர்க்கின்றனர்.

மருத்துவ பணியாளர்களும், பயிற்சி மருத்துவர்களும் எப்போதாவது வருவதும், விலகி நிற்பதுமாகவே செயல்படுகின்றனர். இதுகுறித்து முதல்வர், நல்வாழ்வுத்துறை அமைச்சர், நல்வாழ்வுத்துறை செயலர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நிலை நீடித்தால் மருத்துவர்கள் கொரோனாவிற்கு மருத்துவம் பார்ப்பதிலிருந்து விலகும் சூழல் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிகின்றனர். ஈரோட்டில் ஒரு மருத்துவர் அவரது பணியின் காரணமாக கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மூன்று மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவை மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை நீடித்தால் தமிழகத்தில் பெரும் இழப்புகள் ஏற்படும்.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

இன்றைய நிலையில் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் நம்பிக்கையுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டுமானால் பாதுகாப்பு கவசங்கள் உடனடியாக தேவை. ஆகவே தமிழக ஆட்சியாளர்கள் இவற்றை போர்க்கால வேகத்தில் கொள்முதல் செய்து வழங்க வேண்டும். ஸ்பெயின் நாட்டைப்பொல எல்லா தனியார் மருத்துவ மனைகளையும் அரசின்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும். உண்மை பேசும் மருத்துவர்களை இடமாற்றம் செய்து தண்டிக்கும் பாசிச போக்கை கைவிட வேண்டும் என மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.

தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர்


தகவல்:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 99623 66321.