Thursday, June 13, 2024
முகப்புஅரசியல்உலகம்கோவிட் - 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?

கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?

பீதியில் உறைந்திருக்கும் மக்கள் மலேரியா மாத்திரைகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படும் என கருதி, அவற்றை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

-

லகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் கிருமிக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழலில் மலேரியா, எய்ட்ஸ், எபோலா உள்ளிட்ட கொள்ளை நோய்களுக்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகளை கோவிட்-19-க்கு பயன்படுத்த பரிசோதனை முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் முடுக்கியிருக்கிறது. ஆனால் இதுவரையில் எந்த மருந்தினையும் பரிந்துரைக்கவில்லை.

இந்நிலையில், மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மருந்தை நோய்த் தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் நபர்களுக்கு தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. அதாவது நோய்க் கிருமிக்கு ஆளானவர்களை பராமரிக்கும் நலப் பணியாளர்களுக்கும், நோய்த் தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் பரிந்துரைக்கலாம் என்று அதன் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட் ஒன்றில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் இரண்டையும் பயன்படுத்தினால் கோவிட்-19-ஐ முறியடிக்க இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டுக்கடங்காத கொரோனா தக்குதலால் பீதியடைந்திருக்கும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடன் மற்றொரு மலேரியா தொற்று எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின் என்ற மருந்தையும் வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மருந்துகள் கோவிட்-19 வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் என்று எந்தவித மருத்துவ சான்றுமில்லை. ஆயினும் பெரும்பாலான மருந்துக்கடைகளில் இந்த மருந்துகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் மலேரியா நோய்வாய்பட்டவர்களுக்கும் இந்த மருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மலேரியா நோயாளிகளின் நிலையும் ஆபத்தாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மலேரியா கிருமிக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல கராச்சியில் உள்ள மருந்தகங்களிலும் குளோரோகுயின் மருந்துகள் காலியாகிவிட்டதாக The Dawn பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மருந்தினை பதுக்கவும், ஏற்றுமதி செய்யவும் இங்கிலாந்து தடை செய்திருக்கிறது.

படிக்க:
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா
♦ கம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்

1934-ல் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின் உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள ஒன்றாகும். கடுமையான சுவாச நோயை ஏற்படுத்தும் கொரோனா வகை வைரஸ் (SARS CoV) பரவுவதைத் தடுப்பதில் குளோரோகுயின் பயனுள்ளதாக இருப்பதாக 2003-ம் ஆண்டு லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.

இந்த மருந்தினை கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, சிக்குன்குனியா, எபோலா வைரஸ் நோய், இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி, மற்றும் டெங்கு வைரஸ் தொற்று போன்றவற்றை கட்டுப்படுத்தவும் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டது. இந்த வைரசைக் கட்டுப்படுத்த உயிரணுக்குள் (Cell) அதிகபடியான மருந்தினை செலுத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வுகளில் எழுந்த ஒரு சிக்கல். விளைவு – அதிக மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதும், அதனால் உடலில் அதிக நச்சு சேர்வதும்தான்.

இந்த மருந்து இதயம், கண்பார்வை சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் இரத்த அணுக்களின் என்ணிக்கையை குறைக்கிறது. தசை வலிமையை குறைத்தல், மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. சமீபத்தில் நைஜீரியாவில் குளோரோகுயின் உட்கொண்ட மூவர் அதன் நச்சுத்தன்மையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவிட்-19 சிகிச்சைக்காக 26 பேர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆறு பேர்களுக்கு இந்த மருந்துகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஜேசன் போக் (Jason Pogue) எனும் தொற்றுநோய் நிபுணர் கூறியிருக்கிறார்.

கொரோனா போன்ற ஒரு கொள்ளைநோய் பரவும் சூழலில், அதற்கான மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மருந்து நிறுவனங்களைக் கண்காணிப்பது, முக்கியமான மருந்துகளை அதிக அளவில் உற்பத்தி செய்வது, மருத்துவர் குறிப்பு இல்லாமல் முக்கிய மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது ஆகியவை அனைத்துமே ஒரு அரசின் கடமையாகும். மக்களுக்கான அரசாக இருந்தால் அதனைத் தானாக முன் வந்து செய்திருக்கும். உலகம் முழுவதும் கார்ப்பரேட்டுகளுக்கான அரசுகள் நடந்து கொண்டிருக்கும் போது இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?


சுகுமார்
நன்றி : ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க