10.05.2022
இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
பாசிஸ்டுகள் வீழ்வர்! மக்களே வெல்வர் !
சிய நாடுகளிலேயே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்திய நாடான இலங்கை இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் (மே 9) பாசிச ராஜபக்சே ஆதரவு கும்பல் போராடுகின்ற மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, ராஜபக்சேவின் வீடு உட்பட அவனது கூட்டாளிகள் பலரின் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காணும்போது கடும் வெயிலை போக்கிய மழையால் மனம் குளிர்ந்ததுபோல நம்முடைய மனம் எல்லாம் நிறைந்து போகிறது.
மக்கள் தங்கள் மீதான வன்முறைக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இதனை அடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால், மக்களோ கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென்று போராட்டங்களைத் தொடர்கின்றனர். 1500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்கள் உச்சத்தை எட்டி இருக்கின்றன.
இலங்கையை மொத்தமாக விற்பதைத் தவிர வேறுவழியில்லை என்றாலும் அந்த நாட்டை வாங்குவதற்கும் ஆளில்லை என்ற மிக மோசமான நிலைதான் இன்று உலகளவில் நிலவுகிறது.
படிக்க :
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
இதை சாக்காக வைத்துக்கொண்டு அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், அவரவர் நாடுகளில் மக்கள் வழியில்லாமல் இருந்தாலும் கூட கடனாக இலங்கைக்கு நிதியை வாரி வழங்குகிறார்கள். இதன் மூலம் இலங்கையை கடனாளியாக்கி தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
எவ்வளவு கடன் கொடுத்தாலும் அது கடலில் கரைத்த பெருங்காயம் ஆகவே இருக்கின்றது. மக்கள் பல மணி நேரம் மினசாரம் இல்லாமல், அரிசி, பருப்பு, பால் என அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிப்பொருள்கள் என எதையும் வாங்கக் கூட முடியாத அளவு விலைவாசி என்பது உச்சத்திற்கு போய் வாழவே வழியில்லாமல் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.
இனக்கலவரத்தை தூண்டி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கடும் வன்முறைகள் மூலம் கொன்றொழித்த ராஜபக்சே கும்பல், தப்பிப்பதற்கு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறது.
எனினும் கோத்தபய தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதற்கெதிரான போராட்டங்கள் ஒருபோதும் நிற்க போவதுமில்லை. ஒரு நாட்டில் என்னதான் இனவெறி, மொழிவெறி, மதவெறியைக் கிளப்பி மக்களிடம் மிகப் பெரிய பிளவினை ஏற்படுத்தினாலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்திற்கு எதிராக வர்க்க ரீதியாக ஒன்று திரண்டு களம் இறங்குவர் என்பதுதான் இலங்கை காட்டும் உண்மை.
இலங்கையின் பொருளாதார நிலைமையை நோக்கி படுவேகமாக சென்று கொண்டிருக்கிறது இந்தியா. இலங்கை அரசு கூட சொந்தமாக லங்கன் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும்போது, இந்தியா தனக்கென்று சொந்தமாக விமான நிறுவனம் இல்லாத நாடாக இருக்கிறது.
அனைத்து பொதுத் துறைகளையும் தனியார்மயமாக்கி, காடு, மலை என இயற்கை வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த பாசிச கும்பலிடம் இருந்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்தி, சாதி – மத வன்முறைகளை மேற்கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – மோடி அமித்ஷா – அம்பானி – அதானி போன்ற காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் வீழ்த்தப்பட்டே தீரும் என்பதற்கு மாபெரும் நம்பிக்கையாக இலங்கை திகழ்கிறது.
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கு காரணமான ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களாக பரிணமிப்பதை நோக்கிப் பயணிக்க வேண்டும். அத்தகைய தமிழ், சிங்கள, முஸ்லீம் என அனைத்து தரப்பு மக்களும் போராடிவரும் போராட்டங்களுக்கும் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும். அந்த வகையில் அம்மக்களின் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் !
♦ பாசிஸ்டுகள் வீழ்வர் !
♦ மக்களே வெல்வர் !

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க