இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 2

தொழிலாளர் வர்க்கத்தைக் கண்டு அஞ்சிய இராஜபக்சே

காலி முகத்திடலில் மட்டுமல்லாது, ஏப்ரல் மாதம் முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாக இலங்கை முழுவதும் மக்கள் போராட்டங்கள். தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிறித்தவ பாதிரிமார்கள், புத்த துறவிகள் என எல்லாத் தரப்பு மக்களும் சொந்த முறையில் தங்களை அரசு எதிர்ப்பு போராட்டங்களில் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.

சில இடங்களில், போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசாரால் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டது. குறிப்பாக ரம்புக்கனை என்ற இடத்தில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஏப்ரல் 19-ஆம் தேதி பொதுமக்கள் நடத்திய இரயில் மறிப்பு போராட்டம் சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. போராட்டத்தை கலைப்பதற்காக போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 12 பேர் படுகாயமுற்றனர்.

காலி முகத்திடல் போராட்டம் தொடங்கி ஒருமாத காலம் வரையில், “தான் பதவி விலகுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று நாற்காலியை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த மஹிந்த இராஜபக்சேவிற்கு, குலைநடுக்கத்தை ஏற்படுத்திப் பணியவைப்பதற்காக தொழிலாளி வர்க்கம் நேரடியாக களமிறங்க வேண்டியிருந்தது.

பலதரப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 29 அன்று ஆயிரம் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நாடுதழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. ஆளும் கட்சியான, இலங்கை பொதுஜன பெரமுனக் கட்சியின் தொழிலாளர் சங்கம்கூட வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டது.


படிக்க : இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ


அஞ்சல்துறைத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், இரயில்வே தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு உழைப்பாளர்களும் இலங்கையின் இயக்கத்தை ஒருநாள் நிறுத்திவைத்திருந்தார்கள் என்றே கூற வேண்டும்.

வியாபாரிகளின் பங்கேற்பால், எப்போதும் கூட்டம் அலைமோதும் கொழும்பு திறந்தவெளிச் சந்தை காலி மைதானமாக காட்சியளித்தது. அத்தியாவசிய பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முழுநாள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுப்பது சாத்தியமில்லை என்பதால், தங்களது உணவு இடைவேளைகளைப் பயன்படுத்தி, 2 இரண்டு மணிநேர ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்; இதன் மூலம் பொது வேலைநிறுத்தத்திற்கு தங்களது ஆதரவையும் வழங்கினர்.

வெற்றிகரமான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு, “கோத்தபய மற்றும் மஹிந்த இராஜபக்சே ஆகியோர் உனடியாக பதவி விலக வேண்டும்; இல்லையெனில், மே 6 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுவோம்” – என கெடு விதித்து எச்சரித்தார்கள் தொழிலாளர்கள். சொன்னபடி, இலங்கையை மீண்டும் முடக்கினார்கள்.

அனைத்து தொழிற்சாலைகளின் வாயில்களிலும் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் ஆரவாரமாக நடைபெற்றன. தொழிலாளர் எழுச்சியைக் கண்டு நடுங்கிய அரசு மீண்டும் அவசர நிலையை அறிவித்தது. அப்பொழுதே மஹிந்த இராஜபக்சே பதவி விலகப்போவதை அரசியல் வட்டங்கள் கிசுகிசுக்கத் தொடங்கின.

பதிலடி தந்த மக்கள், உயிர்தப்பி ஓடிய மஹிந்த

ஆத்திரமுற்ற மஹிந்த இராஜபக்சே, மே 9-ஆம் தேதி பதவி விலகலை அறிவிப்பதற்கு முன்பு, ‘கட்சிக்கூட்டம்’ என்ற பெயரில் பேரணியாகவும் பேருந்துகள் வாயிலாகவும் 3,000 குண்டர்களை அலரி மாளிகைக்கு வரவழைத்தார்; அடியாட்களாக கொண்டுவரப்பட்டவர்களில், அம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகளும் இருந்தனர். அனைவருக்கும் பணத்தைக் கொடுத்ததோடு, மதுவை ஊற்றி வெறியூட்டி, காலி முகத்திடலில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது வன்முறையை ஏவினார் மஹிந்த.

போராட்ட முகாம்களுக்குள் புகுந்த குண்டர்கள் கூடாரங்களை தீ வைத்து எரித்தனர். இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டைகள் போன்ற கொடூர ஆயுதங்களால் போராடிய மக்களை தாக்கினர். அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்களோ இந்த தாக்குதலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தாம் தொடங்கிவைத்ததைவிட, பலமடங்கு கூடுதலாக பெற்றது இராஜபக்சே கும்பல்.

திரண்டெழுந்த மக்கள் இராஜபக்சே கட்சியினர் ஒவ்வொருவரையும் தேடித்தேடி சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்கள் பயணித்து வந்த பேருந்துகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு நொறுக்கினர்; தீ வைத்து எரித்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் பொதுஜன பெரமுன கட்சி அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள் ஆகியோர் வீடுகளை முற்றுகையிட்டு போராடினார்கள் மக்கள்; அதன்மீது கல்லை விட்டெறிந்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். குருணாகலில் உள்ள மஹிந்தவின் வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். பெரமுன கட்சியைச் சேர்ந்த அந்நகரத்தின் மேயர் வீடும் எரிக்கப்பட்டது. கொழும்புவில் இருந்த பிரதமரின் அதிகாரப் பூர்வ இல்லத்தை சூறையாடுவதற்காக மக்கள் பலமுறை உள்ளே செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களிடம் மாட்டிக்கொண்டதால் பயபீதியடைந்த ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அத்துகொரல, காருக்குள் இருந்தபடி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இப்படியொரு பதிலடி கிடைக்கும் என்று இராஜபக்சே கும்பல் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. பதவி விலகி ஓடிய மஹிந்த இராஜபக்சே, இராணுவத்தின் உதவியுடன் திரிகோணமலை கடற்படையினரின் முகாமில் தஞ்சமடைந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த அங்கு திரண்ட மக்கள், “அந்த கொள்ளையனை பாதுகாக்காதீர்கள், வெளியே விடுங்கள்” என்று முகாமுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இனவாத இழிவரலாற்றை துடைத்தொழித்த வர்க்க ஒற்றுமை

எல்லாவற்றிற்கும் மேலாக, பல்லாண்டுகாலம் ஆளும் வர்க்கம் திட்டமிட்டே உருவாக்கிய பேரினவாத வெறியால் மூழ்கடிக்கப்பட்ட சிங்கள உழைக்கும் மக்கள், தங்களுடைய எதிரி யார் என்பதை அனுபவத்தால் உணர்ந்துகொண்ட பின், நொடியில் அதை உதறியெழுந்துவிட்டதும்; சிங்களர்கள், தமிழர்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் என அனைத்து இன, சமயத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்திய வர்க்க ஒற்றுமையிலும்தான் போராட்டங்களின் சிறப்பே அடங்கியிருந்தது.

2019 ஆம் ஆண்டு தான் பதவியேற்றபோது, “சிங்களர்களின் பேராதரவால், அவர்களின் ஓட்டுக்களால்தான் பதவிக்கு வந்திருக்கிறேன்” – என அப்பட்டமாக இனவாதம் பேசிய மஹிந்த இராஜபக்சேவை இன்று அதே சிங்கள மக்கள் விரட்டியடித்துள்ளார்கள். அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறிய கோத்தபய, “தான் சகிப்புத்தன்மையற்றவன் அல்ல” என்று விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக காலி முகத்திடல் மைதானத்தை ஆர்ப்பாட்ட இடமாக அறிவித்தார். இன்று அதே காலி முகத்திடலைக் கைப்பற்றி, அவரைத் தேர்ந்தெடுத்த அதே பெரும்பான்மை மக்கள், “கோட்டா கோ கம” என்ற பெயரில் ஒரு சிறு நகரத்தையே உருவாக்கியுள்ளார்கள். ஆகா, என்னே ஒரு இலக்கியச் சுவை மிக்க பழிவாங்கல்!

***

மே 9 அன்று மக்களைத் தாக்கிய இராஜபக்சே ஆதரவு குண்டர்களை, வலைவீசித் தேடிக் கொண்டிருந்த சிங்கள போராட்டக்காரர்கள், ஒரு தமிழ் குடும்பம் பயணம் செய்த காரை பல இடங்களில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். பயணித்தவர்கள் தமிழர்கள் என்று தெரிந்தபோது அவர்களிடம் போராட்டக்காரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஓரிடத்தில், வாகனத்தை வழிமறித்த போராட்டக்காரர் ஒருவர், ஓட்டுநரிடம் 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதைப் பார்த்த மற்ற போராட்டக்காரர்கள் அவரைக் கண்டித்து பணத்தை திரும்பக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். “நாங்கள் ரௌடிகள் அல்ல, புரட்சியாளர்கள்” என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேற்கூறிய உண்மைச் சம்பவத்தை டிவிட்டரில் பதிவிட்டவர் சிங்களர்களை வெறுக்கும் தீவிர தமிழினவாதி என்று கூறப்படுகிறது. ஆனால், இது அவரது உறவினர்களின் சொந்த அனுபவம்; சிங்களர்கள் தமிழர்களிடம் மதிப்புடன் நடந்துகொண்டார்கள் என்று அவர்கள் கூறிய அனுபவத்தைக் கேட்டு நெகிழ்ந்துபோய், அவரே சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார். (தகவல்: கலையகம் வலையொளி)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளான மே 18, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசால் இராணுவ வெற்றி தினமாக கொண்டாடப்படும். அதிபர் மாளிகை அமைந்துள்ள காலி முகத்திடல் மைதானம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இன்று அதே மைதானத்தில், ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள் சிங்கள மக்கள். 13 ஆண்டுகளில் வடக்கு-கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து, சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் தமிழினப் படுகொலைக்காக அஞ்சலிக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறை.

“தமிழினப் படுகொலைகளுக்காக மன்னிப்பு கோருகிறோம்”, “இராஜபக்சே அரசே, தமிழினப் படுகொலைக்கு பதில் சொல்” போன்ற முழக்கங்கள் தாங்கிய பதாகைகளை சிங்கள மக்கள் ஏந்திக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஏ.ஆர்.வி. லோஷன் கூறுகையில், எனது வாழ்க்கையில் முதல் முறையாக சிங்கள மக்கள் நடத்தும் போராட்டம் ஒன்றில், தமிழர்களின் பிரச்சனைகள் பேசப்படுவதை பார்க்கிறேன்; காலி முகத்திடலில் நடக்கும் போராட்டத்தில், “போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்”, “காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டும்”, “முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்” – போன்ற வாசகங்களை கண்டேன் என்கிறார்.


படிக்க : தமிழா, இலங்கையை பார் – வர்க்க உணர்வு கொள்!


“சிங்கள மக்களையே இவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தும் அரசு, தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கும் என இப்போது நினைத்து பார்க்க முடிகிறது” – என்று தனது அனுபவத்தை பிபிசி தமிழ் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார் ஒரு சிங்களவர்.

தமிழினப் படுகொலையையொட்டி மட்டுமல்ல, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கோரியும், தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும் மௌனப் போராட்டம் ஒன்று, ஏப்ரல் 17 ஆம் தேதி (இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை நாள்) நடைபெற்றிருக்கிறது. அதைப் போல, மே 3 ஆம் தேதி ரமலான் பண்டிகையை ஒட்டி, போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லீம் மக்கள் நோன்பு திறப்பதற்காக தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து உணவு சமைத்திருந்தார்கள்.

சிங்களர்களோ, தமிழர்களோ, முஸ்லீம்களோ, கிறித்தவர்களோ ஒருவருக்கொருவர் எதிரி அல்ல. மாறாக மதவெறியும் இனவெறியுமே அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிரி என்பதை வர்க்கப் போராட்டத்தின் வழியே புரிந்துகொண்டுவிட்டார்கள் இலங்கை உழைக்கும் மக்கள்.

இந்த புரிதலுடன் கூடிய வர்க்க ஒற்றுமையும் போராட்டங்களுமே இனவாத பாசிஸ்டுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது. பாசிஸ்டுகள் வெல்லப்பட முடியாதவர்கள் அல்ல. இலங்கை உழைக்கும் மக்களின் பேரெழுச்சியானது, இந்தியாவில் காவி பாசிசத்தை ஒழித்துக் கட்டுவதற்கு காத்திருக்கும் நமக்கும் தெம்பூட்டுகிறது.

(முற்றும்)


பூபாலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க