இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20, 21 ஆகிய இரண்டு நாட்களில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்து சென்றுள்ளார். அதிபரான ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வந்த அவர், தனது பயணத்தின் போது பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆயோரை சந்தித்தார். இந்தப் பயணம் இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என ரணில் சொன்னாலும், அவரது இந்தியப் பயணத்திற்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கிறது.
இலங்கைக்குக் ‘கை’ கொடுக்கும் இந்தியா:
கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட இலங்கையில் நடந்த எழுச்சிமிக்க மக்கள் போராட்டங்களால் ராஜபக்சேக்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, தனது அடிவருடியான ரணில் விக்ரமசிங்கவை அதிபராக்கியது. அமெரிக்காவின் இந்த நகர்வானது ஒருவகையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கு இந்தியாவிற்கும் சாதகமாக அமைந்துவிட்டது.
இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் இரட்சகராக ரணில் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், உண்மையில் அதன் பிறகுதான் நெருக்கடி தீவிரமானது. உணவு, மருந்துப் பொருட்கள், எரிபொருள் பற்றாக்குறை, 12 மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல்களால் வேலையிழப்பு ஆகியவற்றால் மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மக்களது வாழ்வில் இருள் சூழ்ந்திருக்க 46 பில்லியன் வெளிநாட்டு கடனையும் திருப்பிக்கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தது இலங்கை. இந்நெருக்கடி நிலையில், ஏற்கனவே பொருளாதார ரீதியில் மோசமான நிலையில் இருந்த இலங்கைக்கு மற்ற நாடுகள் உதவத் தயக்கம் காட்டிய போதும், 4 பில்லியன் டாலர் அளவுக்கான உணவு மற்றும் நிதியுதவி வழங்கி தன்னை ஒரு இரக்கக் குணமுடைய வள்ளலாகக் காட்டிக்கொண்டது இந்திய அரசு. இதையடுத்து, சர்வதேச ஆதரவைக் கோரிய இடங்களிலெல்லாம் தனது பங்கிற்கு இந்தியாவைப் புகழ்ந்து பேசி வருகிறார் ரணில். மேலும், இலங்கைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யல்லென் மற்றும் சர்வதேச நிதி நாணயத்தின் (ஐ.எம்.எஃப்) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருடன் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சர்வதேச மகளிர் தினத்தில் பாராட்டிப் பேசியிருந்தார்.
படிக்க: இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!
தற்போதைய இந்தியப் பயணத்தின் போதும் கூட, சவாலான காலத்தை இலங்கை சந்தித்துக் கொண்டிருந்தபோது இந்தியா உதவியதாகப் பாராட்டி பேசிய ரணில், “இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் தனது இந்திய வருகை என்பது நல்லதொரு வாய்ப்பாக அமைக்கிறது” என்றார்.
ரணிலின் பயணத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்:
ரணிலின் இந்த இந்தியப் பயணத்தில், எரிசக்தி, விமான சேவை, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை, இந்தியாவின் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக்கொள்வது மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
மேலும், பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும், இந்தியா மற்றும் இலங்கை ஒருங்கிணைந்த எரிசக்தி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தியாவின் உதவியுடன் திரிகோணமலையை எரிசக்தி மையமாக வளர்த்தெடுப்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்மொழிவின் பேரில், நாகப்பட்டினம், கொழும்பு மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள போர்த்தந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமான திரிகோணமலை ஆகியவற்றை இணைக்கும் எண்ணெய் விநியோகக் குழாய்கள் அமைப்பது குறித்து, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் மட்டத்திலான ஒரு கூட்டம் ஏற்கெனவே இலங்கையில் நடைபெற்றது. திரிகோணமலையில் நூற்றாண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாத எண்ணெய்த் தொட்டிகளை மீட்டெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை இரண்டாம் உலகப்போரின் போது பயனபடுத்தப்பட்ட எண்ணெய்த் தொட்டிகளாகும். இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இவை கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு எரிசக்தி வளங்களைக் குறைந்த விலையில் வழங்கவும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும், தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எரிசக்தி விநியோகத்திற்கான குழாய்களை அமைப்பதற்கும், இதன்மூலம் எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தியா ரூபாயில் பரிவர்த்தனை:
கடந்த ஆண்டு திவால் நிலையை அடைந்தபோது இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவு குறைந்தது. தற்போது அதனை மீட்டெடுக்க இலங்கையின் சுற்றுலாத்தளங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிகளை ஈர்ப்பதையும், அதன் மூலம் வரும் வருவாயையும் இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது.
இனிவரும் நாட்களில் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயை பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்துவது குறித்தும் தற்போதிய ரணில் – மோடி சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
இந்தியா வருவதற்கு முன்பு, கொழும்புவில் உள்ள இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் ரணில் உரையாற்றியபோது, இலங்கைக்குள் இந்திய நாணயம் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும். இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் இந்திய நிறுவனங்களிடம் இருந்து அதிக தனியார் முதலீட்டை இலங்கை நாடியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்திய நிதியுதவி, வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தின் பின்னும் இலங்கையின் நலன் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் ரணில், அந்த நலனை மேம்படுத்தும் ரகசியம் எதுவென்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். அதுதான் இந்தியத் தனியார் நிறுவனங்களின் முதலீடு. இந்தியாவிலும் கூட மன்மோகன், மோடி உள்ளிட்ட அனைத்து இரட்கர்களும் உதிர்த்த அதே முத்துக்கள் தானே இவை.
இலங்கையின் இரட்சகர் ரணில்! ரணிலின் இரட்சகர் மோதானி!
தந்து இந்தியப் பயணத்தில் இந்தியாவின் பிரமதமரையும் குடியரசுத் தலைவரையும் சந்தித்ததை விட மிக முக்கியமான சந்திப்பை நிகழ்த்தினார் ரணில். அது ரணில் – அதானி சந்திப்புதான். இந்தச் சந்திப்பில், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கம், புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி திட்டம் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உண்மையில் ரணில் வந்தது இதற்காகத்தான். அதாவது, அதானிக்காகத்தான். மோடியின் ஆசியுடன், அதானியின் முதலீட்டைக் கொண்டு இலங்கையை மீட்டெடுக்க போகிறாராம் ரணில்.
அதானியுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரியின் அதானி குழுமத்தின் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நிறைவடையும் என்று இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்தார்.
படிக்க: மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு வடக்கு மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில் 500 கோடி முதலீட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது இலங்கை மின்சார வாரியம். இதற்கு எவ்வித சட்டப்பூர்வ வழிமுறைகளையும் இலங்கை அரசு பின்பற்றவில்லை.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களிடமும் இந்நடவடிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இது “மோடியின் நண்பரை கொல்லைப்புற வழியாக அனுமதிக்கும் நடவடிக்கை” என்று எதிர்க்கட்சிகள் சாடினர். மக்களும் இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, “அதானியை நிறுத்து”, “இலங்கையிலிருந்து வெளியேறு” என்று முழங்கினர்.
இதற்கெல்லாம் காது கொடுக்காமல், அதானியை சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கும் வகையில், இலங்கை மின்சாரச் சட்டம் 2009-இல் உடனடியாக திருத்தத்தைக் கொண்டு வந்தது, அப்போதைய கோத்தபய அரசு. இந்தக் கோத்தபய அரசு மக்கள் எழுச்சியால் வீழ்த்தப்பட்டுவிட்டது. ஆனால், இலங்கையின் மீதான அதானியின் பிடி கொஞ்சமும் தளரவில்லை. அதானி குழுமத்தின் திட்டங்களை விரைவுபடுத்தவும், மேலும் விரிவுபடுத்தும் வகையிலுமே ரணிலின் தற்போதைய இந்திய பயணம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட இலங்கையில் 1 பில்லியன் டாலர் முதலீடு கொண்ட இத்திட்டங்கள் மூலம் இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் எரிசக்தித் துறையில் அதானியின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.
உண்மையில், இந்தியாவுடனான இத்தகைய ஒப்பந்தங்கள், இலங்கை மீதான இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தையே அதிகரிக்கச் செய்யும். இந்தியாவுடன், குறிப்பாக அதானியுடன் பல திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதன் மூலம் அதானிக்கு இலங்கையை அடமானம் வைப்பதுடன் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை பலி கொடுக்கிறார் ரணில். இந்தக் கார்ப்பரேட் சேவைக்கும் இலங்கையை மறுகாலனியக்குவதற்குமே ரணிலின் இந்திய வருகை பயன்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அதானியின் நலனுக்காக எவ்வாறு, அனுதினமும் மோடி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளாரோ, அதேபோன்று இலங்கையில் மோடியின் நகலாக இருக்கிறார் ரணில். இலங்கையை மீட்கப் போவதாக சொல்லிக்கொண்டே அந்நாட்டை மறுகாலனியாக்கி வரும் ரணிலின் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் இலங்கையை மீட்கப் போவதில்லை. “இலங்கையிலிருந்து வெளியேறு” என்று கடந்த ஆண்டு அதானிக்கு எதிராகப் போராடிய இலங்கை உழைக்கும் மக்கள், இன்று இலங்கையை மறுகாலனியாக்கும் ரணிலுக்கு எதிராகவும், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் சேர்த்தே தங்களது போர்க்குரலை உயர்த்த வேண்டியுள்ளது.
ஆனந்தி