மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!

ஐ.எம்.எஃப்.பின் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையைப் பின்பற்றியதால் உருவான இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக, மீண்டும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்குவது என்பது அந்நாட்டை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கிவிடும்.

மது அண்டை நாடான பாகிஸ்தானில் உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். உணவின்றி தவித்து வரும் அந்நாட்டு மக்களின் நிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. கோதுமை மூட்டைகள் கொண்டு செல்லும் லாரிகளின் பின்னே நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறார்கள்; மோட்டார் வாகனத்தில் கோதுமை லாரியை வேகமாகத் துரத்திச் செல்கிறார்கள். கோதுமை வாங்கத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 அப்பாவி மக்களின் உயிர் பறிபோயுள்ளது. ஒரு மூட்டைக்காக அவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன.

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ காட்சி ஒன்றில், கோதுமை மூட்டையை எடுத்துக்கொண்டு ஓடும் ஒருவரிடமிருந்து, அம்மூட்டையைப் பிடுங்க நான்கு, ஐந்து பேர் முயற்சிக்கின்றனர். மூட்டையை வைத்திருப்பவரோ, அதனை மேலும் இறுகப்பற்றிக் கொண்டு கீழே விழுந்து வீறிட்டுக் கதறி அழும் காட்சி நமது நெஞ்சத்தை நடுங்கச் செய்கிறது. வீட்டில் பசியோடு தனக்காக காத்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு மூட்டையாவது எடுத்துச் செல்லவேண்டும் என்ற பெற்றோர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இத்தகைய அழுகையும் ஆவேசமுமாகும்.

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை இதுவரை கண்டிராத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ டீத்தூள் ரூ.1100, ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.150, ஒரு லிட்டர் பால் ரூ.140, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ரூ.480, ஒரு டசன் முட்டை ரூ.400 என விற்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமல்லாது சமையல் எரிவாயு உருளையின் விலையும் ரூ.2,411 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்வா எனும் பகுதியில், சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட பெரிய பிளாஸ்டிக் பைகளைச் சிறுவர்கள் எடுத்து செல்லும் காணொளி காட்சியினை சமூக வலைதளங்களில் காணமுடியும். எரிவாயு நிரப்பப்பட்ட அந்த பிளாஸ்டிக் பையில் சிறிய கீறல் விழுந்தாலும் மிகப்பெரிய விபத்து நேரிடும். எனினும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயு உருளை கிடைக்காமல், கள்ளச்சந்தையில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதால் வேறுவழியின்றி மக்கள் இத்தகைய ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானை இருள் கவ்வியுள்ளது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க ஷபாஸ் ஷெரீப் அரசு பல கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது. மின்சார சேமிப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தையும் மாலைவேளையில் அதிக நேரம் திறந்து வைத்திருக்கக் கூடாது எனக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மின் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் மருத்துவமனைகள், பள்ளிகள் கூட செயல்பட முடியாத நிலை உள்ளது. அரசுத் துறைகளிலும் மின் பயன்பாட்டை 30 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. மின்சாரத் தட்டுப்பாட்டால் நாடாளுமன்றம் மூன்று நாட்கள் மூடப்பட்டது; செனட் செயலகம் சில நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவான ரூ.6,200 கோடியை (பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில்) சேமிக்க முடியும் என்கிறது பாகிஸ்தான் அரசு. ஆனால், இதன் விளைவாக பல இடங்களில் 24 மணிநேரம் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் செயலிழந்து, உற்பத்தி நடக்காமல் முடங்கியது. இதனால், பாகிஸ்தான் 300 மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

அரசாங்கம் கடனில் தவிப்பதால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியமான ரூ.2,500 கோடியும், அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் ரயில்வே ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய சிக்கனக் குழு, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகிதத்தையும், அமைச்சர்களின் செலவீனங்களில் இருந்து 15 சதவிகிதத்தையும் வெட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், அமைச்சர்களின் எண்ணிக்கையும், பிரதமரின் உதவியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையை மீட்க, அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகச் சொத்தினை பாகிஸ்தான் அரசு ஏலம் விட்டுள்ளது.

2021 டிசம்பரில் 12.3 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், 2022 டிசம்பரில் 24.5 சதவிகிதமாக இரட்டிப்பாகியுள்ளது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இது 47 ஆண்டுகளாக பாகிஸ்தான் சந்தித்திராத நிலைமை. கடந்தாண்டு அந்நாட்டைப் புரட்டிப் போட்ட வெள்ளம் இந்நிலையைத் தீவிரமாக்கியது. மேலும், 2023-ஆம் நிதியாண்டில் 23 சதவிகிதம் வரை கூடுதலான பணவீக்கத்தை பாகிஸ்தான் சந்திக்கப் போவதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

000

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 22.67 சதவிகிதம் பங்காற்றுகிறது. அந்நிய செலாவணி போன்றவற்றிற்கு பெரிதும், ஜவுளி ஏற்றுமதியைச் சார்ந்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆடைகள், போர்வைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால், 2021-ஆம் ஆண்டு 2.9 மில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி தற்போது 18.3 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது. ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்திருப்பதால், வெளிநாடுகளில் இருந்து சரக்குக் கப்பல்களில் வந்திறங்கியிருக்கும் கண்டெய்னர்கள் எடுக்கப்படாமல் கராச்சி துறைமுகத்திலேயே தேங்கியிருக்கின்றன. பருத்தித் தட்டுப்பாடு காரணமாக பல ஜவுளி ஆடைத் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் முடங்கி, 7 இலட்சம் ஜவுளி ஆடைத் தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது.

ஏற்றுமதி குறைந்திருக்கும் இதேநேரத்தில் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 23 மில்லியன் ஹெக்டேர் நிலம் நாசமாகி உணவு, மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், நிதிப் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் தேங்கிக் கிடைக்கின்றன.

ஜனவரி 27-ஆம் தேதி, பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், இரும்பு மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில், “ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகளே நமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய மருந்து” எனவும், “பொருளாதாரப் புதைகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஏற்றுமதிக்கான அவசர நிலையை அறிவிக்க வேண்டும்” எனவும் அமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது பாகிஸ்தானின் கையில் இருக்கும் 4.3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியைக் கொண்டு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே திவால் நிலையில் இருந்து பாகிஸ்தான் தப்பித்திருக்க முடியும்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க பிரதமர் ஷபாஸ் ஷெரிப், உலக நாடுகளின் உதவியை நாடி வருகிறார். இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவுவதாகத் தெரிவித்திருக்கின்றன. இருந்தாலும் தற்போது வழங்கப்பட்டிருக்கும் நிதி உதவியைக் கொண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே சமாளிக்க முடியும். ஆனால் இந்த நிதியாண்டை சமாளிக்க பாகிஸ்தானுக்கு மேலும் 30 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. ஏற்கனவே கடனில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்து மீண்டும் கடனைத் திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கையில்லாத காரணத்தினால் உலக நாடுகள் கைவிரித்துவிட்டன. எனவே பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.


படிக்க: பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!


ஆனால், ஐ.எம்.எஃப். வழக்கம் போல இந்த முறையும் கடனோடு சேர்த்து நிபந்தனைகளையும் விதித்து பாகிஸ்தானை இன்னும் படுகுழிக்குத் தள்ளுகிறது. 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஆறு பில்லியன் டாலர் கடன் தர ஐ.எம்.எஃப். ஒப்புக்கொண்டது. இது கடந்தாண்டு பாகிஸ்தானில் வெள்ளம் வந்தபோது ஏழு பில்லியனாக உயர்த்தப்பட்டது. ஐ.எம்.எஃப். இடமிருந்து பாகிஸ்தான் நிதியைப் பெற எரிபொருள், மின் கட்டணம், எரிவாயு விலையை உயர்த்த வேண்டும்; வரிகளை அதிகரிக்க வேண்டும்; மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு வழங்கிவரும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை பாகிஸ்தான் மீது விதித்தது. ஆனால், இந்த உத்தரவை பாகிஸ்தான் சரியாக நடைமுறைப்படுத்தாததால் ஐ.எம்.எஃப். ஒரு பில்லியன் டாலரை தராமல் இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி ஐ.எம்.எஃப் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தவுடனேயே வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு ஒரே நாளில் ரூ.255.43 ஆக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பாகிஸ்தான் சந்தித்திராத வீழ்ச்சியாகும். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஐ.எம்.எஃப். இடமிருந்து மேலும் கடன் பெறுவது என்பது கத்திக்குத்துக்கு பேண்டேஜ் போடுவது போன்றுதான். அதனால் காயம் ஆறாது, மேலும் சீழ்ப்பிடிக்கவே செய்யும் என்பதையே இது நிரூபிக்கிறது.

நேற்று இலங்கை, இன்று பாகிஸ்தான், நாளை இந்தியா அல்லது வேறு நாடு என்று ஒவ்வொரு நாடுகளும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் சிக்கவைக்கப்பட்டு, அதன் சுமை முழுவதும் அந்நாட்டின் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. இலங்கையைப் போல பிற நாடுகளிலும் மக்கள் எழுச்சி வந்துவிடுமோ என்ற ஏகாதிபத்தியங்கள் அஞ்சுகின்றன. அதனால், கடன் உதவி கொடுப்பது போல நாடகமாடுகின்றன. இந்தக் கடன் உதவிகள் என்பவையெல்லாம், ஏழை நாடுகளை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்தியச் சுரண்டல் என்பதை அனைத்து ஆளும் வர்க்கங்களும் மறைக்கின்றன.

இலங்கையைப் போலவே இந்தியாவிற்கு முன்னதாகவே, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாடுதான் பாகிஸ்தான். அதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் வலையில் சிக்கியிருக்கிறது. இது, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவுடனான பாகிஸ்தானின் நெருக்கம் வளர்ந்து வந்தது. சீனாவின் பட்டுப்பாதை என்ற மிகப்பெரும் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக, பாகிஸ்தான் வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) என்ற பெரும் பொருளாதாரத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் பாகிஸ்தான் தொடர்ந்து வந்தது.


படிக்க: புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !


இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று, ரசிய-உக்ரைன் போர் போன்றவை காரணமாக பாகிஸ்தானின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துத் தேக்கம், விலையேற்றம், வேலையின்மை போன்றவை அதிகரித்துள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவைப் பலவீனப்படுத்தி, இலங்கையைப் போலவே தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பாகிஸ்தானை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது அமெரிக்கா.

ஐ.எம்.எஃப்.பின் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையைப் பின்பற்றியதால் உருவான இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக, மீண்டும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்குவது என்பது அந்நாட்டை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கிவிடும். மாறாக, ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து வாழும் பொருளாதாரக் கட்டமைப்பையும் அதனைத் தாங்கிப் பிடிக்கும் அரசுக் கட்டமைப்பையும் தூக்கியெறிந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்தைப் படைக்கும் உண்மையான ஜனநாயகத்தைப் படைக்கும் பாதையில் பாகிஸ்தான் உழைக்கும் மக்கள் முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை. அத்தகைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும்.

வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க