privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்உலகம்பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே.

-

ண்டை நாடான பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவு கனமழை பெய்து, வெள்ளம் புரண்டோடுகிறது. தெற்காசியாவிலேயே மிக மோசமான வெள்ளம் என்று கூறப்படுகிறது. மொத்த நிலப்பரப்பில் மூன்று ஒரு பங்கு நிலப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையானது, காண்போரின் மனதை உலுக்குகிறது. மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல், தங்குவதற்கு வீடில்லாமல், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முறையான மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் படும் துன்பங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

பெருவெள்ளம் மற்றும் கனமழையில் 555 குழந்தைகள் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 12 ஆயிரத்து 860 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக 5 லட்சத்து 46 ஆயிரத்து 288 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.6 கோடி குழந்தைகள் உட்பட 3.3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 98 ஆயிரத்து 407 கால்நடைகள் பலியாகியுள்ளது.

படிக்க : இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

மேலும் 17 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், 22 ஆயிரம் பள்ளிகள், 240க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 12 ஆயிரத்து 716 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் ஏற்பட்ட பல இயற்கைப் பேரிடர்களைப் பார்வையிட்டுள்ளேன். ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்பைப் போன்று இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள், திறந்தவெளிகளில் துணி மற்றும் பிளாஸ்டிக் பைகளால் குடில்களை அமைத்துக்கொண்டு வசிக்கின்றனர். உணவு, குடி தண்ணீர் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்காக காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை. கழிவறைகள் இல்லாத நிலையில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே மலம்-சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. இதனால் தொற்று நோய்கள் வேகமாக பரவுகின்றன. சிந்துவில் மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் வயிற்றுப் போக்காலும், 44 ஆயிரம் பேர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளே இல்லை என்ற அவலநிலை நிலவுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறிய மருத்துவமனைகள் என 1,460 மருத்துவமனைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனைகளிலும் மருந்துகள் இல்லை.

கர்ப்பிணிகளின் நிலையோ நரக வேதனையானது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 73 ஆயிரம் கர்ப்பிணிகள் குழந்தை பேறுக்காக மருத்துவமனைகளை நாடுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிகள் பலரும் வெள்ளத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாமல் சாலைகளிலும், வாகனங்களிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் கொடுமையான சூழல்.

***

ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மக்களை, பெருவெள்ளமானது மிகக் கடுமையாக பாதித்துள்ளது. மக்கள் வாழவே வழியில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்நாட்டு அரசு மக்களை முற்றிலுமாக கைகழுவி விட்டது. 14 மாவட்டங்களில், கடுமையான வெள்ளம் பாதித்த 38 இடங்களில் இருக்கும் மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட அரசு செய்துதரவில்லை எனக் கூறுகின்றனர். வெள்ள பாதிப்பிற்கு முன் பொருளாதார நெருக்கடி, விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராக போராடிய மக்கள், தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடுமையான வெப்ப அலை, பணிப்பாறை உருகுதல், கனமழை, பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் இயல்புநிலையாகி வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி செப்டம்பர் மாத புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே. ஏகாதிபத்தியத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு தீவிரமடைந்ததன் விளைவாக, இன்று மொத்த மனிதகுலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாகத்தான், பாகிஸ்தான் மக்கள் பெருவெள்ளத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மறுபக்கம், இழவு வீட்டில் பாட்டிசைப்பதைப் போல, பாகிஸ்தான் அரசு கிரிக்கெட் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. ஏகபோக மூலதனத்திற்கு சேவை செய்கிற பாகிஸ்தானின் அடிமை அரசு, நெருக்கடி மிகுந்த சூழலிலும் மக்களை கை கழுவுகிறது. இனியும் அதைச் சுமந்துகொண்டு பாகிஸ்தான் மக்கள் ஏன் வாழவேண்டும். உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை தம் கையிலெடுக்கப் போராடுவதே, விடிவை நோக்கிய பாதையாகும்.

சிவராமன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க