மெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இராணுவமயமாக்கும் நோக்கில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் நான்குமுனை பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue). இது சுருக்கமாக, ‘‘குவாட்’’ (Quad) என்றழைக்கப்படுகிறது. இது, சீனாவுக்கு எதிராகச் செயல்படும் ஒரு இராணுவக் கூட்டணியாக 2017−ம் ஆண்டின் இறுதியில் மாற்றம் அடைந்தது. சீனா−அமெரிக்காவிற்கு இடையேயும் சீனா−இந்தியாவிற்கு இடையேயும் முறுகல் நிலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இக்கூட்டணி நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் கடந்த அக்டோபர் 6 அன்று ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.

இக்கூட்டம் நடந்து முடிந்த ஓரிரு வாரங்களுக்குள்ளாக, அதுவும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்குச் சற்று முன்னதாக, ‘‘அடிப்படையான பரிமாற்றமும் ஒத்துழைப்பும்’’ (Basic Exchange and Cooperation Agreement for Geo−spatial Cooperation − BECA) எனும் ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 27−ஆம் தேதியன்று இந்தியா−அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை சீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்புக் கவசமாக வருணித்த அமெரிக்கத் தரப்பு, இந்த ஒப்பந்தம் குறித்து விடுத்த பத்திரிகை செய்திகள் அனைத்திலும் சீன எதிர்ப்பையே மையப்படுத்தியிருந்தது.

படிக்க :
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் மற்ற நாட்டின் விமானத் தளங்களிலும் துறைமுகங்களிலும் தங்கி, எரிபொருளை மீண்டும் நிரப்பிக் கொள்வதோடு, பராமரிப்பு மற்றும் பழுது நீக்க வேலைகளையும், உணவு, நீர், உடை, மருத்துவம் மற்றும் இதர தொழில் நுட்ப சேவைகளைச் செய்து கொள்ள முடியும்.

இந்திய ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் பாகிஸ்தானையும், சீனாவையுமே ‘‘தேசிய எதிரிகளாக’’க் கட்டமைத்துள்ளன. இந்த இரு நாடுகளுக்கு அப்பால் இந்தியாவின் எதிரிகளாகச் சித்தரிக்க எந்தவொரு நாடும் இல்லாததால், இந்த ஒப்பந்தத்தால் பெரிதும் பயனடையப் போவது அமெரிக்கா மட்டும்தான். குறிப்பாக, சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனது இராணுவத் தளங்களை இந்தியாவில் அமைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் திரைமறைவான ஏற்பாடுதான் இந்த ஒப்பந்தம்.

குவாட் கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அரசுச் செயலர் மைக் பாம்பியோவுடன் (இடமிருந்து மூன்றாவது) இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

1998−2004 வாஜ்பாயி ஆட்சியில், அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்புத் திட்டத்தில் இந்தியாவை இணைக்கும் முயற்சிகள் தொடங்கின. அதன்பின், 2004−14 வரையில் நடந்த காங்கிரசின் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடி பிரதமரான பின் 2016−இல் இந்தியா−அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்தான ‘‘இராணுவத் தளவாடப் பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement − LEMOA)’’  2018−ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து, 2018, செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்ட ‘‘கோம்காசா’’ (Communications Compatibility and Security Agreement − COMCASA) எனும் ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் அதன் இராணுவக் கூட்டாளி நாடுகளின் கப்பற்படையுடன் இந்தியக் கடற்படை இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது. இந்த கோம்காசா ஒப்பந்தப்படிதான் தற்போது குவாட் கூட்டணியின் சார்பில் ‘‘மலபார் பயிற்சி’’ எனப்படும் கடற்படை போர்ப் பயிற்சி அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் நடைபெறுகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, குவாட் கூட்டணி ஓர் இராணுவக் கூட்டணியாக உருவாகியிருக்கிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஐரோப்பா கண்டத்தில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு, மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளை இணைத்துக்கொண்டு அமெரிக்கா உருவாக்கிய நேட்டோ இராணுவக் கூட்டணியைப் போன்றே, குவாட் கூட்டணியை சீனாவிற்கு எதிராக உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகக் கூறும் முதலாளித்துவ நிபுணர்கள், குவாட் கூட்டணியை ஆசியாவின் நேடோ என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்தியா−அமெரிக்கா இடையே அரசியல்−பொருளாதார−இராணுவ ஒத்துழைப்பு வலுப்படுவதை இந்திய ஆளும் வர்க்கமும், அதன் அறிவுத் துறையினரும் விரும்பினாலும், இன்றைய உலகமயச் சூழலில், சீனாவிற்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டிருக்கும் நேட்டோ போன்றதொரு குவாட் கூட்டணியில் இந்தியா பங்குபெறுவது பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஐயங்கொண்டுள்ளனர். குறிப்பாக, முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரும், இந்து நாளிதழ் உள்ளிட்ட தேசிய ஊடகங்களின் ஒரு பிரிவும், ‘‘குவாட் கூட்டணியில் இணைந்தாலும், இந்தியா தெற்காசிய பிராந்திய விவகாரங்களில் சுயேச்சையான முடிவுகள் எடுத்துச் செயல்படுத்த வேண்டும். சீனாவிற்கு எதிராக இராணுவரீதியான தாக்குதலை மட்டுமே தீர்வாகக் கருதாமல், சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அரசு தந்திர வழிகளில் முயற்சிக்க வேண்டும்’’ என எச்சரிக்கை கலந்த ஆலோசனைகளை முன்வைத்து வருகிறார்கள்.

குவாட் கூட்டணித் தலைவர்கள்: இடமிருந்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரீசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான மோடியின் தனிப்பட்ட நட்பையும்; குவாட் கூட்டணியில் இந்தியா இணைந்திருப்பது மற்றும் மலபார் பயிற்சி உள்ளிட்டு அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவம் மேற்கொண்டுவரும் போர்ப் பயிற்சிகள் ஆகியவற்றையும் சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொண்டு வரும் மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். கும்பலும் இந்த எச்சரிக்கைமிக்க ஆலோசனைகளை ஒரு பொருட்டாகக் கருத மறுக்கின்றன. குறிப்பாக, இந்தியா−சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த சில மாதங்களாகத் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இப்பிரச்சினையில் மோடி அரசின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளாலேயே கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் குவாட் கூட்டணி, மலபார் போர் பயிற்சி ஆகியவற்றை எதிர்த்தரப்பின் வாயை அடைக்கும் அரசியல் பிரச்சாரமாக முன்னெடுத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

இன்னொருபுறமோ குவாட் கூட்டணி ஒப்பந்த விதிகள் ஆசிய−பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலனுக்கு ஏற்றவாறு மட்டுமே இந்தியா செயல்பட முடியும்; இந்தியா தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட முடியாது என்றவாறே அமெரிக்க அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை காரணமாக எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் கூறிவரும் எச்சரிக்கை கலந்த ஆலோசனைகள் நடைமுறையில் காகித எச்சரிக்கைகளாகவே முடிந்துபோகக் கூடும்.

படிக்க :
♦ அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

இன்றைய உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் மிகமிக வலுவான இடத்தை சீனா பெற்றிருக்கிறது. சீனாவின் இந்த வலு காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாடும் சீனாவைப் பொருளாதாரரீதியாகத் தனிமைப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. இவ்வாறான நிலையில் சீனாவை இராணுவரீதியாக அச்சுறுத்திப் பணிய வைப்பதைத்தான் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் முன்னெடுக்கிறது. இதற்கு இந்தியா−சீனா இடையேயும் சீனா−ஜப்பான் இடையேயும், சீனா−தென்கொரியா இடையேயும் நிலவிவரும் எல்லைப் பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. எனினும், அமெரிக்காவின் இம்முயற்சியை ஐரோப்பிய நாடுகளே முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்துவரும் வேளையில், இந்தியாவை ஆளும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் அமெரிக்காவிற்கு அடியாள் வேலை பார்க்க முனைப்பாக இறங்கியிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய தொழிற்கூடமான சீனா, மேற்காசிய நாடுகளிலிருந்து பெருமளவு எண்ணெயை இறக்குமதி செய்துவரும் நிலையில், எண்ணெய்க் கப்பல்கள் சீனாவுக்குச் செல்ல முடியாதபடி இந்தியப் பெருங்கடல், தென்சீனக் கடல் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் சீனாவைப் பொருளாதாரரீதியாகக் கழுத்தை நெரிக்கத் திட்டமிடும் அமெரிக்க வல்லரசு, அதற்காகத் தொடர்ந்து பல தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கெதிராக சீனா, ஈரானிய எண்ணெயைத் தனது நட்பு நாடான பாகிஸ்தானிலுள்ள குவாதர் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, பின்னர் அங்கிருந்து மேற்கு சீனா வரை எண்ணெய்க் குழாய், இரயில் மற்றும் சாலை இணைப்புகள் மூலம் கொண்டு செல்ல சீனா − பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) எனும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. சீனா − பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தின் வழித்தடமானது, இந்திய – சீன எல்லை மோதல் நடந்த இடத்திற்கு அருகே சீனாவின் அக்சாய் சின், சியாச்சின் வழியாகவும் செல்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.-இன் திட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் சீனாவைச் சீண்டுவது என்ற அடிப்படையில்தான் காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை நீக்கி, அம்மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகக் கூறுபோட்டு, சீனாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள லடாக் பகுதியை மத்திய மோடி அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

இந்தப் பின்னணியிலிருந்துதான் இந்தியா−சீனா இடையே டோக்லாம் பகுதியிலும், லடாக் மற்றும் கல்வான் பகுதியிலும் எல்லைப் பிரச்சினை வெடித்திருப்பதையும், அங்கு இரு நாடுகளுமே தமது படைகளைக் குவித்து வருவதையும், கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்திருப்பதையும் காண வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.−இன் திட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் சீனாவைச் சீண்டுவது என்ற அடிப்படையில்தான் காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கமும், அம்மாநிலம் யூனியன் பிரதேசங்களாகக் கூறு போடப்பட்டு, சீனாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள லடாக் பகுதியை மத்திய மோடி அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசைக் கண்டிப்பது போலப் பாசாங்கு செய்துவருவதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் காண வேண்டும்.

இன்றைய உலகமயச் சூழலில் பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் சீனாவுடன் இந்தியா இணைந்திருக்க வேண்டியிருக்கிறது. இதற்கு உடனடியான மாற்று ஏற்பாடு ஏதும் இல்லாத நிலையில், சீனாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொண்டால் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாகவும் பொருளாதாரத் தேக்கம் உள்ளிட்ட பிற காரணங்களாலும், இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் உள்ளட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் அரசியல்−பொருளாதார செல்வாக்கு அதிகரித்திருப்பதன் காரணமாகவும் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைப் போர் மூலம் தீர்த்துக் கொள்ள இயலாத நிலைமையில்தான் மோடி அரசு உள்ளது.

சீனாவுடன் இந்தியா போருக்குச் செல்வதென்பது சுய அழிவுப் பாதையாகவே அமையும் என்றாலும், அரசியல் நோக்கங்களுக்காக சீனாவை எதிர்த்து மோடி அரசு சவடால் அடிக்க வேண்டியிருக்கிறது. நீண்டகாலமாக சீன எதிர்ப்பு, பாக். எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளதாலும், நீண்டகாலமாக பிரிட்டன், அமெரிக்கா ஆகிய மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசத்தாலும் இந்தப் பாதையிலிருந்து இந்தியா விலகிச் செல்ல விரும்பவில்லை. இந்த திரிசங்கு நிலை காரணமாகவே, ஒருபுறம் ரசியா மூலம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, இன்னொருபுறத்தில் அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இணைந்து போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வது என்ற இரட்டைக் குதிரைகளில் இந்தியா சவாரி செய்துவருகிறது.

மனோகரன்
புதிய ஜனநாயகம்

 

புதிய ஜனநாயகம், டிச. 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க