மெரிக்காவில், கருப்பின மக்களுக்கு எதிராக காலங்காலமாக நடந்து வந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், புதிய ஜனநாயகம் ஜூலை – 2020 இதழில் வெளியான இந்தக் கட்டுரை அச்சமயத்தில் வினவு தளத்தின் முன்னாள் பொறுப்பாசிரியரால் வெளியிடப்படாமல் முடக்கப்பட்டிருந்த இக்கட்டுரையை இப்போது வெளியிடுகிறோம் !

0o0o0

மெரிக்காவின் செல்வ வளம், வளர்ச்சி, முன்னேற்றம் குறித்தும், அதனின் ஜனநாயக மாண்பு குறித்தும் உலகெங்கும் உருவாக்கப்பட்டிருந்த கற்பிதங்கள் அனைத்தும் பூகம்பத்தில் கட்டிடங்கள் சரிந்துவிழுவதைப் போல பொலபொலவென நொறுங்கி விழும் காட்சியை உலகமே கண்டு வருகிறது.
கரோனா நோய்த் தொற்று அமெரிக்காவில் பரவி வரும் வேகமும், அதனால் ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகளும் அந்நாட்டின் செல்வ வளமும் இன்ன பிற முன்னேற்றங்களும் வசதிகளும் அந்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்திற்கும்கூடப் பயன்படவில்லை, பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இத்தொற்று காலத்தில் நடந்த ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலை அமெரிக்க ஏகாதிபத்தியம் அணிந்திருக்கும் ஜனநாயக, சமத்துவ மூகமூடியைக் கிழித்துக் கந்தலாக்கிவிட்டது.

அதேசமயத்தில், ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலைக்கு நீதி கேட்டும் இன சமத்துவத்திற்காகவும் அந்நாட்டு மக்கள் நோய்த் தொற்று அபாயத்தையும் மீறி நடத்திவரும் போராட்டம், எதிர்காலம் குறித்து அஞ்சிக் கொண்டிருக்கும் உலக மக்களிடம், தீவிரமடைந்து வரும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் சுமை தம் மீது திணிக்கிப்படுவதை எதிர்த்து இந்த நிலைமையிலும் போராட முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பதாக அமைகிறது.

0o0o0

ஜார்ஜ் ஃபிளாய்ட் வெள்ளையின போலிசு அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தனிப்பட்ட போலிசு அதிகாரியின் தவறாகவும், ஒரு பிறழ் நடவடிக்கையாகவும்தான் பார்க்க முடியும்” எனக் கூறி அமெரிக்க போலிசு துறையை நிறவெறிக் குற்றத்திலிருந்து காப்பாற்றி விட முயலுகிறார், நம்ம ஊர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநரான ஆர்.கே.ராகவன். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்களே, அது இதுதான் போலும்.

இந்த வாதம் ஜார்ஜ் ஃபிளாய்டைக் கொலை செய்த போலிசு அதிகாரிகளை மட்டும் நிறவெறிக் குற்றத்திலிருந்து காப்பாற்றவில்லை. எரிக் கார்னர், மைக்கேல் பிரௌன், டமிர் ரைஸ், வால்டர் ஸ்காட், ஆல்டன் ஸ்டெர்லிங், பிலாண்டோ காஸ்டைல், ஸ்டீபன் கிளார்க், பிரேயொனா டைலர் ஆகியோரைப் படுகொலை செய்தவர்களையும் நிறவெறிக் குற்றத்திலிருந்து காப்பாற்றுகிறது. இவர்கள் அனைவரும் ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு முன்பாக, கடந்த ஆறு வருடங்களுக்குள் அமெரிக்க போலிசின் வெள்ளை இனவெறியால் உப்பு சப்பில்லாத காரணத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள்.
2014 ஆம் ஆண்டு ஜூலையில் இளைஞனான எரிக் கார்னர், சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை விற்றான் என்பதற்காகக் கொல்லப்பட்டான். ஜார்ஜ் ஃபிளாய்டைப் போலவே எரிக் கார்னரும் வெள்ளையின போலிசு அதிகாரியின் கால்முட்டியால் கழுத்து நெறிக்கப்பட்டுத்தான் கொல்லப்பட்டான். ஜார்ஜ் ஃபிளாய்டைப் போலவே எரிக் கார்னரும் என்னால் மூச்சுவிட முடியவில்லை எனக் கதறியபடியேதான் இறந்து போனான்.

படிக்க :
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !
♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

அதே ஆண்டு ஆகஸ்டில் மைக்கேல் பிரௌன் என்ற 18 வயதான கருப்பின இளைஞன் ஒரு சிகரெட் பெட்டியைத் திருடிவிட்டான் என்ற காரணத்திற்காக வெள்ளையின போலிசு அதிகாரியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டான். பிரௌனின் உடலை ஆறு குண்டுகள் துளைத்திருந்தன.

டமிர் ரைஸ் வெள்ளையின போலிசு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவனது வயது வெறும் பன்னிரெண்டுதான். அந்தச் சிறுவன் ஆயுதம் வைத்திருந்தான் எனக் கதை ஜோடித்து இந்தக் கொலையை நியாயப்படுத்த முயன்று தோற்றுப் போனது அமெரிக்க போலிசு.

“என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்ற ஜார்ஜ் ஃபிளாய்டின் கதறல் நமது நினைவுகளிலிருந்து மறைவதற்குள்ளாகவே, அட்லாண்டா நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான ரேய்ஷர்ட் புரூக்ஸ் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்நகரின் ஓர் உணவு விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு, அதனை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த புரூக்ஸ், அதனால் பிற வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவு தந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. புரூக்ஸைக் கைது செய்ய வந்த போலிசாரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு அவர் ஓடியதால், அவரைச் சுட்டுக் கொன்றோம் என்பது போலிசின் வாதம். குற்றச்சாட்டிலோ, அதற்கு வழங்கப்பட்ட தண்டனையிலோ ஏதாவது நியாயம் உள்ளதா?

சிகரெட் பெட்டியைத் திருடிவிட்டதாக, சட்டவிரோதமாக சிகரெட் விற்றதாக, சிகரெட் வாங்க கள்ள டாலர் கொடுத்ததாக, வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவாக நடந்து கொண்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்ட இந்த ஆஃப்ரோ அமெரிக்கர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்குக் குற்றங்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற அமெரிக்க போலிசின் அறவுணர்ச்சியா காரணம்? அல்லது இப்படுகொலைகள் குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற தன்முனைப்பின் காரணமாக நேர்ந்துவிட்ட பிழையா? நிச்சயமாக இரண்டும் இல்லை. அமெரிக்க போலிசையும் அந்நாட்டின் நீதிமன்றத்தையும் பொருத்தவரை குற்றத்தின் தன்மை தண்டனையைத் தீர்மானிப்பதில்லை. குற்றம் சுமத்தப்படுபவனின் தோலின் நிறம்தான் பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

மேலும், அமெரிக்காவின் பெருவாரியான மாகாணங்களில் நடைமுறையிலுள்ள, பின்வாங்கிச் செல்லாமல் எதிரிகளை எதிர்கொள்வது என்ற சட்டம் (stand your ground law) எதிரிகள் எனக் கருதப்படுவோர் மீது எத்தகைய பலப்பிரயோகத்தையும் பயன்படுத்துவதற்கு போலிசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதாவது, எதிரிகளை எவ்வித விசாரணையுமின்றிக் கொலை செய்வதற்கும் போலிசுக்கு சுதந்திரம் வழங்குவதுதான் இந்தச் சட்டத்தின் உட்கிடக்கை.

இப்படி போலிசிற்கு வழங்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரத்தோடு வெள்ளை நிறவெறியும் சேரும்போது, கருப்பின ஆண்கள் அமெரிக்க போலிசின் எளிதான இலக்காகிவிடுகின்றனர்.

அமெரிக்க போலிசு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளையினத்தவரின் எண்ணிக்கையைவிட கருப்பினத்தவரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம். கைகளில் எவ்வித ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக நின்ற வெள்ளையினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒப்பிடும்போது நிராயுதபாணியான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் எண்ணிக்கை 1.3 மடங்கு அதிகம். இப்படிச் சட்டவிரோதமான முறையில் சுட்டுக் கொல்லும் போலிசு அதிகாரிகளுள் 98 சதவீத அதிகாரிகள் மீது எவ்விதமான குற்ற வழக்கும் புனையப்படுவதில்லை” எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போலிசு அதிகாரிகள் மீது கொலை வழக்குப் போடப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டாலும், தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?” என்ற கேள்வியை எழுப்பி, அவர்களை விடுதலை செய்துவிடுவதை அமெரிக்க நீதிமன்றங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, மைக்கேல் பிரௌனைச் சுட்டுக் கொன்ற அதிகாரி நிறவெறியின் காரணமாகத்தான் பிரௌனைச் சுட்டுக் கொன்றார் என நிரூபிக்கப்பட்ட பின்னும், அந்த அதிகாரி தண்டிக்கப்படவில்லை. மாறாக, அவர் கௌரவமான முறையில் போலிசு துறை யில் இருந்து பதவி விலகிச் சென்றார்.

படிக்க :
♦ புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

வெள்ளையின எஜமானர்களுக்கு எதிராகக் கருப்பின அடிமைகள் நடத்திய கலகத்தை ஒடுக்கும் நோக்கில்தான் அமெரிக்க போலிசு படை உருவாக்கப்பட்டது. அந்த நிறபேத அணுகுமுறையும் நிறவெறியும் இன்னமும் அமெரிக்க போலிசுத் துறையில் ஊறிப் போயிருப்பதாகக் கூறுகிறார்கள் சமூகவியலாளர்கள்.

போலிசு கண்காணிப்பின் முடிவு” என்ற நூலை எழுதிய சமூகவியலாளர் அலெக்ஸ் எஸ்.விடேல், கடந்த நாற்பது ஆண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் மீதான போலிசின் அதிகாரமும் கண்காணிப்பும் அளவுக்கு அதிகமாக அதிகரித்திருப்பதாக அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். போலிசு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகப்படியான நிதி, நவீன தொழில்நுட்பங்கள், சமூகத்தில் பரவிவரும் அச்சம், வறுமையின் காரணமாகப் பெருகிவரும் குற்றங்கள், மற்றும் குற்றங்களைக் காட்டிக் கொண்டுவரப்படும் புதுப்பது அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக போலிசின் கண்காணிக்கும் அதிகாரம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடும் அவர், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாத போலிசின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படுவதால், பிரச்சினை மென்மேலும் தீவிரமடைகிறதேயொழிய, குறைவதில்லை” என விமர்சிக்கிறார்.

போலிசிற்கு அளிக்கப்படும் வரம்பற்ற அதிகாரத்தால் பிரச்சினைகள் தீவிரமடைகிறது என அவர் குறிப்பிடுவதற்கு இன்னொரு நிரூபணமாய் அமைந்திருக்கிறது ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலை.

0o0o0

நிறவெறியின் காரணமாக அமெரிக்க கருப்பினத்தவர்கள் கொல்லப்படுவது, சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராகப் போராட்டங்களும் கலகங்களும் அமெரிக்காவில் நடப்பதும் புதிய விடயமல்ல. எனினும், முந்தைய போராட்டங்களுக்கும் ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலைக்கு நீதி கேட்டுத் தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் இன சமத்துவத்துக்காவும் போராடிய மார்ட்டின் லூதர் கிங் 1968 சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த கலகத்தைக் காட்டிலும், தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்குக் காரணம், இப்போராட்டம் நடுத்தர வர்க்க வெள்ளையினத்தவரையும் கருப்பின மக்களுக்கு ஆதரவாகத் தெருவிற்கு இழுத்து வந்திருப்பதுதான்.
மேலும், அமெரிக்காவையும் கடந்து கனடாவிலும், தென்னமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டத்து நாடுகளிலும் அமெரிக்க போலிசின் மனித உரிமை மீறலை மட்டுமின்றி, அந்நாடுகளிலும் காணப்படும் வெள்ளையின வெறிக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது.

அமெரிக்கச் சமூகத்தில் நிலவிவரும் இனப் பாகுபாட்டை கரோனா தொற்று இத்தொற்றுக்குப் பலியாகும் கருப்பினத்தவரின் எண்ணிக்கை மற்ற இனத்தவரோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம் மிகவும் துலக்கமாக எடுத்துக்காட்டி வரும் அதேவேளையில்தான், ஜார்ஜ் ஃபிளாய்ட் கள்ள டாலர் கொடுத்து சிகரெட்டை வாங்கினார் என நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டைச் சாக்காகக் கொண்டு கொல்லப்பட்டார். இனப் பாகுபாட்டிற்கு எதிராகக் கருப்பின மக்களிடம் கனலாக இருந்துவரும் உணர்வை கரோனா இறப்புகளும் ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலையும் தீயாகப் பற்றியெறியும்படி விசிறி விட்டன என்றால், கரோனா தொற்றால் தீவிரமடைந்திருக்கும் வேலையிழப்பும், எதிர்காலம் குறித்த அச்சமும் வெள்ளையினத் தொழிலாளியையும் நடுத்தர வர்க்கத்தையும் அவர்களிடம் காணப்படும் இன மயக்கத்தைக் கலைத்து வீதிக்கு இழுத்து வந்தன.

அமெரிக்க போலிசின் அதிகாரத்தையும் அத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியையும் குறைக்க வேண்டும் என்பது தொடங்கி போலிசு துறையையே கலைக்க வேண்டும் என்பது வரையில் பல தரப்பட்ட கோரிக்கைகள் இப்போராட்டங்களில் முன்வைக்கப்படுகின்றன. சாராம்சமாக, அமெரிக்க போலிசு மற்றும் நீதித் துறையில் பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்போராட்டத்தின் அடிநாதமாக உள்ளது. அதனால்தான், ஜார்ஜ் ஃபிளாய்டைக் கொன்ற போலிசு அதிகாரி டெரெக் சாவின் மீது கொலைக் (second degree murder charge) குற்றச்சாட்டு பதியப்பட்ட பிறகும், அமெரிக்காவில் போராட்டங்கள் ஓயவில்லை.

போராட்டத்தின் வீச்சும், போராட்டத்தில் காணப்படும் இன ஒற்றுமையையும், போராட்டம் முன்னைப் போல அமைதியாக நடைபெறாமல், முன்னைப் போல சட்ட வரம்புகளுக்குள் அடங்கிவிடாமல், ஊரடங்கையும் மீறித் திமிரி எழுவதும்தான் அமெரிக்க அதிபரையும் ஆளும் வர்க்கத்தையும் அச்சங்கொள்ள வைத்திருப்பதோடு, அதிபர் டிரம்பைப் பதுங்கு குழிக்குள் ஓடி ஒளிந்துகொள்ள வைத்தது.

0o0o0

ரு ஜனநாயக நாட்டில், தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிபரோ, பிரதமரோ, தான் அனைத்து மக்களுக்குமான அரசின் பிரதிநிதி என உணர்ந்து செயல்பட வேண்டும் என முதலாளித்துவ அறிவுஜீவிகள் போதிப்பதுண்டு. குறிப்பாக, தேர்தல்களில் மத, இனவெறியைத் தூண்டிவிட்டு வெற்றியடையும் தலைவர்கள் விடயத்தில் அவர்கள் இதனை விசேடமாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அதிபர் டிரம்போ இந்தச் சம்பிரதாயமான அறநெறிகளைக்கூட மதிக்காமல், அவற்றைக் குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்துவிட்டு, இன சமத்துவத்திற்காக நடைபெறும் இப்போராட்டத்தின் மீது வன்மத்தைக் கக்கி வருகிறார்.

போராட்டக்காரர்களைக் குண்டர்கள், வன்முறையாளர்கள், உள்நாட்டுப் பயங்கரவாதிகள் எனப் பழித்த டிரம்பின் அவதூறுக்கும்; கொள்ளையடிப்பது தொடங்கினால், துப்பாக்கிச் சூடு தொடங்கும்” என்றும், போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவத்தை இறக்கிவிடுவேன்” என்றும் மிரட்டிய டிரம்பின் அச்சுறுத்தலுக்கும் போராட்டக்காரர்கள் அஞ்சிவிடவில்லை. மாறாக, அவரது வன்மத்திற்கு எதிர்வினையாகப் போராட்டம் பரந்துபட்ட ஆதரவைப் பெற்று, அவரைத் தனிமைப்படுத்தியது.

வன்முறை என்பது கேட்கப்படாதவர்களின் குரல்” என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற மேற்கோளை இன்று கோடிட்டுக் காட்டாதவர்களே கிடையாது. நாங்கள் வன்முறையாளர்கள் என்றால், அதை வெள்ளையினத்தவர்கள்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்” எனப் போராடும் கருப்பின மக்களின் சார்பாக டிரம்புக்குப் பதிலடி தந்தார், டமிகா மல்லோரி என்ற இளம் பெண் போராளி.

நவம்பர் 2020 நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை மனதில் வைத்து ஜனநாயகக் கட்சியும், அக்கட்சியைச் சேர்ந்த ஆளுநர்களும், அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் இப்போராட்டத்துக்கும் ஆதரவு அளித்துவரும் அதேவேளையில், அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவும்கூட இன்று டிரம்பை எதிர்த்து, இப்போராட்டத்தை ஆதரிக்கத் துணிந்திருக்கிறது.

இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய காலக்கட்டம்” என டிரம்ப் நிறவெறியோடும் அதிகாரத் திமிரோடும் பேசியதைக் கண்டித்திருக்கும் ஹூஸ்டன் நகர போலிசு உயர் அதிகாரி, அதிபர் ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாவிட்டால், வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகைக்கு முன் நடந்த போராட்டத்தின் மீது அரசு வன்முறையை ஏவி, போராட்டக்காரர்களைக் கலைத்து விட்டு, வெள்ளை மாளிகையிலிருந்து அதன் அருகிலுள்ள புனித ஜான் தேவாலயத்திற்கு நடந்து சென்று, பைபிளோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட டிரம்பின் வக்கிரம் பிடித்த நடவடிக்கையை, அது தன்னை அவமானமும் அருவெருப்பும் அடையச் செய்ததாக” விமர்சித்திருக்கிறார், பெயரை வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி.

படிக்க :
♦ என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !
♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !

டிரம்புடன் புனித ஜான் தேவாலயத்திற்குச் சென்ற அமெரிக்க முப்படைகளின் தலைவர் மார்க் மில்லி, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதோடு, இந்தப் போராட்டம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குப் பல நூற்றாண்டுகளாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக நடந்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ், டிரம்ப் மக்களை ஒன்றிணைப்பதற்கு மாறாக, பிரிக்கவே முயற்சி செய்கிறார்” எனப் பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி, இனவெறிதான் மிகப் பெரிய வைரஸ். கடந்த 400 ஆண்டுகளாக அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை” எனச் சாடியிருப்பதோடு, குற்றவியல் சட்டத் திருத்தங்கள் தேவை” எனக் கோரியிருக்கிறார்.
டிவிட்டர் நிறுவனம் டிரம்பின் இரண்டு சுட்டுரைகளை வன்முறையைத் தூண்டிவிடுவதாகக் குறிப்பிடும் எச்சரிக்கையோடு வெளியிட்டது.

ஜனநாயகக் கட்சியால் ஆளப்படும் மாகாணங்களில், போலிசு துறைக்கு வழங்கப்படும் நிதியைக் குறைக்கவும், தமது கால் முட்டியால் குற்றவாளிகளின் கழுத்தை நெறித்துப் பிடிப்பது உள்ளிட்டு போலிசு வழங்கப்பட்டிருக்கும் பல அதிகாரங்களைத் திரும்பப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இவையாவும் இப்போராட்டம், அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் முகத்திற்கு எதிரேயும் நீங்கள் எந்தப் பக்கம் என்ற கேள்விக் கணையை வீசி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

இது வெறும் அடையாளப் போராட்டமாக அமையாமல், நிறவெறியின் ஒவ்வொரு அம்சத்தையும் எதிர்த்து நிற்கிறது. ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவியல் சட்டத் திருத்தங்களைக் கோரியும் போராடி வரும் அமெரிக்க மக்கள், நிறவெறியின், அடிமை வியாபாரத்தின் சின்னமாகத் திகழும் சிலைகளைத் தகர்த்தெறியத் தொடங்கியுள்ளனர். 1990 சோவியத் ரசியாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் லெனின் உள்ளிட்ட கம்யூனிசத் தலைவர்களின் சிலைகள் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடிய அமெரிக்க ஆளும் வர்க்கம், தனது கண்ணெதிரே தனது மூதாதையர்களின் சிலைகள் அமெரிக்க மக்களாலேயே அடித்து நொறுக்கப்படுவதைக் கண்டு விக்கித்து நிற்கிறது. வரலாறு எப்போதும் நேர்கோட்டுப் பாதையில் செல்வதில்லையே!

இந்தப் போராட்டம் தனது குறிக்கோள்களை முழுமையாக அடைய முடியாமல் முடிந்து போனாலும், இதனையடுத்து எழக்கூடிய போராட்டங்கள் இதனைவிட ஒற்றுமையோடும், இதனைவிடப் போர்க்குணமிக்கதாகவும், இதனைவிட முற்போக்கான கோரிக்கைகளை எழுப்பக் கூடியதாகவுமே அமையும். இதுதான் இப்போராட்டம் உணர்த்தும் செய்தி.

மேலும், ஒரு பெருந்தொற்றுக் காலத்திலும்கூட மக்கள் தமது உயிரைவிடவும், சுயமரியாதையையும், சமத்துவத்தையும், நீதியையும்தான் தமது உயிருக்கு மேலான ஒன்றாகக் கருதுகிறார்கள் என்பதை மீண்டுமொருமுறை உலக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது, இப்போராட்டம்.

குப்பன்

புதிய ஜனநாயகம்

***

பெட்டி செய்தி:

இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு கேள்வி!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை ஆதரித்து வரும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இந்தியப் பிரபலங்களின் முகத்திற்கு நேரே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, அமெரிக்காவின் நிறவெறிக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்தியாவின் ஆதிக்க சாதிவெறி என்பதை இவர்கள் என்றாவது உணர்ந்து குரல் கொடுத்ததுண்டா என்பதுதான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களாலும், அரசுப் படைகளாலும் தாக்கப்படும்போது, கொல்லப்படும்போது, அவர்களது அற்ப உடமைகள் சூறையாடப்படும்போது கிராமப்புற மக்கள் மட்டுமல்ல, படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் அதனை மௌனமாகக் கடந்து போய்விடுகிறார்கள். இந்த மௌனம் அற்பத்தனமான சுயநலத்திலிருந்து மட்டும் வரவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்டவர்களைத் தமக்குக் கீழாகக் கருதும் அருவெருக்கத்தக்க சுயசாதிப் பெருமிதத்திலிருந்தும் வருகிறது.

இன்று இந்தியாவை ஆண்டுவரும் சங்கப் பரிவாரக் கும்பல் ஆதிக்க சாதிவெறியையும் சிறுபான்மையினருக்கு எதிரான இந்து மதவெறியையும் தமது கொள்கையாக, திட்டமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அக்லக், பெஹ்லுகான் உள்ளிட்ட அப்பாவி முசுலீம்களை இந்து மதவெறிக் கும்பல் கொன்று போட்டதும், குஜராத்தின் உனா மற்றும் மகாராஷ்டிராவில் பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.

பிளாய்ட் படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டம் குற்றமிழைத்த அதிகாரிகளைத் தண்டிக்கவும், போலிசின் அதிகாரத்தைக் குறைக்கவும் வேண்டிய நிலைமையை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ இந்து மதவெறியையும், ஆதிக்க சாதிவெறியையும் எதிர்க்கக்கூடிய குரல்கள் பலவீனமாக இருப்பதால், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி முசுலீம்களைக் கொன்ற இந்து மதவெறியர்கள் தேச பக்தர்களாகப் புகழப்படுகிறார்கள். பீமா கோரேகான் சம்பவத்தைக் காரணமாக வைத்து முற்போக்கு அறிவுத்துறையினர் தேசத் துரோகிகளாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, பயங்கரவாத உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்து மதவெறிக் கும்பலின் இந்த பாசிச குற்றச் செயல்களை இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கம் கண்டிக்கவும் எதிர்த்துப் போராடவும் முன்வராத வரை, அமெரிக்காவில் காணப்படும் நிறவெறிக்கு எதிராக அவ்வர்க்கம் எழுப்பும் குரல் போலித்தனமானதுதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க