அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி விமான நிலையத்தில், சரக்குப் பகுதியின் பாதுகாப்பு அதிகாரியாக ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார் ஜில்மா குவேரா.
தனக்கும் தன்னைப் போன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும்படி தான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் கேட்டுள்ளார். அக்கோரிக்கைக்காக பிற அதிகாரிகளை ஒருங்கிணைத்துள்ளார். அதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடையடைப்பும் அதன் காரணமாக வேலையிழப்பும் பெருகிவரும் சூழலில், பணியிலிருப்பவர்களும் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கோரினால்கூட பணிநீக்கம்தான்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஜில்மா குவேரா, வேலைவாய்ப்பற்றோர் நலப்பிரிவில் பதிவு செய்து அவருக்கான உதவித் தொகை கிடைப்பதற்கே ஒரு மாதம் ஆகியிருக்கிறது. நிகரகுவாவில் தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்கு அவரால் என்ன செய்வது எனத் தெரியவில்லை.
அமெரிக்காவில் பணிபுரியும் லத்தின் அமெரிக்க, கறுப்ப்பின மற்றும் மெக்சிகன் தொழிலாளர்கள் பலரின் நிலைமை இதுதான். தங்கும் இடத்திற்கான வாடகை கூட கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த 2019-ம் ஆண்டு முழுவதும் சராசரியாக 3.5%-மாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7%-மாக உயர்ந்துள்ளது. வல்லரசு அமெரிக்காவின் நிலைமை சில மாதங்களில் இந்தப் பெரும்வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் – இரண்டு மாதங்களில் மட்டுமே சுமார் 3.6 கோடி பேர் பணியிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் பேர் பணியிழப்பைச் சந்தித்துள்ளனர் எனது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மக்கள் தொகையான சுமார் 33 கோடி பேரில் இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 10% பேர் பணியிழந்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு இதே மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில் 1,88,264 பேர் மட்டுமெ பணியிழந்துள்ளனர். இன்று அது 200 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 1.8 லட்சத்தில் சராசரியாக இருந்தது 3.6 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காரணமாக பணிநீக்கங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த சூழலில், கொரோனா தொற்றுப் பரவத் துவங்கியதில் இருந்து பெருமளவிலான பணி நீக்கம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் ஊபர் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ‘கிக்’ தொழிலாளர்களுக்கு (Gig workers) உதவித் தொகை கிடைக்கச் செய்யும் வகையில் “பெருந்தொற்று வேலைவாய்ப்பின்மை உதவித் திட்டத்தை” சமீபத்தில் அறிமுகப்படுத்தியது அமெரிக்கா. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போதே 8.5 லட்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையிழப்புச் சூழலைக் கணக்கில் கொண்டு, அமெரிக்காவின் சில மாகாணங்கள் தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகள் பலவற்றை தளர்த்தத் துவங்கியிருக்கின்றன. இதன் மூலம் வியாபாரங்கள் துவங்கும் பட்சத்தில் அதனால் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனக் கருதின. ஆனால் பல மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்தபாடில்லை.
இந்த கொரோனா பெருந்தொற்றுக்காக நடத்தப்படும் கடையடைப்பின் காரணமாக, ஏற்கெனவே மிகவும் வறிய நிலையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 40,000 டாலருக்கு குறைவான வருமானத்தைக் கொண்டுள்ள குடும்பங்களில் சுமார் 40% குடும்பத்தினர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.
படிக்க:
♦ கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வேலையிழந்த 19% அமெரிக்கர்களில் சுமார் 8% பேர் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் அதற்கான மருத்துவ செலவுகளே மருத்துவமனைக்குச் செல்லவிடாமல் தங்களைத் தடுத்துவிடும் என்கின்றனர். அமெரிக்காவில் 2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வயதுவந்தவர்களில் 25% பேர் மருத்துவப் பராமரிப்பை தவிர்த்து விடுகின்றனர். ஏனெனில் காப்பீட்டிற்குள் வராத மருத்துவச் செலவுகளைச் செய்வது அவர்களது வருமானத்தில் சாத்தியமில்லை. அமெரிக்காவில் மருத்துவம் முழுக்க முழுக்க, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில், அவர்களின் இலாபத்தையே நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுவதன் விளைவு இது.
மேற்கண்ட புள்ளிவிவரங்கள் எல்லாம், அமெரிக்காவின் மத்திய வங்கியின் “அமெரிக்கக் குடும்பங்களின் பொருளாதார நல்வாழ்வு குறித்த அறிக்கை”-யில் இடம்பெற்றுள்ளன.
தற்போது வேலையிழந்தவர்களில், 90% பேரிடம், கொரோனா சிக்கல்கள் முடிந்ததும் சில காலம் கழித்து வேலைக்கு திரும்பலாம் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. ஆனால், அதில் 77% பேருக்கு, திரும்பும் தேதி எதுவும் உறுதியாகக் கூறப்படவில்லை.
தனியார்மயத்தின் சொர்க்கபுரியான அமெரிக்க வல்லரசில், மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தையுமே பணம் மட்டுமே தீர்மானிக்கிறது. மருத்துவம், உயர்கல்வி, குடிநீர் சேவை என அடிப்படையான தேவைகள் எதுவானாலும், ஒரு வேலை இருந்தால் மட்டுமே உத்தரவாதமாகக் கிடைக்கும். அதனால்தான் அமெரிக்காவில் பணியிழந்தவர் உயிரிழந்தவருக்குச் சமமாகிறார்.
– நந்தன்
செய்தி ஆதாரம் : த கார்டியன்.