மிழகத்தில் 24 மணி நேரமும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திருச்சி குட்ஷெட்டில் 400க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் 11 மேஸ்திரிகளின் தலைமையில் ‘செட்’ முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரக்குகளை இறக்கி ஏற்றி வருகின்றனர். மாதத்தில் ஒரு சில நாட்கள் கிடைக்கும் இவ்வேளையை நம்பித்தான் அவர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கு அறிவித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, நெல், கோதுமை இறக்கி ஏற்றுவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் அதில் ஈடுபடக்கூடிய சுமைப்பணி தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு எந்த வாகன வசதியோ, சுகாதார வசதிகளையோ அரசு ஏற்படுத்தித் தரவில்லை.

அருகமையிலிருந்தும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்தும் பல தொழிலாளர்கள் சொந்த முயற்சியில் இருசக்கர வாகனங்களில் வரும் பொழுது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் வாகனங்களை மறித்து பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர்.

இதையும் தாண்டி…. ஒருநாள் வேலை கிடைத்தால் போதும் குடும்பத்தை ஓட்டலாம் என்று நடையாக நடந்து வந்து அரிசி, நெல் தானியங்களை இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பிவைத்தனர். தொழிற்சங்கங்கள் தொடர் முயற்சியால் காண்ட்ராக்ட் காரர்கள் மூலமாக இரயில்வே நிர்வாகத்திலிருந்து – குறிப்பிட்ட வேலைக்கான அனுமதி கடிதம் கிடைக்கப் பெற்றதை காண்பித்து வந்து செல்கின்றனர். இரயில்வேயிலிருந்து இன்று வரை அடையாள அட்டை தரப்படவில்லை.

குட்செட்டில் பராமரிக்க பணியாளர்கள் இல்லாததால் பூட்டப்பட்ட கழிப்பிடம், சுகாதாரமற்ற குடிநீர்! உணவு, மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் இரயில்வே துளியும் பொருப்பெடுத்து செய்து தராத நிலையில் சொந்த செலவிலேயே பராமரித்துக்கொண்டும் சிலநேரம் பட்டினியுடனும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பொதுவாக, அந்தந்த செட் வேலையில் கூடுதலாக சரக்கு ஏற்றி இறக்க தொழிலாளர் பற்றாக்குறை வரும் நேரங்களில் அடுத்தசெட் தொழிலாளர்களை கூப்பிட்டு 4 அல்லது 5 பேர்களுக்கு வேலை கொடுப்பதும், அந்த 4 பேர் வேலையை அதே செட்டை சேர்ந்த கூடுதல் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வதும், கிடைக்கும் சொற்ப கூலியை பிரித்துக்கொள்வதும் வழக்கம். 200, 300 ரூபாய் கிடைப்பதே அரிது. காலை 5 மணிக்கே வீட்டைவிட்டு குட்செட்டிற்கு வந்து மாலை வரை வண்டிகளுக்காக காத்திருந்து பணிசெய்கின்றனர். 50கிலோ மூட்டைசுமந்து, அட்டிபோட்டு பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு உரத்தின் கெமிக்கல் கசிந்து முதுகு, தோல் பட்டைகள் புன்னாகிவிடும். சூடாக அடுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள், குட்ஸ்வேகன் அனலை கக்கும், தோலையே கருக்கி, ஆஸ்மா, நுரையீரல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர் பலர். ஊக்கு போடக்கூடாது என நிபந்தனையால் கைகள் கொப்பளித்து ரனமாகும்.. ஒருவேளை உணவுகூட உண்ணாமலேயே பலர் வீடுசெல்லும் துயரம்! பல நேரங்களில் குழந்தைகளிடமோ குடும்பத்தினர்களுடனோ பேசக்கூட முடியாது. உறவினர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்கவும் முடியாது.

படிக்க:
♦ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல !
♦ புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் !

கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஓரிருநாள் வேலையை வைத்து எப்படி வாழ்வது? வாடகை கொடுப்பதா? குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற இயலுமா?. ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிசெய்வதால் (கிளியரிங் அண்ட் பார்வேர்டிங் கான்ராக்டர்கள்) பணிப்பாதுகாப்பு இல்லாத அவலத்தை உணர்ந்த தொழிலாளர்கள், தொழிற்சங்க வழிகாட்டுதல்படி 10 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு தாங்களே கூலியை பிடித்து PF கணக்கு துவங்கி பராமரித்து வரும் நிலையில் மத்திய அரசு கூறும் PF கணக்குப்படி 12% விகிதத்தில் 2% விகிதம் கட்டவேண்டாம் என்ற கண்துடைப்பு நடவடிக்கையால் கான்ராக்ட் முதலாளிகளுக்குத்தான் லாபமே தவிர தொழிளாளர்களுக்கு பலனில்லை !. எனவே..,

மத்திய, மாநில அரசுகளே, தொழிலாளர் நிவாரணத்தொகையாக மாதத்திற்கு ரூ.6000/- வழங்கு! குட்செட் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையை எடு! – பணிபாதுகாப்பிற்காக தொழிளாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கு! இரயில்வேதுறையே, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடு! கழிப்பிடத்தை சுகாதாரமாக பராமரிக்கபணியாளர்களை நியமி!

சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச்சங்கம், திருச்சி குட்செட்(TPJY)

தகவல் :
சுமைப் பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம்,
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க