குற்றம் ஏதுமிழைக்காத நிராயுதபாணியான 47 வயது கருப்பினத்தவர் ஆண்ட்ரே மாரிஸ் ஹில், கொலம்பஸ் போலிஸ் அதிகாரி ஆடம் கோய்-ஆல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஹில்லை பார்த்த 10 வினாடிக்குள் இந்த கொலை நடந்திருப்பதை போலீசின் உடையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா காட்டியிருக்கிறது. ஆடம் கோயை போலீஸ் நிர்வாகம் தற்போது தற்காலிக விடுப்பில் அனுப்பியுள்ளது.

கொலம்பஸில் உள்ள கிரான்ப்ரூக் (Cranbrook) அருகே காருக்குள் இருக்கும் ஒருவர் தொடர்ந்து கார் விளக்கை அணைத்தும் எரிய விட்டும் கொண்டிருப்பதாக அதிகாலை 1:30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது என்று போலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து அங்கு சென்ற போலிஸ் அதிகாரிகள் வாகன நிறுத்துமிடம் வரை நடந்து செல்வதையும், அங்கிருந்த ஆண்ட்ரே ஹில் மீது வெளிச்சம் பாய்ச்சுவதையும், குற்றவாளி கோயின் உடல் கேமராவிலிருந்து கிடைத்த காட்சிகள் காட்டுகின்றன.

படிக்க :
♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !
♦ 21 வயது வெள்ளை நிறவெறியனால் 9 கருப்பின மக்கள் படுகொலை

ஆண்ட்ரே ஹில்லை திரும்பி நிற்கச் சொல்லி கோய் மிரட்டியவுடன், ஹில் திரும்பி தனது செல்போனைக் கையில் பிடித்துக் கொண்டதையும், போலீசை நோக்கி ஹில் சில அடிகள் எடுத்து வைத்ததையும் கேமரா பதிவு காட்டுகிறது. ஹில்லை சுட்ட பிறகு தான் தன்னுடைய உடல் கேமிராவை கோய் செயல்படுத்தியிருக்கிறார். ஆனால் கேமராவை செயல்படுத்தத் துவங்கும் முன்னரே நடந்த நிகழ்வுகளின் 1 நிமிட காட்சிகளை ஒலியில்லாமல் பதிந்து வைத்திருக்கும் வகையில் அந்த கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சுட்டப் பிறகு, மற்ற அதிகாரியிடம் மருத்துவர் வருகிறாரா என்று கேட்டுக்கொண்டே ஹில்லின் அருகே சென்று அவரது உடலை திருப்பிப் போட்டிருக்கிறார். அதிகாரபூர்வமான கொலம்பஸ் போலிஸ் அறிக்கையோ, ”ஹில்லை எதிர்கொண்ட அதிகாரி துப்பாக்கியால் அவரை சுட்டார். ஹில் உயிர் பிழைக்கவில்லை” என்று சம்பிரதாயமாக முடித்துக்கொண்டது.

“முதலில், அந்த இடத்தில் இருந்த அதிகாரிகள் யாரும் திரு. ஹில்லுக்கு மருத்துவ உதவிகளை அளிக்கவில்லை. காயங்களிலிருந்து இரத்தத்தை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மீளுயிர்ப்புச் சுவாசமளிக்க (CPR) எந்த முயற்சியும் இல்லை. ‘கவலை வேண்டாம், மருத்துவர்கள் வருகிறார்கள்’ என்பது போன்ற ஒரு ஆறுதல் வார்த்தையும் இல்ல.” என்று கொலம்பஸ் மேயர் ஆண்ட்ரூ ஜின்தர் இச்சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் போலீசின் இந்த படுகொலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் சட்ட ஒழுங்கை பாதுகாக்கிறேன் என்று பாட்டி வீட்டிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த 23 வயது கருப்பின இளைஞன் கேசி குட்ஸன் ஜூனியரை, துணை ஷெரிஃப் ஜேசன் மீட் பலமுறை சுட்டுப்படுகொலை செய்தார். கேசி குட்ஸன் தேடப்பட்ட குற்றவாளியும் அல்ல, ஜேசன் மீட் அவரைத் தேடியும் செல்லவில்லை. வேறு யாரோ ஒரு நபரை தேடிச் செல்லும்போது எதேச்சையாக குறிக்கிட்ட கேசி குட்ஸனை மீட் படுகொலை செய்திருக்கிறார் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

“ஒவ்வொரு முறையும் ஒரு வெளிப்படையான அமைப்பு இங்கு இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அங்கு, ஆறுதலையும் சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் தொடங்கலாம் என்று நம்பிக்கையை நாங்கள் வளர்க்கத் தொடங்குகிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது இரண்டு அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடுகளால் மீண்டும் நாங்கள் பூஜ்ஜியத்திற்கேத் திரும்புகிறோம்” என்று கொலம்பஸ் நகர லீக்கின் (Columbus Urban League) தலைவரான ஸ்டெபானி ஹைட்டவர் (Stephanie Hightower) கூறினார்.

ஒவ்வொரு முறையும் கருப்பினத்தவர்களை அமெரிக்க போலிஸ் படுகொலை செய்யும் போது கூறப்படும் காரணம்: சட்டம் ஒழுங்கு. ஆனால் கொல்லப்பட்டவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவரிடம் ஆயுதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றூம்தான் படுகொலை நடந்த பிறகு அறிக்கை வரும். ஆனாலும் இத்தகைய அயோக்கியத்தனமான படுகொலைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவில் முசுலீம்கள், தலித்துகள் என்றாலே தேச விரோதிகள் என்பதாகவும், லவ் ஜிகாத் அல்லது நாடகக் காதல் தொடுப்பவர்களாகவும் சித்தரித்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பார்ப்பனியக் கும்பல் வளர்த்து  வைத்திருப்பது போலவே, அமெரிக்காவிலும் கறுப்பினத்தவர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்ற பார்வையை ஏற்றி வைத்திருக்கிறது வெள்ளை இனவெறி வகையிலான அமெரிக்க அரசுக் கட்டமைப்பு.

படிக்க :
♦ பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !
♦ உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !

சமூகக் கட்டமைப்பின் காரணமாக சமூக ரீதியில், பொருளாதார ரீதியிலும் பின் தங்கியுள்ள இந்தச் சமூகத்தினர்தான் பெரும்பாலான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலாளித்துவக் கொடுங்கோன்மையால் நேரடியாகப் பாதிக்கப்படக் கூடியவர்களும் இவர்கள்தான்.

அமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்துக் கொள்ளவும், உழைக்கும் வெள்ளையினத்தவர்களையும், தலித்தல்லாத பிற உழைக்கும் சாதியினரை வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் சுரண்டப்படுபவர்களை பிரித்தாளவும் ஆளும் வர்க்கங்களுக்கு நன்கு பயன்படுகின்றன.

ஆளும்வர்க்கங்கள் நம்மைச் சுரண்ட சாதிவெறி, நிறவெறி ஆகியவற்றைப் பயன்படுத்துவதை அம்பலப்படுத்துவதே நம்முன் உள்ள முக்கியக் கடமை!


சுரேஷ்
நன்றி :
NPR

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க