தேசிய கல்விக் கொள்கை – 2020 குறித்து பேரா. அனில் சத்கோபால் எழுதிய கட்டுரை பிரண்ட்லைன் பத்திரிக்கையில் ஆகஸ்ட் 28, 2020 ல் வெளிவந்தது. இக்கல்விக் கொள்கையின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை தமிழ் வாசகர்களுக்குப் படைக்கும் நோக்கில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக வினவு வாசகர்களுக்கு இங்கே அளிக்கிறோம் !

0o0o0o0o0

ந்தியாவின் இயற்கை மற்றும் மனித வளங்களை கொள்ளையடிக்க இந்து ராஷ்டிர சக்திகளின் முதுகில்  சவாரி செய்யும் புதிய தாராளமய முதலாளித்துவம் தனது  நெருக்கடியை தீர்க்க வேண்டிய தேவையின் நோக்கத்திலிருந்து இணையவழிக் கல்வியை முன்தள்ளுகிறது.

ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை தேசிய கல்வி கொள்கை (NEP) 2020-க்கு ஒப்புதல் அளித்தது இந்த கொள்கைக்கு பின்னாலுள்ள தத்துவார்த்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

மே 1 அன்று, NEP 2020 மறுபதிப்பீடு செய்த பிரதமர் நரேந்திர மோடி, இணையவழிக் கல்வி, இந்த கல்விக் கொள்கையின் மையமாக இருக்கும் என்று அறிவித்தார். மேலும் இணையவழிக் கல்வி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியா கல்வியை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் என்றார். இவை இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன.  முதலாவதாக, இணையவழிக் கல்வி முறை, கல்வியின் தரத்தை அதிகரிக்கும்  என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? மாறாக, ஆசிரியருடனான  நேரடித்  தொடர்பு மற்றும்  மாணவர்களுக்கிடையேயான தொடர்பு இல்லாமல் கற்பது கற்றல் மட்டத்தை தொடர்ந்து மோசமடையச் செய்கின்ற என்பதற்கு சான்றுகள் ஏராளமாக உள்ளன.

படிக்க :
♦ தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்
♦ ஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி

இரண்டாவதாக, இந்த உலகத்தரம் என்பது என்ன?, யார் இதை நிர்ணயிக்கிறார்கள்? இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் உலகப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதை கேள்விக்கிடமில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த தரவரிசை பட்டியலை தனியார் நிறுவனங்களே வெளியிடப்படுகின்றன. இதற்கான அளவுருக்கள்(parameters) சந்தை அடிப்படைவாதத்திலிருந்தே உருவாகின்றன. இந்த அளவுருக்கள் கல்வியின் சமூக இலக்கு , சமூக மாற்றத்திற்கு அதனுடைய பங்கு மற்றும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் ஆகியவற்றோடு தொடர்பில்லாதவை.

இந்த பின்னணியில், இந்தியாவின் கல்வி மட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்துகிறோம் என்ற பிரதமரின் அறைகூவல்   இப்போது இருக்கும் பிரச்சனைகளை ஒப்பிட்டால்   அடைய  வேண்டிய இலக்குகள் எல்லாம் வெகுதொலைவில் உள்ளது. NEP இந்த பிரச்சனைகளை பற்றியெல்லாம் கேள்வி எழுப்பவில்லை; அதற்கு பதிலாக உலகத் தரம் வாய்ந்த  கல்வியை  விமர்சனமின்றி ஊக்குவிக்கிறது. கல்வியில் உடனடியாக இணைய தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டிய  அவசியம் ஏன் வந்தது?

பிரதமரின் அறிவிப்பு வெளியான மறுநாளே, கூகிளின் தலைமை செயல் அதிகாரி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெரியளவில் முதலீட்டு செய்யப் போவதாக அறிவித்தார்.  இந்த அறிவிப்பு, அடுத்த நான்கு ஆண்டுகளில் இணையவழிக் கல்வி வர்த்தகத்தின் இந்திய சந்தை மதிப்பானது 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என ஒரு தனியார் நிறுவனம் (marketing agency) செய்தி வெளியிட்ட பிறகு நடந்தது. இதன் மூலம் இணையவழிக் கல்விக்கு கொடுக்கப்படும் அழுத்தமானது கல்வியின் தேவையிலிருந்து உந்தப்பட்டதல்ல., மாறாக புதிய தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தீர்க்க வேண்டியதன் தேவையிலிருந்து உருவானது என்றுத் தெளிவாகத் தெரிகிறது.

சுயசார்பு இந்தியாவை (atmanirbhar Bharat) கட்டியமைப்பதற்கான  அழைப்பை ஜூன் 11 அன்று பிரதமர் விடுத்திருந்தார். ஜூன் 24 அன்று, மனிதவள மேம்பாட்டு (இப்போது கல்வி துறை) அமைச்சகம் உலக வங்கியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி ஆறு மாநிலங்களின் பள்ளி கல்வியில் தலையிட உலக வங்கியை இந்தியா அரசு அனுமதித்து, உலகிற்கே குருவாக தன்னைக் கருதிக் கொள்ளும் இந்தியா, தனது பள்ளிக் கல்வியை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்வது என்று தெரியாத போது சுயசார்பு இந்தியாவை எப்படி உருவாக்குவது? முக்கியமாக, உலக வங்கியின் மாவட்ட ஆரம்ப கல்வித் திட்டம் (DPEP) (1993-2002) இந்தியாவின் பாதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அரசு ஆரம்பக் கல்வியை பலவீனமாக்கியது. அதன் விளைவாக தனியார் பள்ளிகளுக்கு ஒரு பரந்த சந்தையை உருவாக்கியது. இது தான் உலக வங்கியின் முக்கிய நோக்கமும் கூட. இந்த வரலாற்றை இந்திய அரசு புறக்கணித்துள்ளது.

2001-02 ஆம் ஆண்டில், கல்விக்கு உலகவங்கி கொடுத்த கடனின் அளவு கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள்  செய்த செலவினங்களில் வெறும் 1.38 சதவீதம் தான். உலக வங்கியின் இந்த இரண்டாவது தலையீடு சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் வாயிலாக அமைந்தது. இத்திட்டம் 2002 லிருந்து இன்றுவரை, பல அடுக்கு  பள்ளி முறை (multilayered layered school system) உருவாக காரணமாக அமைந்தது. இந்த முறையால் பாகுபாடுகள் தான் அதிகமாயின. இதனால் 2010-க்குள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை (I std to VIII std) கொடுக்க வேண்டுமென்ற SSA-ன் இலக்கை அடையவில்லை.

மூன்றாவது தடவையாக கல்வியில் தலையிட உலக வங்கியை ஏன் அழைக்க வேண்டும்? இந்தியாவில் போதிய  மூலாதரங்கள் இல்லாத காரணத்தினாலா?  DPEP ஐ போலவே, STARS (strengthening teaching-learning and results for States)திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்படும் கடனின் அளவு கல்விக்காக மத்திய மாநில அரசு செய்யும் மொத்த செலவுகளில் வெறும் 1.4 சதவீதம் மட்டுமே. உலக வங்கியை அனுமதிப்பது என்ற இந்த முடிவு அரச சார்பற்ற தனியார் நிறுவனங்களின் நலங்கள் (அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கல்வி-தொழில்நுட்ப நிறுவனங்கள்) மற்றும் 20 கோடி குழந்தைகளைக் கொண்ட தொடக்கக் கல்வி சந்தை ஆகியவற்றுக்காக புதிய தாராளமய முதலாளித்துவ சக்திகளின் செயலூக்கத்தினால் உருவானதாகும்.

ஜூலை 6-ம் தேதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்து மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், கொரானா பாதிப்பைக் கூட கணக்கில் கொள்ளாமல், இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளை இணையவழியில் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது. இதற்கு முரண்பாடாக, சில வாரங்களுக்கு முன்னர், மாநில அரசாங்கங்களே உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கலாம் என்றும் UGC கூறியிருந்தது.

தேர்வுகள் நடத்துவதற்கு எதிராக முடிவெடுத்திருந்த ஏழு மாநிலங்களின் முடிவுகளை UGC நிராகரித்துள்ளது.   அரசியலைப்பு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்பின் மீது மத்திய அரசாங்கம் நடத்தியுள்ள இதுபோன்ற தாக்குதல்கள் தற்போது NEP ன் ஒருங்கிணைந்த சிறப்புத் தன்மையாக உள்ளது. இணையவழித் தேர்வுகள் என்ற மிகப்பெரிய சந்தைக்கான கல்வி-தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபவெறியானது மத்திய அரசாங்கத்தின் புதிய தாராளமய மூலதனத்திற்கு தரும் ஆதரவோடு பொருந்திபோகிறது.

மேற்கூறிய மூன்று எடுத்துகாட்டுகள் கல்வியில் மத்திய அரசின் கண்ணோட்டத்தை வரையறுக்கும் புதிய தாராளமயத்துடனான ஒருங்கிணைப்புகளை வெளிப்படுத்துகின்றன.  NEP-ஐ மேலும் ஆராய்ந்தால் RSS-BJP ஆட்சியின் இந்து ராஷ்டிராவிற்கான கருத்தியல் சார்பு கூடுதலாகத் தெரியவரும்.

படிக்க :
♦ தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !
♦ உ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் !

பார்ப்பனிய மேலாதிக்கம்

“இந்தியாவின் அறிவு மற்றும் சிந்தனை முறையின் வளமையான பாரம்பரியம்” என்ற NEP-ன் முழுமையற்ற மற்றும் தவறான வடிவமைப்பு அதன் வரலாற்று முன்முடிவுகளை தான் வெளிப்படுத்துகிறது. இது பார்ப்பனிய மரபுக்கும் அதன் அறிவு மூலத்திற்கும் போதுமான கவனம் கொடுத்திருக்கும் அதே வேளையில் அறிவுத் தளத்தில் பார்பனியமல்லாத பிரிவின் பங்களிப்பு மற்றும் புத்தர் மற்றும் மகாவீரரால் செய்யப்பட்ட தர்க்கம் மற்றும் விவாத முறைகள், அவர்கள் சமூக அடுக்கு மற்றும் படிநிலை சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்கிய மரபு ஆகியற்றை புறக்கணித்துள்ளது.

கூர்ந்து கவனித்தல் (observation), அனுபவவாதம் (empiricism) மற்றும் நிபந்தனை அனுமானம் ஆகியவற்றில் வேரூன்றிய தத்துவங்களான சார்வாகம் அல்லது லோகாயதம் போன்ற பொறுள்முதல்வாத தத்துவ நூல்களை NEP தனது வரலாற்று நினைவகத்திலிருந்து முற்றிலும் அழித்துள்ளது. 2019-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு எதிர்ப்பு வரும் வரை இந்தியாவின் மரபின் ஒரு வளமான பகுதியான தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்களுக்கு இடமளிக்க NEP-ன் பார்ப்பனிய கண்ணோட்டம் தவறிவிட்டது. இதுபோன்ற முன்முடிவுகள் காரணமாக கி.பி. முதல்   நூற்றாண்டில் கேரளாவின் கடலோரப் பகுதியில் குடியேறி துணைக் கண்டத்தின் சமூக-கலாச்சார நிலப்பரப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ள சிரிய- கிறிஸ்தவர்களின் பங்களிப்புகளுக்கான சரியான இடத்தையும் NEP கொடுக்கவில்லை.

மேலும் மத்திய காலத்தைப் பற்றி, அதாவது இஸ்லாமிய மரபுகள் இந்து மரபுகளுடன் கலந்து உருவான சூபிசம் மற்றும் பல்வேறு அறிவியல் துறைகள், நிர்வாகம் , வர்த்தகம், இலக்கியம், இசை மற்றும் கலையில் மத்திய காலத்தின் பங்களிப்பை NEP ஓரங்கட்டி உள்ளது. இதேபோல், மத்திய மற்றும் கிழக்கு இந்தியா பழங்குடி மக்களின் அறிவுத் துறை சார்ந்த பங்களிப்பு , வடகிழக்கு மாநில மக்களின் விவசாயம், வனவியல் மற்றும் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் முறைகள் ஆகியவை “பிரதான” இந்திய பாரம்பரியம் என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த கோணலானப் பார்வையே  21-ம் நூற்றாண்டு இந்திய இளைஞர்களுக்கான கல்வித் திட்டத்தை தவறாக வழிநடத்துகிறது.

(தொடரும்)

கட்டுரையாளர் : அனில் சத்கோபால்

தமிழாக்கம் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
நன்றி : பிரண்ட்லைன்

குறிப்பு :
அனில் சத்கோபால் –  கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மற்றும் டெல்லி பல்கலைக்கழக கல்வித் துறையின் முன்னாள் டீன்.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – பொதுக்கல்வியை வலியுறுத்தும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கல்வியாளர்களின் அமைப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க