முகத்தில் பொதுவாகப் பேராசிரியர்களையும், கௌரவ விரிவுரையாளர்களையும் பேராசிரியர்கள் என்ற ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் அது அப்படி இல்லை என்று தராசு மேல் கல் எரிகிறது நடைமுறை எதார்த்தம்.

அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களது (Guest lectures) வாழ்க்கை அவலத்தின் முழுப்பரிமாணத்தையும் அறிந்துகொள்ள வேண்டியதும் அவர்களது உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் அவர்களுடன் இணைந்து போராட வேண்டியதும் நம் அனைவரின் கடமையாக உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக (DPI) வளாகத்தில் பிப்ரவரி 7 முதல் 9 ம் தேதி வரை “சம வேலைக்கு சம ஊதியம்” உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் DPI வளாகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரிகளில் 4,084 கௌரவ விரிவுரையாளர்கள் 10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனர்.

படிக்க :

அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலை !

தங்களுக்குப் பிற மாநில அரசு ஊழியர்களைப் போல ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும் எனக் கூறும் அவர்கள், பணிப்பாதுகாப்பு (Job safety) உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு உயர்கல்வித் துறையில் நிரப்பப்படாமல் இருக்கும் அதிகப்படியான காலி பணியிடங்களுக்கான “பேராசிரியர்கள்” பதவிகளுக்கு UGC வழிகாட்டுதலின்படியே   M.A., M.Phil முடித்த பட்டதாரிகளையும் SET மற்றும் NET  தேர்வை முடித்தவர்களையும் ஜீன் முதல் ஏப்ரல் வரை இருக்கும் ஒரு கல்வி ஆண்டிற்கு தொகுப்பூதிய அடிப்படையில் உயர் கல்வித்துறையின் கீழ் கௌரவ விரிவுரையாளர்கள் (Guest lecturer) நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் பல நிரந்தரப் பேராசிரியர்களைவிட அதிகம் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மிகவும் சொற்பம்தான். பேராசிரியர்களின் சம்பளத்தில் பாதியளவுகூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை. முதலில் வகுப்புகள் எடுப்பதற்கு மட்டுமே இவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களுக்கான வேலை என்பது மாணவர்களுக்கு வகுப்புகள்  எடுப்பதோடு நின்றுவிடுவதில்லை. அகமதிப்பீடு போடுவது, பதிவேடு சமர்ப்பிப்பது, தேர்வுப் பணி, தேசியத் தர நிர்ணய குழுவுடைய வேலைகள் எனப் பேராசிரியர்களுக்கு நிகராவும், அவர்களைவிட அதிகமாகவும் வேலை செய்கின்றனர்.

மாலை நேரக் கல்லூரியே இவர்களை நம்பித்தான் இயங்குகிறது. கல்லூரியின் மொத்த பாடச்சுமையையும் இவர்கள்தான் சுமக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. இவ்விரிவுரையாளர்களின் தியாகத்தால்தான் பல அரசுக் கல்லூரிகளே இயங்கிக் கொண்டிருக்கின்றன. உயர் கல்வித்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கான காரணம் இக்கௌரவ விரிவுரையாளர்களின் உழைப்பே என்றால் அது மிகையல்ல. இவர்கள் இல்லையென்றால், ஆயிரக்கணக்கான அரசுக் கல்லூரி மாணவர்களின் பட்டப்படிப்பு என்பது பகல் கனவே.

போராடும் ஆசிரியர்களைச் சந்திக்கும் தோழர் பாலகிருஷ்ணன் மற்றும் வன்னியரசு

இப்பொழுது இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் ரூ. 20,000-மும் கூட நான்கு வருடங்களுக்கு முன்பு போராடிப் பெற்றதுதான். அதுவும் சரியான தேதிக்கு சம்பளம் வந்து சேர்வது கிடையாது. அதற்கு முன்பு ரூ. 10000, ரூ. 8000 என்ற அடிமட்டக் கூலி வேலைக்கான சம்பளம் தான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும் நிரந்தரம் கிடையாது. விடுமுறை எடுத்தால் பிடிக்கப்படும். விடுமுறை என்பதே இவர்களுக்கு அரிது தான்.

பேராசிரியரை எதிர்த்துப் பேசிவிட்டாலோ அல்லது பேராசிரியர் சொல்லும் வேலைகளை செய்யாவிட்டாலோ அடுத்தக் கல்வியாண்டில் இவர்களைப் பணிக்குத் தேர்வுசெய்ய மாட்டார்கள். பேராசிரியர் தகுதிக்கான அனைத்து தகுதியும் இவர்களிடமிருந்தும்  சில பேராசிரியர்கள் இவர்களை ஏளனமாக அடிமையைப் போல் நடத்துகின்றனர்.

சில பெண் கௌரவ விரிவுரையாளர்களிடம் பாலியல் சீண்டலையும் ஒருசில பேராசிரியர்கள் செய்துள்ளனர். இப்படி இழைக்கப்படும் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளவில்லையெனில் அடுத்த ஆண்டில் இவர்களுக்கு வேலை கிடையாது இப்படி வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் அதிகமான நபர்கள் உள்ளனர்.

அரசு சலுகைகளில் முக்கியமானதும் அவசியமானதும், பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை என்பதுதான். அதுகூட இதில் வழங்கப்படுவது கிடையாது. அதனால் வேலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பிறந்த பச்சிளம் குழந்தையைத் தொப்புள்கொடி காய்வதற்குள் கையில் சுமந்துகொண்டு வேலையை உறுதி செய்வதற்கு கையெழுத்திட அலுவலகம் செல்லும் அவலம் கூட அரங்கேறி வருகிறது. அப்படி அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால்  குறைந்தது பத்து பதினைந்து நாட்கள் தான். அதுவும் விடுமுறை நாட்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டு சம்பளம் பிடிக்கப்படும்.

பணிப் பாதுகாப்பு இல்லாததால் (job security) முறைப்படி ESI, PF கிடையாது. Pay slips கொடுத்தாவது கூட ஏதேனும் பர்சனல் லோன் போட்டுக்கொண்டு வாழ்க்கைக்கான தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கும். அதுவும் கொடுக்கப்படுவது இல்லாததால் லோனும் கிடைப்பதில்லை.

இவர்களின் வாழ்க்கையின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் வாங்கிய கடன், பிள்ளைகளின் படிப்புச் செலவு ஆகியவற்றை ஈடு செய்ய இந்த அடிமாட்டுக் கூலி போதாததால் அந்த நரகப் பணியை முடித்துக்கொண்டு  swiggy, Zomato, பெட்ரோல் பங்க் போன்ற உதிரி தொழில்களில் ஈடுபடுகின்றனர். அப்பொழுது தனது மாணவர்களிடமே வேலைபார்க்கும் அவலநிலைக்கு (swiggy, Zomato, மாணவர்களிடமே ஆடர் எடுப்பது, பெட்ரோல் போடுவது) தள்ளப்படுகின்றனர்.

கூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக்கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. ஆனால் இங்கே அந்த ஒட்டுண்ணி சுரண்டலை அரசே நேரடியாக அரங்கேற்றும் அருவருக்கத்தக்க இழிசெயல் அரங்கேறுகிறது.

படிக்க :

எழுத்தும் எழுத்து ஜனநாயகமும் || மு. இக்பால் அகமது

தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !

இந்திய கல்வித்துறையில் தாராளமயக்கொள்கை புகுத்தப்பட்ட பிறகு தனியார் கல்வி நிறுவன கும்பல்களுக்கு கல்வியைக் கடைச்சரக்காக காசு உள்ளவன் தான் வாங்க முடியும் என்ற கேடுகெட்ட நிலைக்கு கல்வித்துறையைத் தள்ளியுள்ளது இந்திய அரசு. தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி அரசுக் கல்லூரி மாணவர்களை தள்ளுவதற்கான ஒரு முன்னெடுப்புதான் உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கிவரும் நிதியையும் குறைத்தது, அரசுக் கல்லூரிகளைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்வது.

அதன் ஒரு பகுதிதான் நிரந்தர பேராசிரியர்களை நியமித்து அரசுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு பதிலாக கௌரவ விரிவுரையாளர்கள் என்ற கான்ராக்ட் கொத்தடிமை முறையை உருவாக்கினர். இதன்மூலம் அரசுக் கல்லூரிகளைத் படிப்படியாகச் செல்லரிக்கச் செய்வதே அரசின் திட்டமாகும். கௌரவ விரிவுரையாளர்களும் தொடக்கத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்கள் அவ்வப்போது சிறு சிறு முன்னேற்றங்களை வாழ்வில் ஏற்படுத்தினாலும், நாம் முதன்மையாகப் போராட வேண்டியது நம்மை இந்த இழிநிலைக்குத் தள்ளிய தனியார்மயக் கொள்கையை எதிர்த்துதான். மேலும் ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் தாராளமயக் கொள்கையின் ஒரு அங்கமான புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் அப்போராட்டத்தில் பேராசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்களின் பங்களிப்போடு அனைத்து ஜனநாயக சக்தி புரட்சிகர அமைப்புகளை இணைத்துக்கொண்டு இந்த தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கையை எதிர்க்கும் ஒரு போராட்டக்களத்தை கட்டியமைக்க வேண்டும்.

குமாரசாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க