அரசு நிதி உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து மூட்டா, ஜாக் – ஆக்ட் கூட்டமைப்பு சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (ஆகஸ்ட் 31 அன்று) மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள ராஜா முத்தையா மன்றம் டாக்டர் தங்க ராஜ் சாலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கோரிக்கை பேரணி மூட்டா தலைவர் ஏ.டி.செந்தாமரை கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
பேரணியில் கலந்து கொண்ட மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் படி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5, தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையால் 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அரசாணையைச் செயல்படுத்துவதற்கு உரிய செயல்முறைகளும் ஜூன் 2021-இல் கல்லூரிக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்டது.
அதனால், அரசாணை எண் 5-ன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கலைக் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்கப்பட்டு அதற்குரிய ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 5- இன் படி பணிமேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில், இன்றுவரை அதற்குரிய நிலுவைத் தொகை மட்டுமல்ல, அடிப்படை ஊதியம் கூட வழங்கப்படாமல், எந்தவித தடை ஆணையும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எட்டு மண்டலங்களில் சென்னை, தர்மபுரி, வேலூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மண்டலங்களில் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் பணிமேம்பாட்டிற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
படிக்க: சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்
மேலும், “ஏதோ ஒரு சில காரணங்களால் கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உயர் கல்வித்துறை அலுவலகத்திலும், கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை முறையிட்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்-ஆக்ட், மூட்டா மற்றும் ஏயூடி) ஆனது 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிடக் கோரி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களில் முறையீடு, கல்லூரிகளில் காத்திருப்புப் போராட்டம், மாநகரங்களில் பேரணி, சாலை மறியல் என 25 தொடர் போராட்டங்களை இதுவரை நடத்தி உள்ளது.
ஆனால் இந்த பிரச்சனையில் சிறு முடிவு கூட வரவில்லை. அதன் தொடர்ச்சியாக 26-ஆவது போராட்டமாக ஆகஸ்ட் 31 அன்று அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்கும் மிகப் பிரம்மாண்டமான பேரணியை நடத்துகின்றோம்.
மாநிலம் தழுவிய மாபெரும் கல்லூரி பேராசிரியர்களின் நீதி கேட்புக் கோரிக்கைப் பேரணி நடைபெற உள்ளது. அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு உரிமையான, நியாயமான, சட்டப்படியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்நிலையை மாற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்.
பேரணியில் பேராசிரியர்கள், ஏயுடி தலைவர் ஜெ.காந்தி ராஜ், செயலாளர் எம்.கிருஷ்ணராஜ் மற்றும் பொருளாளர் ஏ.சேவியர் செல்வகுமார், மூட்டா பொருளாளர் ஆர்.ராஜா ஜெயசேகர் உள்ளிட்டு 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பணிமேம்பாடு ஆணை வழங்கப்பட்ட பின்னரும் கூட அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களை வஞ்சிப்பது முற்றிலும் நியாயமற்றது. எனவே, சட்டப்படி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் சேர்த்து உடனடியாக வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ்
நன்றி: தீக்கதிர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram