05.08.2024

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 295 கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம்!
அதிகார வர்க்கம், தனியார்மயம் இணைந்த மோசடி சாம்ராஜ்யம்!

னைவருக்கும் வணக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 400 பொறியியல் கல்லூரிகளில் 295-இல் போலி பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்து புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. இதில் பெரம்பலூரில் அமைந்துள்ள தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிகள் 34 போலிப் பேராசிரியர்களை கணக்கு காட்டி மோசடி செய்துள்ளதாகவும் இந்தக் கல்லூரி எம்.எல்.ஏ கதிரவன் குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு அவர்களின்  குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான டி.ஜே பொறியியல் கல்லூரி என வரிசையாக அந்த புள்ளி விவரங்கள் நீண்டு கொண்டே போகிறது.

இது போக டாக்டர்.முரளி பாபு, மாரிச்சாமி போன்றோர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவர்கள்  அதிக கல்லூரிகளில் பணியாற்றும் போலிப் பேராசிரியர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளனர். இதேபோல் வெங்கடேசன் என்பவர் 10 கல்லூரியில் போலியாக கணக்கு காட்டப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிர் நடத்தக்கூடிய பொறியியல் கல்லூரிகள், அதிமுக சார்பாக சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  வேட்பாளர் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான JNN  பொறியியல் கல்லூரிகள், அதிமுக ஆதரவாளர் கனகராஜுக்கு சொந்தமான ஜெயா பொறியியல் கல்லூரிகள், பிஜேபியின் அனுஷாவிற்கு சொந்தமான கோயம்புத்தூரை மையமாக கொண்டு இயங்கும் பார்க் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் செஞ்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கணேஷ் என்பவருக்கு சொந்தமான ஏ.ஆர்.எம் பொறியியல் கல்லூரிகள், திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு சொந்தமான கற்பக விநாயகர் பொறியியல் கல்லூரிகள், திமுகவின் வேளாண்துறை அமைச்சராக இருக்கக்கூடிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தக்கூடிய எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரிகள், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவரின் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர்களுக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிகள் – இப்படி அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து கல்லூரிகளும் போலி பேராசிரியர்களை நியமித்து பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

போலிப் பேராசிரியர்கள் நியமிப்பதன் மூலம் இவர்கள் பெருமளவு ஆதாயம் அடைகிறார்கள். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விதிகளின்படி ஒரு கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளின் அடிப்படையில் எவ்வளவு பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பது பற்றிய விதிகள் உள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்காமல் மிகக்குறைந்த அளவே பேராசிரியர்களையும் ஊழியர்களையும் நியமிக்கிறார்கள். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஆய்வின் போது எல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டது போல் போலியாக கணக்கு காண்பிக்கிறார்கள். இதை அந்த தொழில்நுட்ப கவுன்சிலும் பணம், பொருள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஒரு இயல்பாக மாறிவிட்டது.

மேலும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும் அதனுடன் இணைந்து பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்துகின்றனர். பாலிடெக்னிக்கில் பணிபுரிபவர்களை பொறியியல் கல்லூரியில் கணக்கு காண்பிப்பதும் நடக்கிறது. இன்னும் பல கல்லூரிகளில் தங்களிடம் வேலை செய்துவிட்டு வெளியேறி போன பேராசிரியர்களின் சான்றிதழ்களை வைத்தே மாதம் தோறும் சம்பளம் போட்டு அவர்களே எடுத்துக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் சில பேராசிரியர்களே  பல வகுப்புகளை நடத்தும் நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர். இது மாணவர்களுக்கு தரமான பாடங்களை நடத்துவதில் அங்கு வேலை செய்யும் பேராசிரியர்களையுமே பெரிய அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடியது.

தனியார்மயம் என்றால் தகுதி தரம் என்று இன்னும் நம் மத்தியில் பேசக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை இந்த பொறியியல் கல்லூரிகளின் போலி பேராசிரியர்கள் மோசடி  உடைத்து சுக்குநூறாக்கியுள்ளது. தனியார்மயம் என்றாலே ஊழல் முறைகேடு மோசடி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த ஊழல் முறைகேடு மோசடிகளில் கட்சி வேறுபாடு இன்றி பலரும் இணைந்திருப்பது என்பது தனியார்மயத்தை வளர்த்தெடுத்ததின் விளைவுதான். அதிகார வர்க்கம் அரசியல்வாதிகள் என அனைவரும் இதில் கைகோர்த்து பின்னிப் பிணைந்துள்ளனர். இப்போது ஆய்வு குழு அமைத்து விசாரணை செய்து கொண்டிருப்பதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.

இவர்கள் எந்த சட்டதின் கீழும் தண்டிக்கப் படுவதில்லை. மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் இவர்களை தண்டிக்க முடியும். தரமான கல்வி வேண்டும் என்றால் தனியார்மயத்திற்கு எதிரான உறுதியான போராட்டங்களைக் கட்டியமைப்பதே தீர்வு.


தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க